செப் 18, 2025 12:00 AM
செப் 18, 2025 12:00 AM

இந்தியாவின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான தோல் தொழிநுட்பம், இன்று நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து வளர்ந்து வருகிறது.
காலணிகள், உடைகள், கார்கள், பர்னிச்சர்கள் உள்ளிட்ட பல துறைகளில் தோலின் பயன்பாடு அதிகமாக உள்ளதால் இந்த துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு செயல்படும் இந்த துறை, தொழில் மற்றும் ஆராய்ச்சி விரும்பும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இளநிலை பாடத்திட்டம்
பி.இ/பி.டெக்., தோல் தொழில்நுட்பம் என்பது நான்கு ஆண்டுகள் கொண்ட பொறியியல் படிப்பு. இதில் மாணவர்கள், தோலின் வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகள், ப்ரீ-டானிங் மற்றும் டானிங் செயல்முறை, தோல் நிறமூட்டும் மற்றும் பூச்சு முறைகள், தோல் சோதனை மற்றும் தரம்வழிகாட்டல், சுற்றுச்சூழல் மேலாண்மை போன்ற பாடங்களை கற்கின்றனர்.
தகுதி
இப்படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
ஜே.இ.இ., மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பல மாநிலங்களில் பள்ளி பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான கவுன்சிலிங் முறையிலும் சேர்க்கை நடைபெறுகிறது.
முதுநிலை பாடத்திட்டம்
இரண்டு ஆண்டுகள் கொண்ட எம்.டெக் /எம்.இ., தோல் தொழில்நுட்ப படிப்பில், மேம்பட்ட தோல் பதப்படுத்துதல், பாலிமர் மற்றும் தோல் கலவைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் வடிவமைப்பு, தோல் தொழில்துறையின் சுற்றுச்சூழல் அம்சங்கள், தோல் உயிரி தொழில்நுட்பம், தரக் கட்டுப்பாடு மற்றும் சோதனை முறைகள் மற்றும் ஆராய்ச்சி முறை ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதனுடன் ஆய்வகம் சார்ந்த பயிற்சி, தொழில்துறை ஆய்வுகள் கட்டாயமாக இடம்பெறுகின்றன. பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி வாய்ப்புகளும் உள்ளது.
தகுதி
பி.இ.,/பி.டெக்., தோல் தொழில்நுட்பம் அல்லது அதன் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, மாணவர்கள் 'கேட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில மாநில / தனியார் பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாகவும் சேர்க்கை நடைபெறுகிறது.
வேலை வாய்ப்புகள்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், வடிவமைப்புத் துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. தோல் தொழில்நுட்பவியலாளர், செயல்முறை பொறியாளர், தரக் கட்டுப்பாட்டு அதிகாரி, தயாரிப்பு வடிவமைப்பாளர், தோல் பதனிடும் தொழிற்சாலை மேற்பார்வையாளர், காலணி வடிவமைப்பாளர், மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி போன்ற பணிப்பதவிகள் உள்ளன.
எதிர்கால வளர்ச்சி
தோல் தொழில்நுட்பத் துறை எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தோல் மாற்றுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கும் துறையாக உருவெடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தோல் பதனிடுதல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், மற்றும் பேஷன் தொழில்நுட்பம் சார்ந்த தோல் வடிவமைப்புகள் இந்த துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. தொழில் துவக்கம், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய வேலை வாய்ப்புகள் போன்றவை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளன.