/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
புதிய கலாசாரத்தை உருவாக்குகிறோம்!
/
புதிய கலாசாரத்தை உருவாக்குகிறோம்!
ஜன 31, 2025 12:00 AM
ஜன 31, 2025 12:00 AM

வெளிநாடுகளில் பெரும்பாலும் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களை இணைக்கும் வகையில் பிரத்யேக மையங்கள் செயல்படுகின்றன. அத்தகைய மையங்கள் தொழில்துறையின் நவீன 'புராஜெக்ட்'களை கல்வி நிறுவனங்களுடன் இணைக்க உறுதுணையாக உள்ளன.
சான்றிதழ் படிப்புகள்
வளர்ந்த நாடுகளைபோல், நம் நாட்டிலும் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. என்றபோதிலும், தொழில் நிறுவனங்களில் அனைத்து மாணவர்களுக்குமான இன்டர்ன்ஷிப் பயிற்சி கிடைப்பது நமக்கு சவாலாக உள்ளது. உதாரணமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்ந்த மாணவர்களுக்கு நேரடி பயிற்சிக்கு பதிலாக, 'ரிமோட் இன்டர்ன்ஷிப்' வாய்ப்புகளே அதிகம் கிடைக்கின்றன. அத்தகைய மாணவ, மாணவிகளை ஆன்லைன் வாயிலாக என்.பி.டி.இ.எல்., சிஸ்கோ, மைக்ரோசாப்ட் வழங்கும் குறுகியகால சான்றிதழ் படிப்புகளை படிக்கவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கம் அளிக்கவேண்டும்.
'புராஜெக்ட்' வழி கற்றல்
ஒவ்வொரு செமஸ்டர் காலத்திலும் 'புராஜெக்ட்' சார்ந்த கற்றலை மேம்படுத்தும் வகையில் வாய்ப்புகளை உருவாக்குத்தர வேண்டும். அதற்கு தேவையான ஆராய்ச்சி மையங்கள், சென்டர் ஆப் எக்ஸ்லென்ஸ், நவீன ஆய்வகங்களில் தேவையான உபகரணங்கள், சாப்ட்வேர், ஹார்டுவேர் ஆகியவற்றோடு அனுபவமிக்க வல்லுநர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் வாயிலாக திறன் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இவைகளோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் 'ஹேக்கத்தான்'களில் அதிகளவில் பங்குபெறும் வாய்ப்புகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது துறை சார்ந்த பயிற்சிகளை மட்டுமே வழங்காமல் இதர துறைகள் சார்ந்த அறிவையும் புகட்டுவது இன்றியமையாததாக உள்ளது. மேலும், பல்துறை இணைந்து செயல்பட்டு சமூகம் மற்றும் தொழில்துறை எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில் மாணவ, மாணவிகளை தயார்படுத்துவதும் இன்றைய கல்வி நிறுவனங்களின் கடமையாகும்.
புதிய கலாசாரம்
வேலைவாய்ப்பை பொறுத்தவரை, இன்டர்வியூ வாயிலாக தகுதியானவர்களை தேர்வு செய்த காலம் மாறிவருகிறது. ஹேக்கத்தான் மற்றும் போட்டிகளில் திறம்பட செயல்படும் மாணவ, மாணவியரையே பெரும்பாலான நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதால், திறன் வெகுவாக மேம்படுகின்றன. சவால்களுக்கு தீர்வு காண்பதே ஒரு சிறந்த கற்பித்தல் கற்றல் முறையாகும். கல்லூரி பாடத்திட்டத்திலேயே இவற்றை ஒருங்கிணைப்பதன் வாயிலாக சிறந்த வாய்ப்புகளை வழங்க முடியும். இவற்றை உணர்ந்து, தேவையான மாற்றங்களை எங்களது கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு புதிய கலாசாரத்தை உருவாக்கி வருகிறோம். அதனால் அதிக ஊதியத்தில் வேலை வாய்ப்பை எங்களது கல்லூரி மாணவ, மாணவியர் பெற்று வருகின்றனர்.
-பி.ஸ்ரீராம், தலைவர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
chairman@citchennai.net