மே 26, 2025 12:00 AM
மே 26, 2025 12:00 AM

பால் தொழில்நுட்பம் என்பது பால் மற்றும் அதன் பொருட்களின் ஆய்வை நிர்வகிக்கும் ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையாகும். இது உணவு புதுமை மற்றும் தயாரிப்புத் துறையின் ஒரு பகுதியாகும். இதில் பால் பொருள்களை கையாளுதல், தொகுத்தல், பரப்புதல் ஆகியவை அடங்கும்.
இன்ஜினியரிங், உணவு தொழில்நுட்பம், விலங்கு அறிவியல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து பால் சம்பந்தமான பொருள்களின் செயல்முறை, பாதுகாத்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியத் துறையாக வருகிறது. இந்த துறையில் இருக்கும் வல்லுநர்கள் பால் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பொருள்களான பாலாடைக்கட்டி, வெண்ணை, தயிர், நெய், கோவா ஆகியவற்றின் தரத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.
பால் தொழில்நுட்பப் படிப்பை தேர்வு செய்பவர்கள், அறிவியல் மற்றும் கணிதத்தை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும். பால் சம்பந்தப்பட்ட பொருள்களின் தேவை அதிகரித்து வருவதாலும். தொழில்நுட்பம் வளர்ந்து வருவதாலும் இந்தத் துறை நிறைய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
பட்டப்படிப்பு
பி.டெக்., / எம்.டெக்.,- பால் தொழில்நுட்பம், பிஎச்.டி., பி.எஸ்சி., / எம்.எஸ்சி., பால் அறிவியல் தொழில்நுட்பம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் ஆகியவை உள்ளன.
பாடத்திட்டம்
பால் வேதியியல், பால் நுண்ணுயிரியல், பால் பண்ணை பொறியியல், பால் பதப்படுத்துதல், பால் ஆலை மேலாண்மை, உணவு பேக்கேஜிங் மற்றும் சேமிப்பு, பால் ஊட்டச்சத்து, பால் தரக்கட்டுப்பாடு, பால் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய பாடங்கள் உள்ளன.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் - என்.டி.ஆர்.ஐ., இந்திய தொழில்நுட்ப நிறுவனம்- காரக்பூர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம்- ரூர்க்கி, கேரள வேளாண் பல்கலைக்கழகம், பால் அறிவியல் நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் -என்.ஐ.டி.,- சத்தீஸ்கர்.
தகுதி
10ம் மற்றும் 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியலை முக்கியப் பாடங்களாகக் கொண்டு குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
பால் ஆலை மேலாளர், தர உறுதி அதிகாரி, ஆராய்ச்சி விஞ்ஞானி, பால்வள ஆலோசகர், பால் சாதனப் பொறியாளர், உணவு பாதுகாப்பு அதிகாரி, பால் கொள்முதல் அலுவலர், பால்வள விரிவாக்க அலுவலர், பால் வேதியியலாளர் / நுண்ணுயிரியலாளர், தளவாடங்கள் மற்றும் விநியோக மேலாளர், பால்வள ஆலோசகர்கள், பால் உற்பத்தியாளர், பால் ஆலை மேற்பார்வையாளர், தயாரிப்பு மேம்பாட்டு அதிகாரி, பால் செயல்முறை பொறியாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றலாம்.
பால் நிறுவனங்கள், பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், பால் தொழில்நுட்ப நிறுவனங்கள், விநியோக நிறுவனங்கள், ஐஸ்கிரீம் பிரிவு, பால் பொருட்கள் பதப்படுத்தும் நிறுவனங்கள், பேக்கேஜிங் நிறுவனங்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தரக் கட்டுப்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கிராமப்புற வங்கிகள் ஆகிய இடங்களில் பணி வாய்ப்புகளை பெறலாம்.