நவ 07, 2024 12:00 AM
நவ 07, 2024 12:00 AM

பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு பற்றிய செய்தி நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக உள்ளது. குழந்தைகளுக்கு இது பற்றிய போதிய புரிதல் இல்லாத காரணத்தாலும், பெற்றோர் / ஆசிரியர்கள் திட்டுவார்களோ என்ற பயத்தினாலும் அவர்கள் அதனை வெளியே சொல்வதில்லை. அதனாலேயே பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழக்கூடியதை காண்கிறோம்.
ஆகவே பள்ளிகளிலும், வீட்டிலேயும் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்கள் பற்றி குழந்தைகளிடம் பேச ஆரம்பிக்க வேண்டும். மூன்று வயதிலேயே பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என இரு பாலருக்கும் இது குறித்து பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
எவ்வாறு கற்றுத்தருவது
இதற்கு குழந்தைகள் விளையாடும் பொம்மைகளையே உதாரணமாக வைத்து சொல்லிக் கொடுக்கலாம். பொம்மைகளின் உடல் பாகங்களை வைத்து அவற்றைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். எந்தெந்த பாகங்களை தொடலாம் எவற்றை மற்றவர்கள் தொடக்கூடாது என்பதைப்பற்றி குழந்தைகள் புரியும் வகையில் சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளியிலோ அல்லது உறவினர்கள் மூலமாகவோ குழந்தைகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பொழுது அவர்கள் பெற்றோர்களிடம் அதைப் பற்றி தைரியமாக கூறுவார்கள்.
இதுப்பற்றி நாம் நம் குழந்தைகளிடம் பேச சங்கோஜப் பட்டால் குழந்தைகள் ஒருவேளை இவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்க நேரிட்டால், பயந்து தன்மீதுதான் தவறு உள்ளதாக நினைத்து அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். அதனால் பாடம் நடத்துவது போல் இல்லாமல் யதார்த்தமாக அவ்வப்போது இது பற்றி குழந்தைகளிடம் உரையாட வேண்டும். எதுவாக இருந்தாலும் அம்மாவிடமோ, அப்பாவிடமோ சொல்ல வேண்டும் என்று பேசி அவர்களிடம் நம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்க்க வேண்டும்.
'குட் டச்', 'பேட் டச்' எவை?
கை குலுக்குதல், பாராட்டும் பொருட்டு தோள் மற்றும் முதுகுப் பகுதியை தட்டிக் கொடுத்தல், தலைப் பகுதியை தொடுதல் ஆகியவை நல்ல தொடுதல்கள் ஆகும். இருப்பினும் நபர்கள் யாரேனும் குழந்தைகளுக்கு அசவுகரியாமான முறையில் கையை இருக்கிப் பிடிப்பது, தோள்களை தடவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதுவும் கெட்ட தொடுதல் பிரிவில் சேரும். மேலும் அடிப்பது, உதைப்பது, கிள்ளுவது உள்ளிட்ட தாக்குதல்களும் கெட்ட தொடுதல்களே ஆகும். இது போன்று துன்புறுத்தல்களுக்கு ஆளானாலும் தலைமை ஆசிரியர், பெற்றோரிடம் குழந்தைகள் புகார் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து உதட்டுப்பகுதி, மார்பு, வயிறு, அந்தரங்க பாகங்கள், தொடை ஆகிய பகுதிகளை தொடுதல் கெட்ட தொடுதல் ஆகும். அவ்வாறான இடங்களை குழந்தைகள் யாரையும் தொட அனுமதிக்கக் கூடாது என்பதை சொல்லிக் குடுக்க வேண்டும். மீறித் தொட்டால் அதை பெற்றோரிடம் கண்டிப்பாக தெரிவிக்கும்படி கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், குழந்தைகள் கீழே விழுந்தோ அல்லது ஏதேனும் விபத்துக் காரணமாக அடிபட்டாலோ, பெற்றோர் முன்னிலையில் காயங்களுக்கு மருத்துவர் சிகிச்சை அளிப்பின் அது கெட்ட தொடுதல் ஆகாது.
இவ்வாறு குட் டச், பேட் டச் ஆகியவற்றில் இருக்கும் வேறுபாட்டை சிறு வயது முதல் இருந்தே பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லித்தர தொடங்க வேண்டும்.
'டோண்ட் டச்'
அடுத்ததாக யாராவது தவறாக தொட முற்படும்போது குழந்தைகள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 'டோண்ட் டச்'அதாவது 'என்னை தொடாதீர்கள்' என்று சொல்ல கற்றுத்தருவது முக்கியம். மீறி யாரேனும் தொட்டால் கூச்சலிடுவது, அவ்விடத்தை விட்டு ஓடிவிடுவது, முடிந்தால் அவர்களை தாக்கிவிட்டு ஓடுவது உள்ளிட்ட செயல்களை கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளியிலோ அல்லது வெளி நபர் யாராவதோ அல்லது உறவினர்களோ இவ்வாறு தவறாக நடந்து கொண்டார்களானால் பயந்து போய் அதை மறைக்காமல் பெற்றோரிடம் அவரைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்குமாறு குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும்.
உதவி எண் 1098
தங்களுடைய குழந்தையோ அல்லது தங்களுக்கு தெரிந்த குழந்தைகளோ இவ்வாறான துன்பறுத்தலுக்கு ஆளாகும் போது, பெற்றோர்கள் பதட்டமடையாமல் தீர்க்கமாக செயல்பட வேண்டும். நமது செயல்களே குழந்தைகளை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்டுக் கொண்டுவர உதவும். காவல் துறையில் புகார் அளிப்பது முதல் கடமையாகும்.
அவ்வாறு காவல் துறையினரிடம் புகாரளிக்க தயங்குபவர்கள் 1098 என்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பிரச்சனையை தெரிவிக்கலாம். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வீட்டிற்கே வந்து நடந்தவற்றை கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர். மேலும் இது தொடர்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றையும் அணுகலாம்.
இந்தியாவில் நிமிடத்திற்கு 5ல் ஒரு பெண் குழந்தையும், 20ல் ஒரு ஆண் குழந்தையும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் பொழுதெ சிறிது சிறிதாக இவ்விஷயங்களைப் பற்றி அவர்களை அச்சம் அடையாத வகையில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி பேச ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையினர்.
பெண் குழந்தைகளிடம் தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். ஆண் குழந்தைகளை, ஆண்களே பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும், பெண்களை மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் கற்றுக் கொடுத்து வளர்க்கும்போதுதான் நாளைய தலைமுறையை சீர்பட்ட கண்ணியத் தலைமுறையாக உருவாக்க முடியும்.