ஜூன் 28, 2024 12:00 AM
ஜூன் 28, 2024 12:00 AM

நம் நாட்டில் சாதகமான வளர்ச்சியை நோக்கி கல்வித்துறை பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கம்ப்யூட்டர் மற்றும் ஏ.ஐ., தொடர்பான படிப்புகளை அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டுவதால், அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டடத்திலேயே இரண்டாம் ஆண்டுகளில் இருந்து 'கம்ப்யூட்டர் லேங்குவேஜ்' பாடங்கள் சேர்க்கப்படுகிறது.
சாதகமான வளர்ச்சி
தொழில் நிறுவனங்களுடனான நல்லுறவு மேம்பட்டு வருவதால், மாணவர்கள் 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டுவரையிலான கல்வி காலத்தை தொழில் நிறுவனங்களில் நேரடி பயிற்சி மேற்கொள்ள செலவிடுகின்றனர். ஏவியானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன், பல்துறை சார்ந்த திட்டங்களில் மாணவர்கள் ஈடுபடும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் படித்துக்கொண்டே, மாணவர் விருப்பத்திற்கு ஏற்ப இசையை ஒரு பாடமாக படிக்க முடியும். அனைத்து விதமான திறன் வளர்ச்சிக்கும் இன்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.
சர்வதேச அளவில் நான்கு ஆண்டு கால அளவு கொண்ட இளநிலை பட்டப்படிப்புகளே அங்கீகரிக்கப்படுகின்றன. புதிய கல்விக்கொள்கையின் படி, இன்ஜினியரிங் மட்டுமின்றி அனைத்து துறை இளநிலை பட்டப் படிப்புகளையும் நான்கு ஆண்டுகளாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'கிரெடிட்' முறை அடிப்படையில் மாணவர்களின் விருப்பப்படி பல்துறை கல்வியை தொடர வழிவகுக்கிறது. பல்கலைக் கழகங்களுக்கான அங்கீகாரமும் அதிகளவில் வழங்கப்படுகின்றன.
தொழில் வாய்ப்புகள்
புதிய தொழில் துவங்குவதற்கான பயிற்சிகளும், வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. புதிய தொழில் துவங்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதிகளவில் மானியமும் வழங்குகின்றன. ஆகவே, ஒரு சரியான 'ஐடியா'வுடன் மாணவர்கள் இருந்தால் போதும். முதலீட்டிற்கான நிதி வாய்ப்புகள் இன்று ஒரு பிரச்னை அல்ல. கல்வி நிறுவனங்களும் அனைத்து வகையிலும் மாணவர்களை புதிய தொழில் துவங்கவும், திறன் வளர்க்கவும் ஊக்குவிக்கின்றன. நம்நாட்டின் இத்தகைய வளர்ச்சி மிகவும் வரவேற்கத்தக்கது.
கோவை மாவட்டத்திலும் சமீபகாலமாக, தொழில்முனைவோருக்கும், புதிய தொழில் நிறுவனங்களுக்குமான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய வளர்ச்சியால், இன்னும் சில ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட ஐ.டி., பூங்காங்கள் புதியதாக உருவாவதோடு, புத்தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மென்மேலும் பிரகாசமாகி உள்ளன. ஏற்கனவே, கல்வித் துறையில் கோவை மாவட்டம் சிறந்து விளங்கும் நிலையில், வரும் ஆண்டுகளில் கல்வியின் வளர்ச்சியும் பிரமாண்டமாக இருக்கும்.
-கிருஷ்ணகுமார், சி.இ.ஒ., மற்றும் செயலர், நேரு கல்விக் குழுமங்கள், கோவை.
krishnakumar.p@nehrucolleges.com