/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆரோக்கியமான போட்டியே நிலவும்!
/
ஆரோக்கியமான போட்டியே நிலவும்!
ஜூலை 07, 2024 12:00 AM
ஜூலை 07, 2024 12:00 AM

கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பல்துறை அடிப்படையிலான பாடத்திட்டம், சுதந்திரமான உயர்கல்வி திட்டம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
உதாரணமாக, இசை துறையில் எம்.எஸ்சி., பட்டப்படிப்பு வெளிநாடுகளில் வழங்கப்படுகிறது. அதேபோல், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் பிற எந்த ஒரு துறை சார்ந்த பாடத்தையும் அவர் விருப்பப்படி தேர்வு செய்து படிக்க முடிகிறது. இத்தகைய வாய்ப்புகளை வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அதேபோல், கலை மற்றும் பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் வேதியியல் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புகள் தற்போது நம் நாட்டில் இல்லை.
ஆகவே, தேசிய கல்விக்கொள்கையின் வாயிலாக உலகின் தலைசிறந்த மற்றும் தரமான கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள், இந்தியாவிலேயே கல்வி வளாகங்கள் துவக்க வழிவகுக்கப்படுகிறது. அத்தகைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களது பாடத்திட்டத்தை இந்தியாவில் நேரடியாக வழங்கலாம். அவர்கள் வழங்கும் பட்டம், கல்வி நிறுவனங்களின் தரம் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டே அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் வளாகங்களை துவங்குவதால், அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவும். ஆகையால், தரமான கல்வி, ஆய்வகங்கள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அந்நிறுவனங்கள் வழங்கும். மேலும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் உதவித்தொகைகளை வழங்கும். எனினும், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள், தரம், அங்கீகாரம் ஆகியவை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
சமீபத்திய மாற்றங்கள்
இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு இன்றி நேரடியாக 'நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்' தேர்வை எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 'நெட்' தேர்ச்சி பெற்றவர்கள் பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்கை பெற முடியும். ஆனால், இளநிலை பட்டப்படிப்பு மட்டும் படித்து 'நெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு துணை பேராசிரியர் தகுதி வழங்கப்பட மாட்டாது. அவரக்ள் பிஎச்.டி., படிப்பில் சேர மட்டுமே தகுதி பெறுகின்றனர்.
ஆன்லைன் மற்றும் தொலைநிலை கல்வி முறை மறுசீரமைக்கப்பட்டு, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதிலும் 29 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது அந்த எண்ணிக்கை 25 ஆக குறைந்துள்ளது. மாநில அரசுகளே அத்தகைய போலி கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
பார்மசி கவுன்சில் ஆப் இந்தியா, நர்சிங் கவுன்சில் ஆப் இந்தியா என ஏராளமான ஒழுங்குமுறை அமைப்புகள் நம் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் ஒன்றிணைத்து 'ஹயர் எஜுகேஷன் கமிஷன் ஆப் இந்தியா' எனும் புதிய ஒரே அமைப்பை உருவாக்கும் திட்டமும் தேசிய கல்விக் கொள்கையில் ஒரு முக்கிய அம்சம்.
-பேராசிரியர் மனிஷ் ஆர். ஜோஷி, செயலர், பல்கலைக்கழக மானியக் குழு, புதுடில்லி
secy.ugc@nic.in