அக் 15, 2024 12:00 AM
அக் 15, 2024 12:00 AM

குறைந்த கல்விக் கட்டணம், உயர்தர கல்வி மற்றும் விரிவான ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கு பல சர்வதேச மாணவர்களின் விருப்பமாக ஜெர்மனி திகழ்கிறது. சமீபகாலமாக, இந்நாட்டில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
சிறந்த கல்வி நிறுவனங்கள்:
மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் முனிச்சின் லுட்விக் மாக்சிமிலியன் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளன.
படிப்புகளும், ஜெர்மன் மொழியும்:
பல படிப்புகள் ஜெர்மன் மொழியில் கற்பிக்கப்படுகின்றன என்றபோதிலும், கணிசமான எண்ணிக்கையிலான முதுநிலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகள் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பொறியியல், கணினி அறிவியல் மற்றும் வணிகம் போன்ற துறைகளில், சரளமாக ஜெர்மன் பேசாத சர்வதேச மாணவர்கள் ஆங்கில மொழியில் கல்வி பயிலுகின்றனர்.
இளநிலை பட்டப்படிப்புகள் பொதுவாக, மூன்று முதல் நான்கு ஆண்டு கால அளவு கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன என்றபோதிலும், பல படிப்புகளுக்கு ஜெர்மன் மொழியில் புலமை தேவைப்படுகிறது. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான கால அளவை கொண்டுள்ள முதுநிலை பட்டப்படிப்புகளில், ஏராளமான ஆங்கிலம் கற்பிக்கப்படும் படிப்புகள் உள்ளன.
ஜெர்மனியில் வலுவான ஆராய்ச்சி கலாச்சாரம் உள்ளதால், முனைவர் பட்ட படிப்புகளுக்கான சிறந்த இடமாக உள்ளது. பல பிஎச்.டி., படிப்புகள் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பு காலத்தில் பெரும்பாலும் ஆராய்ச்சி உதவியாளர்களாகவும் பணி புரிகின்றனர்.
வலுவான 'ஸ்டெம்' படிப்புகள்:
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் ஜெர்மன் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, ஆராய்ச்சியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறைக்கு இடையேயான நல்லுறவு, இந்தத் துறைகளில் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.
செலவீனங்கள்:
நகரத்தைப் பொறுத்து, மாதத்திற்கு சுமார் €1,200 தேவைப்படலாம். முக்கிய செலவுகளில் தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவை அடங்கும். முனிச் மற்றும் பிராங்க்பர்ட் போன்ற நகரங்களில் அதிக செலவுகள் ஆகும். சிறிய நகரங்களில் செலவீனங்கள் மலிவுவாகவே உள்ளன.
உதவித்தொகை:
'டி.ஏ.ஏ.டி.,' எனும் ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்குகிறது. தவிர, ஜெர்மன் அரசாங்கத்தால் வழங்கப்படும் தகுதி அடிப்படையிலான உதவித்தொகைகளும், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் உதவித்தொகை திட்டங்களும் உள்ளன.
வேலை வாய்ப்புகள்:
வாகன பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளில் வளமான வாய்ப்புகளை வழங்குகிறது. சர்வதேச மாணவர்கள் தங்கள் படிப்பின் போது பகுதி நேரமாக, வாரத்திற்கு 20 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பட்டப்படிப்பை முடித்த பிறகு 18 மாதங்கள் வரை அந்நாட்டில் தங்கி, வேலை வாய்ப்புகளைத் தேடலாம்.