/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பஞ்சமில்லா பணிவாய்ப்புக்கு விருந்தோம்பல் துறை!
/
பஞ்சமில்லா பணிவாய்ப்புக்கு விருந்தோம்பல் துறை!
நவ 25, 2015 12:00 AM
நவ 25, 2015 12:00 AM
பாரம்பரியமிக்க வரலாறு, புராதான நிகழ்வுகள், விதவிதமான பழக்க வழக்கங்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், அசத்தும் இயற்கை ரம்மியங்கள் எல்லையெங்கும் பரவியுள்ள இந்தியாவில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை குறிப்பிடத்தக்க துறைகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பல்வேறு விதமான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாகவும் உருவடுத்து வருவது இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
துறை வளர்ச்சி
2014-15ம் ஆண்டில் 11.7 சதவீத வளர்ச்சியுடன், 44.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வர்த்தகம் நடைபெறும் இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் அதிவேக வளர்ச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்றால் மிகையல்ல. இதுவே, 2025ம் ஆண்டிற்குள் 88.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைக்கு பஞ்சமில்லை
இத்தகைய வளமிக்க சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் உருவெடுத்துள்ளது, இந்திய இளைஞர்களை இத்துறை நோக்கி கவர்ந்திழுக்கிறது. இந்தியாவின் வளத்தையும், மக்களின் செலவிடும் சக்தியையும் உணர்ந்தே பிரபல வெளிநாட்டு ஹோட்டல் நிறுவனங்கள் பலவும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேகமாக காலூன்றி வருவது இதற்கு கண்கூடு...
பேக்கரி, ஹோட்டல், ரெஸ்டாரென்ட் என பல்வேறு வடிவம் கொண்ட இத்துறையில் விதவிதமான படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களும் உள்நாட்டிலும், அயல் நாட்டிலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சர்வதேச அனுபவத்துடன் வேலை வாய்ப்பையும் விசாலமாக்கும் வகையில், இந்திய மாணவர்கள் பலரும் இதுதொடர்பான படிப்புகளுக்காக ஐரோப்பா, ஆஸ்திரேலியா நோக்கி படையெடுக்கத் திட்டமிடுகின்றனர்.
வல்லுனர் பார்வை
“இத்துறையில், வரவேற்றல் முதல் நிர்வகித்தல் வரை, பயண சீட்டு முன்பதிவு முதல் பயண ஒருங்கிணைப்பு வரை, இட்லி முதல் கான்டிநென்டல் உணவு தயாரித்தல் வரை ஏராளமான பணியிடங்கள் இந்தியாவில் உருவாகி வருவதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தேவைக்கு ஏற்ப, போதிய மனித வளம் நம் நாட்டிலேயே இருக்கிறது. அதேசமயம், அவர்கள் சரியான திறனுடையவர்களாக தங்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சற்று குறைவான ஊதியம் கிடைத்தாலும், ஓரளவு அனுபவத்திற்கு பிறகு, வருமானம் ஒரு பிரச்சனையல்ல!
சேவைத்துறை என்பதால், பணியின் மீது அதிக பற்றுடன், ரசித்து, அனுபவத்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுவதும் அவசியம். எனவே, இத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்கள், துறைக்கு தேவையான கல்வித் தகுதி உடையவர்களாக தங்களை மேம்படுத்திக்கொள்வதோடு மட்டுமில்லாமல், சேவை துறையின் மீது பேரார்வமுள்ளவர்களாக ஐக்கியப்படுத்திக்கொள்வதும் சிறந்தது.
ஒரு நிறுவனத்தில் பணியாளராக மட்டுமின்றி, தொழில்முனைவோராக துடிப்பவர்களுக்கும் இத்துறை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்” என்கிறார், ஜிஞ்சர் பிரட் நிறுவனர் சுந்தர் குருசாமி.

