/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
திட்டமிட்டுச் செயலாற்றுவது எப்படி?
/
திட்டமிட்டுச் செயலாற்றுவது எப்படி?
நவ 02, 2015 12:00 AM
நவ 02, 2015 12:00 AM
திட்டமிடுதலே பாதி வெற்றி என்பார்கள். திட்டமிட்டு யாரும் தோற்றுப் போவதில்லை... திட்டமிடுவதில்தான் தோற்றுப் போகிறோம். திட்டமிடுவதில் தோற்றுப் போவது என்பது தோற்றுப் போவதற்கே திட்டமிடுவதைப் போன்றது!
ஒரு கடைக்கு ஒரு நூறு ரூபாயை எடுத்துச் செல்கிறோம் என்றால் அதற்கு என்னென்ன பொருள் வாங்கவேண்டும் என்ற திட்டத்தோடு தான் செல்கிறோம். ஒரு நூறு ரூபாயைச் செலவு செய்வதற்குத் திட்டம் போடுகிறோம். வீடு கட்ட வேண்டுமென்றால் அதற்கான வரைபடத்தை முதலில் வரைந்து, செலவுக்கான பணத்தை சேர்ப்பது குறித்து திட்டமிடுகிறோம். ஆனால் நமது வாழ்க்கையை எவ்வாறு பயனுடையதாக மாற்றவது என்று திட்டமிடுகிறோமா?
காற்று அடிக்கிற திசையிலே சென்று காலத்தைக் கழித்து விட்டு, ‘அதிர்ஷ்டமில்லை’ என்றே பெரும்பாலனவர்கள் புலம்புகின்றார்கள்! அது சரியான அணுகுமுறையல்ல. நமது வாழ்நாளில் சாதிக்க வேண்டியவை ஏராளம்...
வாழ்க்கையை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்புகிறவர்கள், முதலில் தங்களுடைய நேரத்தை உழைப்பில் முதலீடு செய்யத் திட்டமிட வேண்டும். உழைப்பைக் கூட திட்டமிட்டுத் தான் செய்ய வேண்டும். கடினமாக உழைப்பது அந்தக் கால சித்தாந்தம். புத்திசாலித்தனமாக உழைப்பது தான் இக்காலத்திற்கான வெற்றிச் சூத்திரம். கடினமாக உழைப்பது என்பது திட்டமில்லாத உழைப்பை குறிக்கும். புத்திசாலித்தனமான உழைப்பு என்பது திட்டமிட்டு உழைப்பதைக் குறிக்கும்.
திட்டமிடுவதற்கு முன்னர், உங்களுடைய லட்சியம், உங்களுடைய திறமைகள், அவற்றை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை ஆராய்ந்து பட்டியலிட வேண்டும். திட்டமிடுதல் என்பது ஒரு கலை. அதில் தேர்ச்சி பெற்று நிபுணத்துவம் பெறுவதற்கு கீழ்க்காணூம் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.
1. ஒவ்வொருநாளும் செய்ய வேண்டிய பணிகள் அடங்கிய பட்டியலைத்தயார் செய்யுங்கள்.
2. ஒவ்வொரு பணியை முடிப்பதற்க்கு தேவையான கருவிகள், வளங்கள், காலம் ஆகியவற்றையும் குறித்துத் திட்டமிடுங்கள்.
3. ஒவ்வொரு பணிமுடிந்ததும், அதில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு நிறைவேறியுள்ளதா? என்று ஆய்வு செய்து பாருங்கள்.
4. அவ்வாறு ஆய்வு செய்வதால் கிடைக்கும் அனுபவ அறிவை அடுத்தமுறை திட்டமிடுவதலுக்கு அடிப்படையாக அமைத்துக் கொள்ளுங்கள்.
5. முக்கியமாக எதையும் சிக்கனமாகவும் சீக்கிரமாகவும் செய்து முடிக்க வேண்டும் என்பதை மனதில் திட்டமிடுங்கள்.
“எண்ணித் துணிக் கருமம்” என்று வள்ளுவர் கூறுவதும் திட்ட்மிடுதலைத்தான். எதையும் ஆராய்ந்து குறை, நிறைகளை எண்ணியும், நமது பலம், பலவீனம், வாய்ப்புகள், சவால்கள் ஆகியவை குறித்து தீவிரமாக ஆராய்ந்து அறிந்து செயல்படும்போதும், நாம் வெற்றிக்கு அருகில் விரைந்து செல்லமுடியும் என்பது உறுதி!
- முனைவர் கவிதாசன்.

