/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
“உயர் கல்வி நிறுவனங்களை மீட்க உடனடி நடவடிக்கை அவசியம்”
/
“உயர் கல்வி நிறுவனங்களை மீட்க உடனடி நடவடிக்கை அவசியம்”
“உயர் கல்வி நிறுவனங்களை மீட்க உடனடி நடவடிக்கை அவசியம்”
“உயர் கல்வி நிறுவனங்களை மீட்க உடனடி நடவடிக்கை அவசியம்”
ஜன 19, 2026 10:30 AM
ஜன 19, 2026 10:30 AM

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழக பல்கலைகளில் நிலவும் தற்போதைய நிலை, ஒரு நிறுவன சீர்குலைவுக்கு சற்றும் குறைவானதல்ல. இது, உயர்மட்டத்தில் உடனடி, உறுதியான நடவடிக்கையை கோருகிறது.
நிர்வாக முடக்கம்
தமிழகத்தில், 14 பல்கலைகளில் நீண்ட காலமாக துணைவேந்தர்கள், பதிவாளர்கள், நிதி அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது அன்றாட நிர்வாகம், நிதி முடிவெடுத்தல், கல்விசார் திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தை முடக்குகிறது.
தற்காலிக ஏற்பாடுகளால் பல்கலைகளை நடத்த முடியாது. முடிவெடுக்கும் செயலை இது முடக்கியுள்ளதால், நிறுவனத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்துள்ளது.
பல ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம், பதவி உயர்வுகள் இல்லை. இதனால், ஆசிரியர் பற்றாக்குறை, அதிக பணிச்சுமை, தேக்கமடைந்த கல்வித் துறைகள், திறமையான இளம் அறிஞர்கள் வெளிமாநிலங்கள், நாடுகளுக்கு செல்வது, தரம் குறைதல் ஆகிய சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளன.
பல்கலைகள் கடும் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. ஊதியம், ஓய்வூதியம் சரியான நேரத்தில் வழங்கப்படாததால், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். பல பல்கலைகளில் ஆராய்ச்சி உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. ஆய்வகங்கள் மோசமடைந்துள்ளன. நுாலகங்களுக்கு போதிய நிதி இல்லை. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தொடர் சரிவு
உயர் கல்வியில் தமிழகம் தேசியளவில் முன்னோடியாக திகழ்ந்தது. இன்று, பல்கலைக்கழகத் தரவரிசைகளிலும், கல்விசார் வெளியீடுகளிலும் தொடர் சரிவை சந்தித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கை தேவை. காலியாக உள்ள துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் நிதி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஊதியம், ஓய்வூதியத்தை உரிய நேரத்தில் வழங்க போதுமான நிதியை தரவேண்டும். மேலும், பேராசிரியர் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை துவங்க வேண்டும். ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, தமிழக உயர் கல்வியின் பெருமையையும், இழந்த புகழையும் மீட்டெடுக்க உங்கள் நடவடிக்கை உதவும்.

