தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இந்திய வணிகப் பள்ளிகள் செய்ய வேண்டியவை என்ன?

இந்திய வணிகப் பள்ளிகள் செய்ய வேண்டியவை என்ன?

இந்திய வணிகப் பள்ளிகள் செய்ய வேண்டியவை என்ன?


செப் 19, 2013 12:00 AM

செப் 19, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 19, 2013 12:00 AM செப் 19, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகளாவிய அளவில் பெயர் வாங்கவும், பல பன்னாட்டு மாணவர்களை ஈர்க்கவும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தங்களின் அணுகுமுறை மற்றும் பாடத்திட்டங்களில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மேலாண்மை கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரித்துவரும் அதே நேரத்தில், அக்கல்வியின் தரம் தாழ்ந்து வருவதும் கவலை கொள்ளத்தக்க ஒரு விஷயமாக மாறி வருகிறது. ASSOCHAM சர்வேயின்படி, இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (புகழ்பெற்ற முதல் 20 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தவிர) எம்.பி.ஏ படித்து வெளிவரும் பட்டதாரிகளில், வெறும் 10% பேர் மட்டுமே பொருத்தமான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறது. இந்த சதவீதம் கடந்த 2008ம் ஆண்டில் 54% என்ற அளவில் இருந்தது.

ஆனால் 2009 - 2012 ஆகிய ஆண்டுகளுக்கு இடைபட்ட காலங்களில், வளாக நேர்முகத் தேர்வில் ஆட்களை எடுத்தலானது, 40% குறைந்து, கடந்த 2012ம் ஆண்டில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 180 வணிகப் பள்ளிகள் மூடு விழா கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், 160 வணிகப் பள்ளிகள், இந்த ஆண்டில் மூடப்படும் என்ற நிலையில் உள்ளன. ஏனெனில், அங்கே மாணவர் சேர்க்கை அந்தளவு பரிதாபகரமான நிலையில் உள்ளது.

எதனால் இப்படி நடக்கிறது?

இதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த மூன்றாம் உலக நாடுகளில், கல்வி என்பது, ஒரு புதிய விஷயத்தை அறிந்துகொள்வதற்கும், மனித அறிவை மேம்படுத்திக் கொள்வதற்குமே மேற்கொள்ளப்படுவது என்ற நிலை மாறி, வேலை கிடைக்குமா? நல்ல சம்பளம் கிடைக்குமா? என்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

பல கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதைவிட, எந்தளவு அதிக மாணவர்களை சேர்த்து, அதன்மூலம் பெரியளவில் கல்லா கட்ட வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளன. மேலும், எம்.பி.ஏ படிப்பில் சேரும் பல மாணவர்கள், அதை ஒரு அறிவுத்தேடலாக பார்க்காமல், தரமான கல்வித்திட்டம் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி கவலைப்படாமல், எம்.பி.ஏ., என்பது விரைவாக வேலை வாங்கி, அதிகமாக சம்பாதிப்பதற்கான ஒரு குறுக்கு வழி என்பதாகவே பார்க்கிறார்கள்.

மாணவர்களின் எதிர்பார்ப்புக்கும், பணி வழங்கும் நிறுவனத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. பல மேலாண்மை கல்வி நிறுவனங்களில், முறையான உள்கட்டமைப்பு இல்லாமை, தரமான ஆசிரியர் பற்றாக்குறை, கற்பித்தல் முறையில் மேம்பாடின்மை மற்றும் பழமையான, தரமற்ற பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறான குறைபாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் கலைந்தால்தான், இந்திய எம்.பி.ஏ., கல்வியை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற முடியும். எனவே, மேலாண்மை கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன. இதை மாணவர்களும் நன்கு தெரிந்துகொள்வது கட்டாயம். அப்போதுதான், தங்களுக்கான சிறந்த வணிகப் பள்ளியை தேர்வு செய்ய அவர்களால் முடியும்.

தரமான கல்வி நிறுவனங்கள்

கடந்த சில ஆண்டுகளில், மேலாண்மை கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையில் பெரிய உயர்வு காணப்படுகிறது. ஆனால், இவற்றில் மிகச்சில மட்டுமே, சர்வதேச தரமுடையதாக இருக்கின்றன. இந்திய வணிகப் பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான தனிப்பட்ட வரைமுறைகள் இருப்பதில்லை மற்றும் பல கல்வி நிறுவனங்களுக்கு AICTE அங்கீகாரமே இல்லை. இதனால், தரமான மேலாண்மை கல்வி வழங்கலில் பல சிக்கல்கள் எழுகின்றன.

பல மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வணிகப் பள்ளிகளில், குறைந்த செலவுடைய படிப்புகளையே எதிர்பார்க்கிறார்கள். எனவே, அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்களோ, குறைந்தளவு மாணவர் சேர்க்கைக்குக்கூட திணறும் நிலை இருக்கிறது. எனவே, கல்வி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய கட்டாயத் தேவை எழுகிறது. விதிமுறைகளை பூர்த்தி செய்யாத கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது.

நல்ல உள்கட்டமைப்பு

பல வணிகப் பள்ளிகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க இயலமால் சிரமப்படுகின்றன. நல்ல உள்கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, ஆராய்ச்சி முறையிலான கல்வியை அளிக்க முடியும்.

கல்வியானது, வெறும் தியரி நிலை என்பதற்கு அப்பாற்பட்டு, தரமான நிபுணர்களை உருவாக்கி, நடைமுறை உலகில் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுவதற்கு, கல்வி நிறுவனங்கள் முறையான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருப்பது அவசியம். இது பள்ளி நிலையிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். தியரி கல்வியுடன், பிராக்டிகல் கல்வியையும் சேர்ந்து பெறுவது, ஒரு மாணவரின் அறிவு வளர்ச்சிக்கு கட்டாயத் தேவையாகும்.

கல்வி நிறுவன - தொழில்துறை ஒத்துழைப்பு

பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், வளாக நேர்காணல் நடத்தும் வகையில், எந்த தொழில் நிறுவனங்களுடனும், ஒத்துழைப்பை வைத்துக்கொள்வதில்லை. இதன்மூலம், அத்தகைய கல்வி நிறுவனங்களில் அதிக பணம் கட்டி படிக்கும் ஒரு மாணவர், தன் படிப்பு முடியும் தருவாயில், முறையான வேலை வாய்ப்பை பெற முடியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

தங்களின் 2 வருட எம்.பி.ஏ படிப்பிற்கு குறைந்தது 2 முதல் 3 லட்ச ரூபாய் வரை செலவழித்து விட்டு, அதன்பிறகு பணி வாய்ப்புகளைப் பெறும் பல மேலாண்மை பட்டதாரிகள் ஆரம்ப நிலையில் பெறும் சம்பளமானது, மேலாண்மை படிப்பை மேற்கொள்ளாத வேறு துறை பட்டதாரிகள், ஆரம்ப நிலையில் பெறும் சம்பளத்தோடு ஒப்பிடும் வகையிலேயே உள்ளது.

எனவே, மேலாண்மை கல்வி நிறுவனங்கள், பல நல்ல தொழில் நிறுவனங்களுடன் சிறப்பான ஒத்துழைப்பை ஏற்படுத்தி, தங்கள் மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு மாணவரின் நலனிலும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.

பாடத்திட்ட மாற்றம்

ஒரு நிறுவனம், ஒரு மேலாண்மை பட்டதாரியை பணிக்கு எடுக்கையில், அவர் எந்த கல்வி நிறுவனத்தில் படித்தார் என்பதை மட்டும் பார்ப்பதில்லை. மாறாக, அவர் எதைக் கற்றுக்கொண்டார் மற்றும் அவரின் திறன்கள் என்ன என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

பல மேலாண்மை பட்டதாரிகள், மிக குறைவான ஆங்கில அறிவு, மென்திறன்கள் பற்றாக்குறை, கலாச்சார புரிதலின்மை ஆகிய குறைபாடுகளோடு இருக்கிறார்கள். எனவே இவர்கள், எளிதாக வேலை வாய்ப்பு சந்தையில் நிராகரிக்கப்படுகிறார்கள். தகுதியற்ற நபர்களை பணிக்கு எடுத்து, அவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, அதிக பணத்தையும், நேரத்தையும் செலவழிக்க பல கார்பரேட் நிறுவனங்கள் தயாராக இல்லை.

எனவே, தேவையான திறன்களை ஏற்கனவே பெற்றிருக்கும் மாணவர்களையே பணிக்கு எடுக்க, கார்பரேட் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இத்தகைய அவல நிலைக்கு, மட்டமான பாடத்திட்டமும் முக்கிய காரணம். மேற்கத்திய மேலாண்மை முறையை அப்படியே காப்பி அடிக்காமல், தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்வதே இப்போதைய தேவையாக இருக்கிறது.

நமது வணிகம் மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப, முழு பாடத்திட்டத்திலும், ஆக்கப்பூர்வமான மாற்றங்களை மேற்கொள்வது முக்கியம். மேலாண்மை கல்வியானது, ஆராய்ச்சி அடிப்படையிலானதாக மாற்றப்பட வேண்டும். மென்திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட இடைவெளிகளில், அப்போதைய தேவைக்கு ஏற்றவாறு, பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

தகுதியும், அனுபவமும் கொண்ட ஆசிரியர்கள்

மாணவர்களை, நடைமுறை ரீதியான மேலாண்மை திறன் பெற்றவர்களாக மாற்றும் வகையிலான போதுமான தகுதியும், அனுபவமும் வாய்ந்த பேராசிரியர்கள் பல மேலாண்மை கல்வி நிறுவனங்களில் இல்லை. இதற்கு காரணம், கல்வி நிறுவனங்கள் போதுமான சம்பளம் தர தயாராக இல்லாததுதான்.

பேராசிரியர்கள் பணி மாறுவது அதிகரித்து வருகிறது மற்றும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், மாறிவரும் நடைமுறை உலகிற்கு ஏற்ற வகையில் தங்களை மெருகேற்றிக்கொள்ள தயாராக இல்லை. இதன்மூலம், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை.

வணிகப் பள்ளிகள், போதுமான சம்பளம் கொடுத்து, நல்ல தரமான, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவது கட்டாயம். மேலும், ஆசிரியர்களாக இருப்பவர்கள், தினந்தோறும் மாறிவரும் வணிகச் சூழல்களை தவறாமல் அவதானித்து, அதற்கேற்ப தங்களின் அறிவுத்திறனை புதுப்பித்துக்கொண்டே வர வேண்டும்.

துறை அறிவு, மென் திறன்கள், நடத்தை, மேலாண்மை ஆர்வம், ஐ.டி. அறிவு, மேலாண்மை உபகரணங்கள் ஆகிய பல்வேறான விஷயங்களில், மாணவர்களை பயிற்சி பெற்றவர்களாக மாற்றுவது ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை. எனவே, ஒரு மேலாண்மை கல்வி நிறுவன ஆசிரியர், கார்பரேட் பயிற்சியாளர் என்ற நிலையில் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.

திறன் வளர்ப்பில் கவனம்

நடைமுறை உலகின் வணிக சிக்கல்கள் குறித்து, மாணவர்களுக்கு நல்ல அறிமுகங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். இதன்பொருட்டு, தொழில் நிறுவனங்களைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் வகையிலான Cases மற்றும் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

தொழில்துறையைச் சேர்ந்த மூத்த ஆலோசகர்களுடன் நெருங்கி பணி செய்தல், புகழ்பெற்ற மேலாண்மை கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வெற்றிகரமான வியாபார பிரபலங்கள் ஆகியோர் வழங்கும் உரைகளை(Lectures) கேட்கும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளால், ஒரு தொழில் நிறுவனத்தின் முழு இயக்க செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதுடன், சிக்கல்களை களைவதற்கான அறிவைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியும், மாணவர்களுக்கு கிடைக்கிறது.

மேலும், ஆராய்ச்சி நடவடிக்கைகளை நோக்கி மாணவர்களை திருப்புவதில் கல்வி நிறுவனங்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். வெறுமனே மதிப்பெண்கள் பெறுவது மற்றும் பட்டப் படிப்பை நிறைவு செய்வது என்பதோடல்லாமல், ஒரு மேலாண்மை கல்வி நிறுவனம், ஒரு மேலாண்மை மாணவரை, நடைமுறை உலக சூழலுக்கு தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் மனமாற்றம்

ஒரு சிறந்த மேலாண்மை திறன் வாய்ந்த மாணவரை உருவாக்குவதில், கல்வி நிறுவனம் மட்டுமே தனியாளாக செயல்பட்டுவிட முடியாது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கும் இன்றியமையாதது. தங்களின் பங்கிற்கு, அவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது மாறிவரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சூழல்கள், ஒரு நிறுவனத்தின் பணியாளர் எதிர்பார்ப்பு தன்மையை பெரிதும் மாற்றியுள்ளன.

சுயமாக சிந்தித்து, தைரியமாக முடிவெடுத்து, அதன்மூலம் நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் நபர்களுக்கே, நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன மற்றும் அதுபோன்ற பணியாளர்கள் பெறும் சம்பளம் கணக்கில் அடங்காது. மேலும், எந்த சூழலிலும் பணியாற்ற தயாராக இருக்கக்கூடிய நபர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வணிகம் என்பது கடும் சவாலான, துணிச்சலான, நெருக்கடி நிறைந்த ஒரு களம். இங்கே, விரைவாக, அதேசமயம், நுட்பமாக கணித்து, மிகச் சரியாக முடிவெடுக்கவும் தெரிய வேண்டும். இந்த களத்தில், ஒரு நபர், ஒரே நாளில் மேலேயும் ஏறிவிடுவார். மேலேயிருந்த நபர், ஒரே நாளில் கீழேயும் இறங்கி விடுவார். எனவே, இது ஒரு சூதாட்டம் நிறைந்த போர்க்களம் போன்றது. இக்களத்தில் வெற்றியடைய நினைக்கும் ஒருவர், அனைத்து திறன்களையும் பெற்று, எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us