sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நிலையான வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்

/

நிலையான வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்

நிலையான வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்

நிலையான வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்


ஜன 31, 2026 10:41 AM

ஜன 31, 2026 10:41 AM

Google News

ஜன 31, 2026 10:41 AM ஜன 31, 2026 10:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் தாக்கல் செய்த 2025 - 26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து நிலையான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவியியல் அரசியல் பதற்றங்கள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்புகள் போன்ற சவால்களுக்கிடையிலும், இந்திய பொருளாதாரம் உள்நாட்டு தேவை, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு செலவு போன்றவற்றின் உதவியுடன், நிலையான வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நீண்டகால வளர்ச்சிக்காக உற்பத்தி துறையை வலுப்படுத்துதல், அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீட்டை அதிகரித்தல், நிதித் துறையின் நிலைத்தன்மையை பேணுதல் போன்றவை, முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்து வரும் வறுமை, கிராமப்புற உள்கட்டமைப்பு விரிவாக்கம், சேவை துறையில் தொடரும் பங்களிப்பு ஆகியவற்றையும் குறிப்பிடும் இந்த ஆவணம், இந்தியாவின் வளர்ச்சி பாதை எண்களால் மட்டுமல்ல; அதன் தரத்தாலும் மதிப்பிடப்பட வேண்டும் என்ற பார்வையை முன் வைத்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை, அரசுக்கு சில முக்கிய கொள்கை வழிகாட்டல்களையும் வழங்கி உள்ளது. நீண்ட கால வளர்ச்சிக்காக, உற்பத்தி துறையை மையமாக வைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே மிக முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது.

வங்கி துறை முன்பை விட உறுதியான நிலையில் இருப்பதாகவும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையில் வளர்ச்சி காண இயலும் என்றும் தெரிவித்துள்ளது. சேவைத்துறை தொடர்ந்து வளர்ச்சிக்கு துணை நிற்கும் போதிலும், உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.

விவசாயத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச ஆதார விலையை கூட்டுவது, குறைப்பது, கொள்முதலை குறைப்பது மாதிரியான நடவடிக்கைகளுக்கு பதிலாக, விவசாயிகளை தங்கள் விருப்பப்படி பல்வகை பயிர்களை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இறக்குமதி சார்பை குறைத்து, முக்கிய துறைகளில் உள்நாட்டு உற்பத்தி திறனை வளர்ப்பது, இந்தியாவை உலகளாவிய மதிப்பு தொடருடன் வலுவாக இணைப்பது ஆகியவையும் அரசின் முக்கிய கொள்கை இலக்குகளாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

அரசுக்கான வழிகாட்டல்கள்:

1. விதிகளை பின்பற்றுவதாக மட்டும் அரசு நிர்வாகம் இருக்கக்கூடாது; நிச்சயமற்ற சூழலில் விரைந்து முடிவெடுக்கும் பரிசோதனைகள் வாயிலாக கற்றுக் கொள்ளும் தொழில்முனைவோர் போல செயல்பட வேண்டும்.

2. தொழிற்கல்வியை ஆரம்ப கல்வியில் இருந்தே ஒருங்கிணைக்க வேண்டும். மாணவர்களின் திறனை மேம்படுத்த, 'திறன் வவுச்சர்கள்' போன்ற புதிய நிதி முறைகளை அறிமுகப்படுத்தலாம்.

3. அதிகப்படியான உணவு தானிய கொள்முதல் மற்றும் சேமிப்பு கிடங்கு செலவுகளை குறைத்து, அந்த நிதியை பயன்படுத்தி, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கு மாற, விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்,

4. நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, நிதிப் பற்றாக்குறையை 4.40 சதவீதத்துக்கு கீழே கொண்டு வர வேண்டும். 2031 மார்ச் 31க்குள் கடன் ஜி.டி.பி., விகிதத்தை 50 சதவீதமாக்கும் இலக்கை அடைய வேண்டும்.

5. இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, அணுசக்தி மற்றும் நீர் மின்சாரம் போன்ற நீண்டகால தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் அடிமைத்தனம் அதிகரிப்பு

இந்தியாவில், டிஜிட்டல் அடிமைத்தனம் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும்; இதை எதிர்கொள்ள போதிய தரவுகள் நம்மிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது ஆய்வறிக்கை.

ஆதிக்கம்

கடந்த 2023 - 24ல், நாட்டின் தேசிய வருவாயில் டிஜிட்டல் பொருளாதாரம், 11.74 சதவீத பங்களிப்பை வழங்கியது. இது 2024 - 25ம் நிதியாண்டில் 13.42 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பயன்பாடு மற்றும் அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய் பெருமளவில் அதிகரிப்பதைக் காட்டுகிறது.

முக்கிய பரிந்துரைகள்
வயது கட்டுப்பாடு:

'பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் சூதாட்ட செயலிகளை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு கொண்டு வர வேண்டும்.

நிறுவனங்களின் பொறுப்பு:
வயது சரிபார்ப்பு மற்றும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்துவதில், சமூக வலைதளங்கள், சூதாட்ட செயலிகள் மற்றும் விளம்பர நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்.

குடும்பங்களின் பங்கு:
குடும்பங்கள் திரை நேரக்கட்டுப்பாடு, மின்னணு சாதனங்கள் இல்லாத நேரங்கள் மற்றும் ஆப்லைன் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.

பாதிப்புகள்
கல்வி மற்றும் வேலை:

கவனச்சிதறல், துாக்கமின்மை மற்றும் ஒருமுகப்படுத்துதல் சிக்கல் ஆகியவற்றால் மாணவர்களின் கல்வித்திறனும், தொழிலாளர்களின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படுகிறது.

சமூக உறவுகள்:
நேரடி நட்பு வட்டாரங்கள் குறைதல், சமூக பங்கேற்பு குறைதல்
மனநலம்: கட்டாயமான டிஜிட்டல் பயன்பாடு, கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக சைபர் புல்லிங் போன்ற செயல்களால், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சவால்கள் மற்றும் திட்டங்கள்
தரவு பற்றாக்குறை:

நம் நாட்டில், டிஜிட்டல் அடிமைத்தனத்தின் தாக்கம் குறித்த தேசிய அளவிலான தரவுகள் இல்லை. தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் முன்னெடுக்கும் மனநல ஆய்வு, இதற்கு தீர்வாக அமையும் என நம்பலாம்.

டெலிமானஸ் விரிவாக்கம்:
இந்தியாவின் தேசிய மனநல திட்டமான, 'டெலிமானஸ்' வாயிலாக டிஜிட்டல் அடிமைத்தனத்துக்கு ஆலோசனைகளை வழங்கலாம். இதற்காக தனிப்பயிற்சி பெற்ற ஆலோசகர்களை பள்ளி மற்றும் கல்லுாரிகளுடன் இணைக்க வேண்டும்.

டிஜிட்டல் கட்டுப்பாடு:
பெரியவர்கள் தாமாகவே முன்வந்து குறிப்பிட்ட நேரங்களில் சாதனங்களை தவிர்ப்பது, கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்களில், 'தொழில்நுட்பம் இல்லாத மண்டலங்களை' உருவாக்குவது போன்றவை அவசியமாகும்.

டிஜிட்டல் டீடாக்ஸ்:
கர்நாடகாவின், 'டிஜிட்டல் டீடாக்ஸ் மையம் - திரைகளுக்கு அப்பால்' போன்ற முன்னெடுப்புகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பெரிதும் உதவும்.

கல்வி திட்டங்கள்: தமிழகத்துக்கு பாராட்டு

பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கைகள் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளன.

1. இல்லம் தேடி கல்வி

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க கொண்டு வரப்பட்ட இத்திட்டம், தனிச்சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், நேரடி கற்றல் முறைக்கு மாற்றாக எதுவும் இருக்க முடியாது என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது. தன்னார்வலர்களால் மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக கற்பிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது

2. டிம் டிம் தாரே

தமிழகத்தில் கடந்த 2009ல் துவங்கப்பட்ட இந்த வாழ்வியல் திறன் கல்வித்திட்டம், தற்போது இந்தியா முழுதும் விரிவடைந்துள்ளது. குஜராத் உட்பட பல மாநிலங்களில், 10 கோடி மாணவர்களை இத்திட்டம் சென்றடைந்துள்ளது.

மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் இதுகுறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் மற்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளிலும் இது செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் தளங்கள் வாயிலாகவும் கற்பிக்கப்படுகிறது.

3. பிரேரணா மாதிரி


ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவுடன் இணைந்து தமிழகத்திலும் 'சிக் ஷனா பவுண்டேஷன்' வாயிலாக இது செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் 'சக மாணவர்கள் கற்றல்' மற்றும் குழு வேலைகளுக்கு இது அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

தமிழகத்தின் கல்வி மாதிரிகள், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல்; ஆசிரியர்களை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களை வளர்க்கவும் உதவுகின்றன என்பதை, இந்தப் பொருளாதார ஆய்வு அங்கீகரித்துள்ளது.

விவசாயத்தில் மாநிலங்கள் புதுமை

அசாம்

அசாம் மாநில பாசன திட்டத்தின் கீழ், புதிய திட்டங்கள் மற்றும் சோலார் பம்ப்செட் வாயிலாக, 24.28 சதவீத பாசன பரப்பை அதிகரித்துள்ளது.

ஆந்திரா

ட்ரோன்களை பயன்படுத்தி ஜி.ஐ.எஸ்., வாயிலாக நிலத்தை மறு அளவீடு செய்து, தீர்க்கப்படாத 86,000 நிலத்தகராறுகளை 6,901 கிராமங்களில் தீர்த்து வைத்துள்ளது ஆந்திர அரசு.

உத்தர பிரதேசம்

நிலத்தடி நீரை எடுப்பதற்கு விதிமுறைகளை கடுமையாக்கியதன் வாயிலாக, நிலத்தடி நீர் செறிவூட்டல் படிப்படியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா

விவசாயிகளுக்காக 'ப்ரூட்ஸ்' என்ற தரவு தளத்தை உருவாக்கி, நேரடி பணம் பெறும் முறை, பயிர் அளவீடு, எம்.எஸ்.பி., அரசு திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஒரே தளத்தின் வாயிலாக, 55 லட்சம் விவசாயிகள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

பீஹார்

முதல்வரின் ஈர நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தண்ணீர் தேங்கும் ஈர நிலங்களில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி, 22 மாவட்டங்களில் 1,933 ஹெக்டேர் நிலத்தில் மீன் உற்பத்தியை பெருக்கியுள்ளது பீஹார் அரசு.

மத்திய பிரதேசம்


மண்டிகளில் நெரிசலை குறைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதார விலையில் டிஜிட்டல் முறையில் விளைபொருட்களை வாங்கி, 1.09 லட்சம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது அம்மாநில அரசு.

ஜார்க்கண்ட்

ஜி.ஐ.எஸ்., வாயிலாக காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரியபடுத்துதல், பண்ணை அளவில் என்ன நடக்கும் என விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது.

மாறும் ஏற்றுமதி கொள்கை

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வர்த்தக கொள்கை, விலை மற்றும் உற்பத்தி அடிப்படையில், குறுகிய கால நோக்கங்களுக்காக மாற்றி அமைக்கப்படுகிறது.

ஏற்றுமதி தொடர்பாக அடிக்கடி கொள்கையை மாற்றுவது வினியோக தொடரை பாதிக்கும். நிச்சயமற்ற சூழல் காரணமாக வெளிநாட்டில் வாங்குவோர் வேறு சந்தைக்கு நகர்வர். ஒருமுறை சந்தையை இழந்துவிட்டால், மீண்டும் கைப்பற்றுவது கடினம். அடுத்த நான்கு ஆண்டுகளில் வேளாண், கடல்சார் பொருட்கள் மற்றும் உணவு, பானம் ஆகிய மூன்றும் சேர்த்து, மொத்த ஏற்றுமதி 9 லட்சம் கோடி ரூபாயை எட்டும்.

உலக சந்தையில் வாகனங்கள்

நாட்டின் வாகன ஏற்றுமதி அதிகரித்து இருப்பது, இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை, உலகளாவிய சந்தைகள் ஏற்றுக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 53 லட்சம் பயணியர், வர்த்தக மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வாகனங்கள் ஏற்றுமதி இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனாவுக்கு பின், தேவை அதிகரிப்பால், உற்பத்தி மற்றும் விற்பனை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்கள் உற்பத்தி 33 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
குறைவாக நீடிக்கும் பணவீக்கம்

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தின் சராசரி 1.70 சதவீதமாக உள்ளது. கடந்த 2012ஐ அடிப்படையாக கொண்ட, நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்க கணக்கீடு முறை துவங்கியதிலிருந்து, இதுவே மிகக்குறைந்த பணவீக்கம் ஆகும்.

அதே நேரத்தில் முதல் ஆறு மாதங்களின் சராசரி ஜி.டி.பி., வளர்ச்சி எட்டு சதவீதமாக உள்ளது. வளர்ச்சி அதிகமாக உள்ளபோதிலும் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. இது உள்நாட்டு பொருளாதார அடிப்படை காரணிகள் வலுவாக இருப்பதை உணர்த்துகிறது. அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் சற்றே அதிகரித்தாலும், தொடர்ந்து கட்டுக்குள்ளாகவே இருக்கும்.

ஆய்வறிக்கை துளிகள்:

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்:

உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், வெளிநாட்டு சந்தையை அணுகுவதற்கு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், நாட்டின் பொருளாதார உத்திகளுக்கு ஆதரவளிக்கும். ஏற்றுமதி சார்ந்துள்ள நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை அதிகரித்து, உலகளாவிய வினியோக தொடருடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்பந்தம் உதவுகிறது.

மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், சர்வதேச அளவில் போட்டியிட நிறுவனங்கள் தயார்படுத்துவதுடன், ஏற்றுமதி போட்டித்திறனை மேம்படுத்தி, உற்பத்திக்கு முன்னுரிமை மற்றும் சலுகைகளை சார்ந்திருப்பதை குறைக்க உதவிபுரியும்.

உண்மையான வலிமையை ரூபாய் காட்டவில்லை

இந்தியாவின் வலிமையான பொருளாதார அடிப்படைகளை ரூபாய் மதிப்பு துல்லியமாக பிரதிபலிக்கவில்லை. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில் 92 ரூபாயாக சரிந்தது. இது சர்வதேச சூழலால் மட்டுமே. ஆனால், வலுவான அடிப்படை காரணிகள் சாதகமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான காரணிகள்

1. பொருளாதார வளர்ச்சி, எதிர்கால கணிப்புகள் சாதகம்

2. கட்டுப்பாட்டுக்குள் பணவீக்கம்

3. பருவமழை சாதகம்

4. வலுவாக இருக்கும் இந்திய வங்கிகள்

5. கார்ப்பரேட் நிறுவனங்களில் சீரான நிதிநிலை

6. வெளிநாட்டு கடன்கள் குறைவாக நீடிப்பு

7. கச்சா எண்ணெய் விலை உயராததால், பணவீக்கம் அதிகரிக்காது.

சவால்கள்


1. அன்னிய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட வாய்ப்பு

2. சர்வதேச நிலையற்ற தன்மை.

ஆர்.டி.ஐ., சட்டம் மறுஆய்வு

தகவல் அறியும் உரிமை சட்டத்தை, மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இது சட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போக செய்வதற்காக அல்ல. மாறாக, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கவும், நாம் கற்றுக்கொண்ட பாடங்களை சேர்க்கவும்தான்.

இந்த சட்டத்தின் உண்மையான நோக்கத்தில் இருந்து மாறாமல் வலுப்படுத்தவும் மறு ஆய்வு அவசியம். அரசு ஒரு விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை அது தொடர்பான யோசனை, குறிப்புகள் வெளியிடுதல், பொது நலனுக்கு சம்பந்தமில்லாத அரசு ஊழியர்களின் தனிப்பட்ட விபரங்களை வெளியிடுதல் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

புதிய பங்கு வெளியீட்டில் அசுர வளர்ச்சி

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், இந்திய பங்குச்சந்தைகள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளன. இதற்கு, வலுவான பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்தது, செபியின் சட்ட சீர்திருத்தங்கள் ஆகியவையே காரணம்.

* சந்தை வளர்ச்சி:

நிப்டி 50 மற்றும் சென்செக்ஸ் முறையே 11.10% மற்றும் 10.10% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

* உலகளாவிய முன்னிலை:
புதிய பங்கு வெளியீடுகளில் இந்தியா உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.

* முதலீட்டாளர் எண்ணிக்கை:
முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. மொத்த டிமேட் கணக்குகள் 21.60 கோடியாக அதிகரித்துள்ளது.

* சேமிப்பு மாற்றம்:
இந்தியக் குடும்பங்களின் நிதிச் சேமிப்பில், பங்குச் சந்தை முதலீட்டின் பங்கு 15.20% ஆக அதிகரித்துள்ளது.

* உள்நாட்டு பலம்:
அன்னிய முதலீடுகள் வெளியேறுவதை ஈடுகட்டும் வகையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 18.30% ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

எத்தனால் கலப்பால் சேமிப்பு

பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் வாயிலாக, 1.44 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

அரசின் எத்தனால் எடுக்கும் திட்டம், கரும்பு சக்கையிலிருந்து மக்காச்சோளத்துக்கு மாறியிருக்கிறது. மக்காச்சோளம் உற்பத்தி கடந்த 2016ல் இருந்து இதுவரை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், சோயாபீன், சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தி குறைந்து போனது. பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியும் குறைந்து வருகிறது. நீண்டகால உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் அடிப்படையில் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீடு தேடி சப்ளை செய்வோருக்கு ஆதரவு தேவை

உணவு மற்றும் குவிக் காமர்ஸ் டெலிவரியில் ஈடுபட்டு வரும் 'கிக்' பணியாளர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர், மாதத்துக்கு 15,000 ரூபாய்க்கு குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களின் பொருளாதார சூழலை மேம்படுத்த, அரசு கொள்கை ரீதியாக தலையிட வேண்டும்.

ஒரு மணிநேரத்துக்கு அல்லது ஒரு டெலிவரிக்கு என குறைந்தபட்ச தொகையை நிர்ணயிக்க வேண்டும். காத்திருப்பு நேரத்துக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வழக்கமான பணியாளர்களுக்கும், டெலிவரி பணியாளர்களுக்கும் இடையே சம்பள இடைவெளியை குறைக்க, இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.







      Dinamalar
      Follow us