sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்தியக் கடற்படையில் பணிபுரிந்தால்...

/

இந்தியக் கடற்படையில் பணிபுரிந்தால்...

இந்தியக் கடற்படையில் பணிபுரிந்தால்...

இந்தியக் கடற்படையில் பணிபுரிந்தால்...


அக் 21, 2014 12:00 AM

அக் 21, 2014 12:00 AM

Google News

அக் 21, 2014 12:00 AM அக் 21, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியக் கடற்படை ஒரு வலிமை பொருந்திய, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். கடற்பரப்பில் மட்டுமின்றி, அதன் மேலேயும், கீழேயும் செயல்படுவதற்குரிய வலுவையும் கொண்டுள்ளது நமது கடற்படை.

இந்திய கடற்படை அதிகாரி

கடற்படையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பினைப் பெறும் ஒரு இளம் அதிகாரி, நல்ல நவீன போர்க் கருவிகள் மற்றும் இதர வகை கருவிகளுடன் பணியாற்றும் வாய்ப்பினை இளம் வயதிலேயேப் பெறுவதால், அவருக்கு பின்னாளில், அத்துறையில் சிறப்பான அனுபவம் கிடைக்கிறது.

நுட்பமான தொழில்நுட்பம் மற்றும் ராணுவ செயல்பாடுகள் ஆகிய இரண்டும் இணைந்த இந்திய கடற்படைப் பணி, சவால் நிறைந்த ஒன்று. இத்துறையில், ஒருவருக்கு சிறந்த தனிமனித அனுபவம் கிடைப்பது மட்டுமின்றி, தனது திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்தி பெயர்பெறுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இப்பணி, தனிப்பட்ட, நிதிசார்ந்த மற்றும் உணர்வு ரீதியான பாதுகாப்பை ஒருவருக்கு அளிக்கிறது.

தேவையான திறன்கள்

* வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன்
* தைரியம்
* தலைமைத்துவப் பண்பு
* தியாகம் செய்யும் மனப்பாங்கு
* நல்ல உடற்கட்டு
* சுயமாக சிந்திக்கும் பாங்கு
* கட்டுக்கோப்பாக வழிநடத்தும் திறன்
* ஒழுக்கம்
* தீர்மானமாக இருத்தல்
* எளிதில் உணர்ச்சிவசப்படாமை மற்றும் பொறுமை
* தளராது போர்புரியும் ஆற்றல்
* தெளிவான சிந்தனை
* சிறப்பாக வெளிப்படுத்தும் தன்மை
* நன்கு முடிவெடுக்கும் திறன்
* தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவு

கடற்படையில் இணைதல்

கடற்படையில் சேர வேண்டுமெனில், ஆண்டிற்கு இருமுறை UPSC நடத்தும் NDA எழுத வேண்டும்.

நீங்கள் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தால் NDA தேர்வை எழுதலாம்.

திருமணமாகாத இளம் ஆண்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். அதற்கான வயது 16.5 முதல் 19க்குள் இருக்க வேண்டும்.

இத்தேர்வு, எழுத்துத்தேர்வு, SSB நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். இந்த மூன்றிலும் தேவையான அளவு நீங்கள் செயல்பட்டிருந்தால்தான், NDA தேறியதாக அறிவிக்கப்படுவீர்கள். நீங்கள் பட்டப் படிப்பு முடித்திருந்தால், UPSC நடத்தும் CDS தேர்வை எழுதலாம்.

கடற்படை தலைமையகங்கள்

இந்தியா 3 புறம் கடலால் சூழப்பட்ட நாடு. இந்திய கடற்படைக்கு 3 இடங்களில் தலைமை அலுவலகங்கள் உள்ளன. அவை,

* மேற்கு கடற்படை தலைமையகம் - மும்பை
* கிழக்கு கடற்படை தலைமையகம் - விசாகப்பட்டணம்
* தெற்கு கடற்படை தலைமையகம் - கொச்சி

பணி நிலைகள்

எக்சிகியூடிவ் பிரிவு

இப்பிரிவில் பணிபுரியும் ஒருவர், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படை சார்ந்த விமானங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். அதேசமயம், இவர், கீழ்வரும் அம்சங்களில் சிறப்பான பயிற்சியைக் கொண்டிருக்க வேண்டும்.

Gunnery & Missiles
Navigation and Direction
Anti-Submarine Warfare
Communications
Pilot
Observer
Submarine
Hydrography
Diving

பொறியியல் பிரிவு

இன்றைய நவீன கப்பல்கள், நீர்மூழ்கிகள் மற்றும் விமானங்களில், நுட்பமான தொழில்நுட்ப அம்சங்கள் அதிகம் உண்டு. எனவே, ஒரு பொறியியல் பிரிவு அதிகாரி என்ற முறையில், இத்தகைய தொழில்நுட்ப அம்சங்களை சரியான முறையில் பராமரித்து, பாதுகாத்து, அவை சீராக இயங்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்பிரிவில் பணியாற்றுவதன் மூலம், ஒரு பெரிய கப்பல் தளம் மற்றும் உள்நாட்டு கடல் சாதன உற்பத்தி அமைப்புகளிலும் பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, ஒருவர் தன் திறமைகளை செழுமையாக்கிக் கொள்ள முடியும்.

எலக்ட்ரிகல் பிரிவு

ஒரு போர்க்கப்பல் என்பது, ஏவுகணை அமைப்பு, கடலுக்கடியில் வைத்து இயக்கக்கூடிய ஆயுதங்கள், ரேடார் மற்றும் ரேடியோ தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை பிரதானமாகக் கொண்டது. மேற்கண்ட அம்சங்கள், கணினி அடிப்படையிலான அல்லது கணினி உதவியில் செயல்படக்கூடிய மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறையின் நவீன அம்சங்களைக் கொண்டதாக இருப்பவை.

ஒரு போர்க்கப்பலுக்கு, எந்த நேரத்திலும் நெருக்கடியான ஒரு பணி கொடுக்கப்படலாம். அப்பணி, எதிரியுடன் சண்டையிடுவதாகக்கூட இருக்கலாம். அந்த நிலைமை எப்போது ஏற்படும் என்றே தெரியாது. எனவே, மேலே சொன்ன உபகரணங்கள், எப்போதும் சிறப்பான நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, கடற்படையில் பணியாற்றும் ஒரு எலக்ட்ரிகல் அதிகாரி, முக்கியப் பொறுப்பைக் கொண்டவராக இருக்கிறார். தகுதியுள்ள நபர்கள், தங்களின் திறமைகளை இன்னும் சிறப்பாக்கிக் கொள்ள, முதுநிலைப் படிப்புக்கான வாய்ப்புகளை கடற்படை வழங்குகிறது.

கல்விப் பிரிவு

கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதே இப்பிரிவின் வேலை. ஒரு பிரிவில் பணியாற்றுகின்ற நபர்களின் திறமையைப் பொறுத்தே, அப்பிரிவின் செயல்பாடு அமையும். எனவே, இப்பிரிவின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

அறிவியல் மற்றும் அமைப்பு முறையிலான வழிகாட்டுதல்களுக்கு இப்பிரிவு அதிகாரிகள் பொறுப்பாகிறார்கள். ஒரு கல்விப் பிரிவு அதிகாரி என்பவர், எக்சிகியூடிவ் பிரிவினுடைய அனைத்து அம்சங்களிலும் ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்ள முடியும்.

எப்படி சேரலாம்?

கடற்படையின் பணி வாய்ப்புகள் குறித்து Employment News உள்பட, அனைத்து முக்கிய தேசிய மற்றும் மாநில செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுக்கப்படும்.

Permanent Commission -க்கான ஆள் சேர்ப்பு, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் எழுதும் NDA தேர்வு மூலமாகவும், இந்தியன் நேவல் அகடமி கேடட் ஆள் சேர்ப்பு மற்றும் CDSE ஆள்சேர்ப்பு ஆகியவை எழுத்துத் தேர்வின் மூலமாகவும் நடைபெறுகின்றன. இதர அனைத்து நிரந்தர Commission ஆள்சேர்ப்பு மற்றும் குறுகியகால Commission ஆள்சேர்ப்பு ஆகியவற்றுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆள் சேர்ப்பு நடைபெறும்.

கலாச்சார ஒருங்கிணைப்பு

பல்வேறு நாடுகள் ஒருங்கிணைந்த ஒரு துணைக்கண்டமாக இந்தியா விளங்குகிறது. இந்திய கடற்படை, தனக்குத் தேவையான திறன்வாய்ந்த நபர்களை, அனைத்து பிரிவுகளிலிருந்தும் தேர்வுசெய்து கொள்கிறது. கடற்படையில் தேர்வு செய்யப்படும், பல்வேறு இன, மத மற்றும் மொழிகளைச் சேர்ந்த நபர்கள் அனைவரும், எந்த வேறுபாடுமில்லாமல் நடத்தப்படுகிறார்கள்.

அனைவருக்கும், அவர்களின் திறமைக்கேற்ற வகையிலான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவரின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை வைத்தே அவருக்கான பதவி உயர்வு உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கப்படுகிறதே தவிர, அவர் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர் என்பதை வைத்தல்ல.

சம்பளம்

ஒரு கடற்படை அதிகாரியின் ஊதியம், அவர் எந்தப் பிரிவில் மற்றும் எந்தப் பணி நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது. அனைவருக்கும், அனுபவம் மற்றும் பதவி உயர்வைப் பொறுத்து, சம்பளம் அதிகரிக்கிறது.

ஒருவர், குறிப்பிட்ட ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வுபெற்று செல்கையில், அவர் பென்ஷன் பெறுகிறார்.

சலுகைகள்

* அதிகாரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ வசதிகள்
* உணவகம், கிளப் மற்றும் விளையாட்டு வசதிகள் ஆகியவை, மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன
* அருமையான இடங்களில், அரசின் சார்பாக தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன
* அனைத்து சலுகைகளுடனும் பென்ஷன் வழங்கப்படுகிறது
* வருடத்திற்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது
* 20 நாட்கள் casual leave வழங்கப்படுகிறது
* 300 நாட்கள் வரை leave encashment உண்டு
* இலவச ரேஷன் சலுகையும் உண்டு

வாய்ப்புகள்

இந்திய கடற்படை பணி வாய்ப்புகள் சிறப்பானவை மட்டுமல்ல, சாகசம் நிறைந்தவையும் ஆகும். இது பல்வேறு சலுகைகளைக் கொண்ட மதிப்பு வாய்ந்த பணியுமாகும். எனவே, இதைவிட ஒருவர் வேறென்ன புதிதாக எதிர்பார்க்க முடியும்? நீலக்கடலைப் பார்க்க நீங்கள் தயாரா?






      Dinamalar
      Follow us