அக் 01, 2013 12:00 AM
அக் 01, 2013 12:00 AM
நேர்முகத்தேர்வில் உங்களிடம் கேள்வி கேட்பவர்கள், நீங்கள் சரியாக பதிலளிக்கிறீர்களா அல்லது தவறாக பதிலளிக்கிறீர்களா என்பதை மட்டும் கவனிப்பதில்லை. கூடுதலாக, அவர்கள் கேள்வி கேட்டவுடன், பதிலளிக்க நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பார்க்கிறார்கள்.
அதாவது, விரைவாக பதில் சொல்கிறீர்களா? அல்லது தாமதமாக பதில் சொல்கிறீர்களா? என்பதை கவனிக்கிறார்கள். இதன்மூலம், உங்களின் விழிப்புத்திறன்(alertness) சோதிக்கப்படுகிறது. அதற்காக, விரைவாக பதிலளிக்கிறேன் என்ற பேரில், முந்திரிக்கொட்டைப் போன்று, அவர் கேள்வியைக் கேட்டு முடிக்கும் முன்பாகவே, நீங்கள் பேசத் தொடங்கிவிடக்கூடாது. இதன்மூலம், உங்களின் மதிப்பு பெருமளவில் குறைந்துவிடும்.
அவர்கள் கேட்கும் கேள்வியில் உங்களுக்கு தெரியாதவற்றை, தயக்கமின்றி, தெரியாது என்று ஒத்துக்கொள்ளுங்கள். யோசிக்கிறேன் என்ற பெயரில் நேரத்தைக் கடத்தக்கூடாது. தெரியாது என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வதன் மூலம், கமிட்டி உறுப்பினர்கள் அடுத்தக் கேள்வியை கேட்பதற்கு தயாராகலாம்.
சில கேள்விகளுக்கு, நீங்கள் மிகச் சரியாக பதிலளித்தபோதும் கூட, உங்களை குழப்பி, உங்களின் விழிப்புணர்வை சோதிக்கும் வகையில், நீங்கள் அளித்த பதில் சரி என்று நினைக்கிறீர்களா? என அவர்கள் உங்களை மடக்க முயற்சிக்கலாம்.
அதுபோன்ற நேரத்தில், உங்களின் பதில் சரி என்று தெரிந்தால், ஆம், நிச்சயமாக, 100% சரி என்று நம்பிக்கையுடன் கூற வேண்டும். அதைவிடுத்து, சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம் என்று சொல்லக்கூடாது. இவ்வாறு கூறும்போது, நீங்கள் எதிலுமே உறுதியில்லாதவர் மற்றும் குறைந்தபட்சம் உங்களின் சொந்த பதிலில்கூட சரியான தெளிவின்றி இருக்கிறீர்கள் என்று அவர்கள் நினைக்க வழியேற்படும்.
மேலும், இப்படிப்பட்ட ஒருவரிடம், நம்பிக்கையுடன், எப்படி ஒரு பொறுப்பை ஒப்படைப்பது என்று அவர்கள் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணி வாய்ப்பு, பறிபோகும் நிலை ஏற்படும்.
உங்களின் நேர்முகத் தேர்வு நேரத்தின்போது, தேநீர் இடைவேளை நேரம் குறுக்கிடலாம். எனவே, நேர்முகத் தேர்வு அறைக்குள், அங்கிருக்கும் அனைவருக்கும், உங்களுக்கும் சேர்த்து, தேநீர் கொண்டுவரப்பட்டு பரிமாறப்படும். உங்களுக்கு தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்தால், தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக, இதுபோன்ற நேர்முகத்தேர்வு செயல்பாடுகள், தேநீர் இடைவேளை என்ற காரணத்திற்காக, நிறுத்தப்படாது. அனைவரும் தேநீர் எடுத்துக்கொண்ட பின்னர், தொடர்ந்து நடைபெறும். அதுபோன்ற நேரங்களில், பொதுவாக, சாதாரண முறையிலான கேள்விகளே கேட்கப்படும். சீரியஸ் கேள்விகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
இதுபோன்ற நேரங்களிலும் நீங்கள் கவனமாக செயல்படுவது முக்கியம். தேநீர் அருந்துகையில், உங்களின்மீது பதட்டத்தில், தேநீர் சிந்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், குடித்துவிட்டு கோப்பையை வைக்கும்போது, அதிக சத்தமாக வைக்கக்கூடாது மற்றும் கோப்பை தவறி கீழே விழுந்துவிடக்கூடாது.
மேலும், தேநீர் அருந்தி முடித்தப்பின்னர், மேசையின் மீது சிறிது தேநீர் துளிகள் சிந்தியிருக்கலாம். எனவே, உங்களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கும்போது, நீங்கள் கவனிக்காமல் அதன்மீது வைத்துவிடக்கூடாது மற்றும் உங்கள் எதிரே அமர்ந்திருக்கும் கமிட்டியினர் குடித்து முடித்து, மேசையின்மீது வைத்திருக்கும் காலி கோப்பைகளை தள்ளிவிட்டுவிடவும் கூடாது.
எங்கும் கவனம், எதிலும் கவனம், எப்போதும் கவனம். இதுதான் நேர்முகத் தேர்வின் வெற்றிக்கான தாரக மந்திரம்.
