ஜூலை 12, 2011 12:00 AM
ஜூலை 12, 2011 12:00 AM
மருத்துவத் துறையில் நோய் கண்டறியும் பகுப்பாய்வு சோதனை என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நோயை குணப்படுத்துவதற்கான முதல் படிநிலை இதுவாகும். எக்ஸ்ரே, ப்ளூரோஸ்கோபி, அல்ட்ராசவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, ஆங்கியோகிராபி மற்றும் பி.இ.டி. தொழில்நுட்பம் போன்றவைகளைப் பயன்படுத்தி, நோய் மற்றும் உடலுறுப்புகளின் சிக்கல்களை அறிவது "ரேடியோகிராபி" எனப்படும். எக்ஸரே கண்டுபிடிக்கப்பட்டவுடன், 1895ம் ஆண்டு இந்தத் துறை உருவானது. பின்னர் மருத்துவ சோதனை முறையில் பல்லாண்டு காலமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ரேடியோகிராபி 2 வகைப்படும், டயக்னோஸ்டிக் மற்றும் தெரபெடிக். டயக்னோஸ்டிக் ரேடியோகிராபி என்பது, ரேடியோ இமேஜிங் சாதனங்களை இயக்கி, முடிவுகளை விளக்குவதாகும். தெரபெடிக் ரேடியோகிராபி என்பது ரேடியேஷன் தொழில்நுட்பத்தின் மூலமாக, கேன்சர், அல்சர் மற்றும் கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதாகும். படிப்பின் விவரங்கள் ரேடியோகிராபி என்பது துணை மருத்துவ அறிவியலின் ஒரு பகுதி. எனவே இதைப் படிக்க விரும்பும் மாணவர், பள்ளிப் படிப்பில் பயாலஜி, பிசியாலஜி மற்றும் அனாடமி போன்ற படிப்புகளைப் படித்திருந்தால்தான் இத்துறையில் சாதிக்க முடியும். இளநிலை அளவில் ஒருவர் பி.எஸ்சி ரேடியோகிராபி படிப்பை மேற்கொள்ளலாம். இதில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுடன் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், ஒரு வருட சான்றிதழ் படிப்பு மற்றும் 2 வருட டிப்ளமோ படிப்பு போன்றவை இத்துறையில் நுழைவதற்கான சிறந்த வாய்ப்புகளாக உள்ளன. அதேசமயம், இவற்றைவிட பட்டப் படிப்பிற்கே மதிப்பு அதிகம். இத்துறையில் நுழைபவர்கள் பொதுவாக இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், முதுநிலை மற்றும் பிஎச்.டி படிப்புகளை முடிப்பது அரிதான விஷயமாக உள்ளது. முக்கிய கல்வி நிறுவனங்கள் இத்துறையில் அதிகளவில் நிபுணர்கள் தேவைப்படுவதால், இந்தியாவில் ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, டாக்டர். எம்.வி.ஷெட்டி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் - மங்களூர். டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - பெங்களூர் மருத்துவ அறிவியலுக்கான பல்கலைக்கழக கல்லூரி - டெல்லி(பல்கலை). மோகன் டாய் ஓஸ்வால் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் - லூதியானா மருத்துவ அறிவியலுக்கான அகில இந்திய கல்வி நிறுவனம் - டெல்லி அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி - திப்ருகர் காந்தி மருத்துவமனை - செகந்திராபாத் ஜெனரல் மருத்துவமனை - உதய்ப்பூர் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி - சிம்லா மன்னர் ஜார்ஜ் மருத்துவமனை - விசாகப்பட்டினம் வேலை வாய்ப்புகள் ரேடியோகிராபி நிபுணர்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மருத்துவதுறையில் பல நுட்பமான இயந்திரங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் இத்துறை நிபுணர்களின் தேவை அதிகரிக்கிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகள் உண்டு. தனியார் மருத்துவ மனைகள் தவிர்த்து, டயக்னோஸ்டிக் மையங்கள் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஆகியவற்றில் ரேடியோகிராபி நிபுணர்கள் அதிக வேலை வாய்ப்பை பெறலாம். மேலும் இத்துறையில் சுயதொழில் வாய்ப்புகள் மிகவும் அதிகம். சொந்தமாக டயக்னோஸ்டிக் மையங்களை அமைத்து நடத்தலாம். பொருத்தமான தகுதியுடைய நபர்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இதுதொடர்பான பிற கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணியாற்றலாம். மேலும் இத்துறையில் ஆராய்ச்சி வாய்ப்புகளும் உள்ளன. இந்திய ரேடியோகிராபர்களுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. சம்பளம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ரேடியோகிராபர்கள் ஆரம்பத்தில் ரூ.8000 முதல் ரூ12000 வரை பெறுகிறார்கள். தனியார் துறையில் அபரிமிதமான சம்பளம் கிடைக்கிறது. 2 வருட அனுபவம் இருந்தாலே, ஒரு நல்ல ரேடியோகிராபர் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை எதிர்பார்க்கலாம். இத்துறையில் தொடர்ச்சியான ஏற்றம்காண ஒருவர் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரவேண்டும். இத்துறையில் பட்டப்படிப்பு முடிக்காமல், சான்றிதழ் அல்லது டிப்ளமோ படித்திருந்தால், ஒரு ரேடியோகிராபருக்கு உதவியாளராய் சேர்ந்து, மாதம் ரூ.3000 முதல் ரூ.6000 வரை ஊதியமாகப் பெறலாம். அதேசமயத்தில், இத்துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் எந்தப் பணி அனுபவமும் இல்லாமலேயே ஆரம்ப ஊதியமாக ரூ.20000 -க்கும் மேலாக பெறலாம். அனுபவம் வந்துவிட்டால் சம்பளம் மிகவும் அதிகம். வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய ரேடியோகிராபர்கள், நல்ல சம்பளத்துடன் சேர்த்து பல சலுகைகளையும் பெறுகிறார்கள். இத்துறைக்கான எதிர்கால வாய்ப்புகள் டெலி-ரேடியோலஜி என்ற நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மெடிக்கல் இமேஜிங் தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. எனவே இத்துறையில் பணிபுரிபவர் காலத்திற்கேற்ப தனது அறிவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒரு நோயாளியை குணப்படுத்துவதற்கான முதல் படியாக இந்த ரேடியோகிராபி விளங்குவதால், மருத்துவம் என்ற சக்கரத்தின் அச்சாணியாக ரேடியோகிராபர்கள் திகழ்கிறார்கள்.
