தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தற்கொலைக்காகவா ஆறாம் அறிவு?

தற்கொலைக்காகவா ஆறாம் அறிவு?

தற்கொலைக்காகவா ஆறாம் அறிவு?


அக் 23, 2011 12:00 AM

அக் 23, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 23, 2011 12:00 AM அக் 23, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தற்கொலை எண்ணம் என்பது மனித வாழ்வின் அனைத்து வயதிலும் வரக்கூடிய ஒன்றாக உள்ளது. இதற்கான காரணங்களை நாம் வகைப்படுத்துவது கடினம். இந்த இயந்திரமய உலகில், மாணவப் பருவத்தினரிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. போட்டி நிறைந்த வாழ்க்கைச் சூழல்களும் தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கான ஒரு காரணமாக உள்ளது.

தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை, ஆசிரியர் அடித்ததால்/திட்டியதால் மாணவர் தற்கொலை, விரும்பிய படிப்பை மேற்கொள்ள முடியாததால் மாணவர் தற்கொலை, ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை, நண்பர்கள் கேலி செய்ததால் மாணவர் தற்கொலை உள்ளிட்ட செய்திகளை அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்த சம்பவங்களை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

மாணவர் நிலை என்று மட்டும் பிரித்துப் பார்க்காமல், ஒரு மனிதனை தற்கொலை என்ற எண்ணத்திலிருந்து மீட்பது எவ்வாறு என்பது குறித்து உளவியல் ரீதியாக இக்கட்டுரை அலசுகிறது. இந்த அம்சங்களை மாணவர்கள் தெரிந்துகொண்டால், எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

குடும்பம் மற்றும் நண்பர்களின் பங்கு

தற்கொலை செய்ய நினைக்கும் ஒரு தனி மனிதனுக்கு பிரதான ஆறுதல் தரும் அம்சங்களாக, அவனது குடும்பமும், நண்பர்களும் உள்ளனர். அந்த மனிதனைப் பற்றி அவனது குடும்பமும், முக்கிய நண்பர்களும் மட்டுமே நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிக்கலில் அந்த தனிமனிதன் இருக்கையில், அவனுக்கு ஆறுதலாக பேசக்கூடிய உடனடி உரிமைப் பெற்றவர்கள் இவர்களே. ஒரு தனிமனிதன் தற்கொலை எண்ணத்தில் இருக்கையில், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவருக்கு ஆறுதல் அளித்து, நம்பிக்கை அளிப்பதில் முதன்மையான ஆட்களாக இருப்பதால், அவர்கள், தங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரையில் சில புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

சிறந்த கவனம் அவசியம்

தற்கொலை செய்யக்கூடிய நபர், தனக்கு என்ன வேண்டும் மற்றும் அதைப் பெறுவது எப்படி என்பது பற்றி பெரும் குழப்பத்தில் இருப்பார். அவர் தனது மன இறுக்கத்தை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவார். தனது குழப்பத்தை மற்றவர்களின் மூலம் தீர்க்க விரும்புவார். இந்த மனோநிலையை, சொற்கள் மூலமாக மட்டுமின்றி, முக பாவனைகள் மூலமாகவும் தெரிவிப்பார். இதை, நண்பரோ அல்லது உறவினரோ சரியாகப் புரிந்துகொண்டு, சிறப்பாக செயல்பட வேண்டும்.

பாதிப்பில் இருக்கும் நபரிடம் பேசுகையில், உனக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறதா? என்று கேட்கவும் தயங்கக்கூடாது. தற்கொலை எண்ணம் என்பது சில நிமிடங்களே நிலைத்து நிற்கக்கூடியது என்றாலும், அது ஒருவருக்கு அடிக்கடி வந்துபோகும். மேற்சொன்னது போன்ற கேள்வியைக் கேட்பதால், ஒருவரை நாமே தற்கொலைக்கு தூண்டுகிறோமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இந்தக் கேள்வியை கேட்பதன் மூலம், மூடியிருக்கும் அவரது எண்ணங்களை நீங்கள் வெளிப்புறத்திற்கு கொண்டு வருகிறீர்கள். இதன்மூலம் உங்களுக்கிடையில் விரிவான பகிர்தல் ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவரது மன உளைச்சல் குறையும். இதுபோன்ற நேரடிக் கேள்வியைக் கேட்பதன் மூலம், அவரது மனத் துன்பங்களுக்கு நீங்கள் நேரடி ஆலோசனையையும், ஆறுதலையும் தருகிறீர்கள்.

விரிவான கலந்துரையாடலின்போது, அவர் எப்போது மற்றும் எந்த முறையில் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்? மற்றும் இதற்கு முன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாரா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கின்றன. நண்பர்களுக்குள், தற்கொலைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல. மனிதளவில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் தற்கொலைப் பற்றி பேசுவதால் அவர் அதன்பால் தூண்டப்பட்டு விடுவார் என்பது தவறான கருத்து.

தனியாக விட வேண்டாம்

ஒரு மனிதன் அதிகமாக மனவருத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவர் குறுகிய காலத்தில் தற்கொலை முடிவுக்கு வரக்கூடும் என்ற நிலையிருந்தால், எக்காரணம் கொண்டும் அந்த மனிதரை தனியே விடவேண்டாம். அதுபோன்ற நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு நீங்கள் மிகச்சரியான உதவியை திட்டமிட்டு செய்ய வேண்டும். அவருக்கான தேவையை அவரேப் பார்த்துக் கொள்வார் என்று நீங்கள் இருந்துவிடக்கூடாது.

ஒரு உதவியை அவருக்கு ஏற்பாடு செய்து, அந்த உதவி சரியான நேரத்தில் அவருக்கு சென்றடைகிறதா? என்பதையும் பார்க்க வேண்டும். உங்களால் அதுபோன்ற நபரை கையாள முடியாது என்று நினைத்தால், வேறு ஒரு பொருத்தமான நபரிடம் அந்தப் பணியை ஒப்படைக்க வேண்டும். உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால், டெலிபோன் டைரக்டரி மூலமாக தற்கொலைத் தடுப்பு சேவை அமைப்புகளைத் தொடர்பு கொண்டு உதவியை நாடலாம்.

தொழில்முறையிலான உதவி

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்தான் தற்கொலை எண்ணம் கொண்ட நபர்களுக்கு முதல்நிலையிலான உதவியை செய்யக்கூடியவர்கள் என்றாலும், சில சமயங்களில் அந்த உதவிகள் போதுமானதாக இருப்பதில்லை. ஏனெனில், சில சமயங்களில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் தவறான தலையீடுகள், பாதிக்கப்பட்ட மனிதனை மேலும் சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். சிலவகையான பிரச்சினைகளுக்கு உறவினர்களாலும், நண்பர்களாலும் சரியான தீர்வுகளை தந்துவிட முடியாது. என்னதான் தெரிந்தவராக இருந்தாலும், ஒருவரின் உளவியல் சிக்கல்களை அறிந்துகொள்வது என்பது துறை ரீதியான அறிவு சம்பந்தப்பட்டது.

இந்த நேரத்தில்தான் உளவியல் நிபுணர்களை நாட வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் உளவியல் நிபுணர்களிடமிருந்து தேவையான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் மனஅழுத்தத்திற்கு பலவித மருந்துகள் உள்ளன. மனப் பிரச்சினைகளுக்கு ரசாயன பாதிப்பில்லாத "மலர் மருந்துகள்" அற்புதமான நிவாரணங்களைத் தருபவை.

நீங்கள் நாடிச்செல்லும் உளவியல் நிபுணர்கள், தற்கொலை எண்ணங்களை களைவதில் நல்ல பயிற்சிபெற்றவராகவும், பெயர் பெற்றவராகவும் இருத்தல் நல்லது. ஏனெனில், பல உளவியல் நிபுணர்களுக்கு   தற்கொலை எண்ணம் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன மற்றும் அவர்கள் அதுபோன்ற நோயாளிகளையும் ஏற்பதில்லை. இதுதொடர்பான சிறந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்க, அபாய நிலை உதவி மற்றும் தற்கொலை தடுப்பு மையங்கள் உதவி புரிகின்றன.

தற்கொலை தடுப்புக் குழுக்கள் மற்றும் அபாயநிலை உதவி மையங்கள்

அமெரிக்கா, கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று பல்வேறு அமைப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த அமைப்புகளின் முக்கிய நோக்கங்கள், தற்கொலைத் தடுப்பு, மன அழுத்தங்களை குணப்படுத்தல், பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்வதேயாகும். நம் நாட்டில், மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற அமைப்புகள் குறைவாகவே உள்ளன. மேற்கூறிய நிறுவனங்கள் பலவிதமான தற்கொலைத் தடுப்புத் திட்டங்களை வைத்துள்ளன. அவை,

பள்ளி வாயில்காப்போன் பயிற்சி

ஆசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கான இந்த திட்டத்தில், அதிகமான மன அழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை பரிந்துரைப்பது தொடர்பாக பயிற்சியளிக்கப்படுகிறது.

சமூக வாயில்காப்போன் பயிற்சி

சமூகத்திலுள்ள முக்கிய கல்வியாளர்கள், காவல்துறையினர், வணிகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்களுக்கு பயிற்சியளித்து, தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நபர்களுக்கு முறையான உதவியை பரிந்துரைக்க வைப்பதாகும்.

பொது தற்கொலை கல்வி

மாணவர்களுக்கு தற்கொலைப் பற்றிய உண்மைகளை கற்பித்து, தற்கொலை எண்ணம் தொடர்பான அறிகுறிகளை விளக்கி, அதுபோன்ற நேரங்களில் தமக்கும், பிறருக்கும் எவ்வகையான உதவிகளைப் பெற வேண்டும் என்பது தொடர்பானது இது.

சோதனையிடல் திட்டங்கள்

உபகரணத்தைப் பயன்படுத்தி ஒருவர் எந்தளவு பாதிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்று கண்டறிந்து, அவருக்கான சிகிச்சையை முடிவு செய்வது இந்த வகையாகும். இந்த உபகரணத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவரது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டறிவதும் இதில் அடங்கும்.

தொலைபேசி உதவி

தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு, தொலைபேசி மூலமாக ஆலோசனை வழங்குவது இந்தத் திட்டமாகும். குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழுத்தினால், பயிற்சிபெற்ற நிபுணர்கள் லைனில் வந்து ஆலோசனை வழங்குவார்கள்.

தற்கொலைக்குப் பிந்தைய தடுப்பு

தற்கொலை செய்துகொண்டவரின் உறவினர் அல்லது நண்பர்கள் அந்த எண்ணத்தின்பால் தூண்டப்படாமல் இருக்க இந்த சேவை நடத்தப்படுகிறது. அவர்களுடன் உறவாடி, அந்த எண்ணத்தை களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்கொலைத் தடுப்பு மையங்கள்

உலகம் முழுவதும் பல தற்கொலைத் தடுப்பு மையங்கள் பல நிலைகளில் செயல்படுகின்றன. ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்றாகவே உள்ளன. சில நாடுகளில், தற்கொலைத் தடுப்பு மையங்கள் அனைத்தும் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்றன. உதாரணமாக, இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து தற்கொலைத் தடுப்பு மையங்களும் சமாரிட்டன்(Samaritan) என்ற அமைப்பால் நடத்தப்படுகின்றன. இந்த அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக, தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு உணர்வுரீதியான ஆதரவை வழங்கி வருகிறது. இது இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு என்றாலும், சர்வதேச அமைப்பாகும்.

பொதுவாக, பல தற்கொலைத் தடுப்பு மையங்கள் 24 மணிநேர தொலைபேசி சேவை மூலம் தற்கொலைத் தடுப்பு பணியில் ஈடுபடுகின்றன. தற்கொலை எண்ணங்கள் பொதுவாக, மன அழுத்த சூழ்நிலையிலும், உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழல்களிலுமே ஏற்படுகின்றன. ஹாட்லைன் தொலைபேசி வழி(Hotline) ஆலோசகர்கள் இதுபோன்ற நிலையிலுள்ள நபர்களுக்கு பேருதவி புரிகிறார்கள். அந்த நபர்கள், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடும்வரை, இந்த ஆலோசகர்கள் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பிலிருந்து பிரச்சினையை சரிசெய்கிறார்கள். ஹாட்லைன் தொலைபேசி வழி ஆலோசகர்கள் உடனடியாக கிடைக்கக் கூடியவர்கள். இதுபோன்ற தொடர்புகளில் எதிர் நபர் யாரென்று தெரியாததால், ஒரு நபர் தனது உள்ளக்குமுறலை தயங்காமல் வெளிப்படுத்த முடியும்.

சில தற்கொலைத் தடுப்பு மையங்கள், நேரடியாக ஆட்களை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவிபுரிகின்றன. ஆனால் இதுபோன்ற மையங்களின் ஆலோசகர்களிடம், நீண்ட நாட்கள் ஒருவர் தொடர்பில் இருக்க முடியாது. காரணம், மிகவும் அவசரமான நேரங்களில் மட்டுமே இவர்கள் உதவி செய்பவர்கள் என்பதால், நீண்டநாள் தேவைகளுக்கு வேறு ஏஜென்சியுடன் தொடர்பு ஏற்படுத்தி தருகிறார்கள்.

இணையதளம்

இன்றைய நவீன யுகத்தில், தற்கொலை தடுப்பு தொடர்பான பல விஷயங்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன. தற்கொலைத் தடுப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் பல அமைப்புகள் மற்றும் சேவை நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் இணையதளங்களில் கிடைக்கின்றன. மேலும், அவசர தொடர்பு எண்களும்(ஹாட்லைன்) கிடைக்கின்றன. இவைத்தவிர, தற்கொலை எண்ணத் தடுப்பு தொடர்பான புத்தகங்கள், சஞ்சிகைகள் தொடர்பான விபரங்களும் இதில் கிடைக்கின்றன.

இணையத்தின் மூலம் ஆன்லைன் ஆலோசனை வசதியும் சாத்தியமாகிறது. மேலும், தற்கொலை எண்ணத்தினால் பாதிக்கப்படும் நபர்கள், தங்களின் எண்ண ஓட்டம் பற்றி அதே நிலையிலுள்ள பிற நபர்களிடம் கலந்துரையாடவும் முடியும். இணையத்தின் மூலம், தற்கொலை தடுப்பு சேவைப் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

வழிமுறைகளைத் தடுக்கவும்

தற்கொலை செய்ய நினைப்பவர்கள் அதற்குப் பின்பற்றும் வழிமுறைகளை தடுப்பது மற்றும் அகற்றுவது ஒரு முக்கிய அம்சம். உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டிலும் தற்கொலை விகிதாச்சாரங்கள் வேறுபட்டிருப்பது போன்று, தற்கொலை செய்யும் வழிமுறைகளும் வேறுபட்டிருக்கின்றன.

அதுபோன்ற சூழலில், அவரின் தற்கொலை வழிமுறைக்கான சாத்தியக்கூறுகளை குறைப்பது தற்கொலைத் தடுப்பில் முக்கிய அம்சமாகும். தற்கொலை வழிமுறைகளை அவர்கள் எளிதில் அணுகாத வண்ணம் தொடர்ந்த கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், சிந்தனையற்ற மனோநிலை மற்றும் உணர்வெழுச்சியின் வேகத்திலேயே பலர் தற்கொலை முடிவை எடுத்து, அதை செயல்படுத்தியும் விடுகின்றனர். எனவே, அவர்களின் முயற்சியை தாமதப்படுத்தினால், தமது தற்கொலை எண்ணத்திலிருந்து அவர்கள் மீளும் வாய்ப்புகள் அதிகம். தங்களின் முடிவு முட்டாள்தனமானது என்பதை உணர்வார்கள். எனவேதான், தற்கொலை எண்ணம் நிறைந்திருப்பவர்களை தனியாக விடக்கூடாது என்று கூறுகிறார்கள்.

தற்கொலை ஏன் கூடாது?

பொதுவாக, மதங்கள் அனைத்துமே தற்கொலையை எதிர்க்கின்றன. இறைவன் கொடுத்த உயிரைப் போக்கிக்கொள்ளும் உரிமை மனிதனுக்கு இல்லை என்ற கோட்பாடு தற்கொலையைத் தடுக்கும் செயல்பாட்டில் முக்கியமாகப் பயன்படுகிறது. வயிற்றில் இருக்கும்போது மற்றும் பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்துவிடும் குழந்தைகள் உலகில் எத்தனையோ கோடி. அல்ப ஆயுளில் மரணிப்பவர்கள் ஏராளமான கோடி பேர். இத்தகைய ஒரு சூழலில் ஒரு மனிதன் உயிர் பிழைத்து வாழ்வது சாதாரண விஷயமல்ல. வயோதிகம் வரை ஒரு மனிதன் வாழ்வதை சாதனை என்றே கூறலாம். ஏனெனில் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் உயிராபத்து சூழ்ந்ததாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், ஒருவர் தனது உயிரை அவராகவே அனாவசியமாக போக்கிக் கொள்வது நியாயமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தற்கொலை என்பது துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழி அல்ல. நமக்கான ஒரு அற்புத வாய்ப்பை அநியாயமாக வீணடிக்கும் செயல்பாடாகும் அது.

வெறும் தேர்வில் தோல்வியடைவதற்கும், ஆசிரியர் திட்டுவதற்கும், மதிப்பெண் குறைந்ததற்கும், வேறு சில திறன் போட்டிகளில் தோற்பதற்கும், தோழர் மற்றும் தோழிகளுடன் சண்டை ஏற்பட்டதற்கும், காதல் தோல்விக்கும், விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்கும், இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் மாணவப் பருவத்தினர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்வதற்கு எந்தவித அறிவார்ந்த காரணமும் இருக்க முடியாது. தற்கொலை எண்ணம் வந்தால் உங்களின் சூழ்நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். தனிமையைத் தவிருங்கள்.

எப்படி வாழ வேண்டும்?

வாழ்வில் எந்த விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படுங்கள். நிதானமாக இருக்கவும். தியானம் செய்து பழகவும். தவறான சேர்க்கையைத் தவிர்க்கவும். சமூக சேவையில் பங்கெடுத்துக் கொள்ளவும். ஆளுமைத் திறன் மேம்பாடு தொடர்பான புத்தகங்களை அதிகம் படிக்கவும். உலக சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எப்போதும் படிக்கவும். நல்ல இசையைக் கேட்கவும். ஆன்மீக சிந்தனையில் ஈடுபடவும்.

மேற்கூறிய அம்சங்கள் அனைத்தும் தற்கொலை எண்ணத்தை நிச்சயம் தவிர்க்க உதவும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தற்கொலை எண்ணம் வரலாம். அதற்காக தற்கொலை செய்ய வேண்டும் என்பதில்லை. நம் மனதில் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? எனவே, தற்கொலை மட்டும் ஏன் செய்ய வேண்டும். நமக்கு கிடைத்தது ஒரே ஒரு வாழ்க்கை. அதைவிட உயர்ந்தது எதுவுமில்லை. அந்த வாழ்க்கையை வீணடிப்பதை அறிவுள்ள எந்த மனிதனும் செய்ய மாட்டான். எனவே, வாழும் வரை மகிழ்ச்சியாக வாழலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us