நவ 13, 2011 12:00 AM
நவ 13, 2011 12:00 AM
மாணவர் பருவத்தில், குறிப்பாக பள்ளி பருவத்தில், புவியியல் மீதான ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். தமது நாட்டை, மாநிலத்தை, மாவட்டத்தை, ஏன் நகரம் அல்லது கிராமத்தை தேடிக் கண்டுபிடித்து பார்த்து சந்தோஷப்படுதல், அந்த வயதின் ஆனந்தங்களுள் ஒன்று. இதுதவிர, மலைகள், நதிகள், பாலைவனங்கள் மற்றும் பனிப் பிரதேசங்கள் ஆகியவற்றையும் மாணவர்கள் விரும்பிப் பார்ப்பர்.
நம் நாட்டைத் தாண்டிய அல்லது கண்டத்தை தாண்டிய பிறிதொரு நிலப்பரப்பு எவ்வாறு இருக்கும்? அப்பகுதி மக்கள் எப்படி இருப்பார்கள்? அவைகளை எப்படி சென்றடைவது? என்பன குறித்த ஆர்வம், புவியியலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை. கி.மு.9ம் நூற்றாண்டில்தான், முதல் வரைபடம்(Map) உருவாக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
கடல் பயண கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளுக்கு, வரைபடங்களை பயன்படுத்த தொடங்கிய காலம் முதல், புவியியல் துறை முக்கிய வளர்ச்சியைக் கண்டது. புவியியல் துறையின் நவீன வடிவங்களாக, பூகோள தகவல் அமைப்பு(Geographic Information system), நகர் திட்டமிடுதல் மற்றும் பருவநிலை அறிவியல் போன்றவை திகழ்கின்றன.
பழைய வரலாறு
சீனம், அரபு தேசம், கிரேக்கம், ரோம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தத்துவஞானிகள், கணிதவியலாளர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர், ஆரம்பகால புவியியல் துறை வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளார்கள். கி.மு.3ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் எரடோஸ்தனிஸ், Geography என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் மற்றும் புவியின் சுற்றளவை முதன்முதலில் அளந்தவர் என்று வரலாறு கூறுகிறது.
அதேசமயம், கி.மு.7ம் நூற்றாண்டில், காலிபாக்களின் வாள் வலிமையால் இஸ்லாமிய பேரரசு பரவத்தொடங்கிய காலகட்டத்தில், அம்மதத்தின் அறிஞர்கள், பயணிகள் மற்றும் வணிகர்கள், உலகின் தொலைதூரப் பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார்கள் மற்றும் இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார்கள்.
இடைக்காலங்களில், ஐரோப்பியர்கள் இத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றினாலும், ஆட்டோமன் துருக்கியர்கள் கி.பி.1453ம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள்(Byzantium) நகரை கைப்பற்றியப் பிறகு, ஐரோப்பியர்கள், ஆசியர்களுடன் மேற்கொண்டிருந்த பாரம்பரிய வணிக வழி தடைபட்டதால், கடல்வழியாக புதிய வழியை கண்டுபிடிக்க ஐரோப்பியர்கள்(1492 முதல்) தொடங்கியபோது, இத்துறை அபாரமான வளர்ச்சியைக் கண்டது. புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், உலகை வரைபடமிடுதல் கலை மேம்படத் தொடங்கியது.
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, புவியியல் ஒரு பாடமாக 19ம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய பல்கலைகளிலோ, கடந்த 1930களில் ஒரு பாடமாக புவியியல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கடந்துபோன ஆண்டுகளில், புவியியல் பாடம் என்பது பலவித சுற்றுச்சூழல் நிலைகள், இடங்கள், புவிஅமைப்புகள் மற்றும் அவற்றின் தொடர்புகள் பற்றி படிப்பது என்ற அளவில் புவியியல் துறை ஒரு கருத்தமைப்பை பெற்றுள்ளது.
இன்றைய நிலை
இன்றைய தொழில்புரட்சி யுகத்தில், புவியியல் என்ற துறையின் வளர்ச்சியை ஆய்ந்து நோக்க வேண்டியுள்ளது. சமநிலையற்ற வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி, நகர்மயமாக்கல், பருவநிலை மாற்றம் போன்ற பலவித அம்சங்களை ஆய்வுசெய்ய புவியியல் பயன்படுகிறது. புவியியல் என்பது விவரணம் என்ற நிலையிலிருந்து பகுப்பாய்வு என்ற நிலைக்கு தன்மை மாற்றம் அடைந்துள்ளது.
அறிவியலுக்கும், சமூகத்திற்கும் இடையில்
ஒரு பிரச்சினையை, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக அலசுவது எந்தளவு முக்கியமோ, அதேஅளவிற்கு, புவியியல் ரீதியாக அலசுவதும் மிகவும் முக்கியம். ஏனெனில், புவியியலின் முக்கியத்துவம் அந்தளவிற்கானது. சமூக அறிவியலையும், பெளதீக அறிவியலையும் இணைக்கும் முக்கியப் பகுதி புவியியலில் அடங்கியுள்ளது.
புவியியல் துறை தனக்குள் பலவித அம்சங்களைக் கொண்டுள்ளதால், திட்டமிடுதல், இயற்கை வளங்களை சுரண்டுதல், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சிறப்பு பகுப்பாய்வு போன்றவைகளில் அதன் பங்களிப்பு உண்டு. புவி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து தரவுகளை உருவாக்க ரிமோட் சென்சிங் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது, இத்துறையின் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
புவியியலில் உயர்கல்வி
இந்தத்துறை, பெளதீக ரீதியான புவியியல்(Physical Geography) மற்றும் மனித சம்பந்தப்பட்ட புவியியல்(Human Geography) என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெளதீக ரீதியான புவியியல் என்பது, பூமியின் அடுக்குகள், சுற்றுச்சூழல், மண் மற்றும் விலங்குகள் - பறவைகள் பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது. முக்கியமாக, பாறை அமைப்புகள் மற்றும் புவியின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியது. பெளதீக புவியியல் என்பது பெருமளவில் கணக்கீட்டு முறையை சார்ந்துள்ளது.
மனித புவியியல் என்பது மனிதனுக்கும், அவனது இயற்கைச் சூழலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து, அதன்மூலம், மனித சமூகங்களை வடிவமைக்கும் பரந்த சமூக அமைப்பு சாத்தியக்கூற்றை நிறுவுகிறது. மேலும், பொருளாதார மற்றும் சமூக புவியியலை ஒருங்கிணைத்து, அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடைய செயல்கள் மக்களையும், இடங்களையும் பாதிக்கின்றன என்ற அகப்பார்வையை படிப்பவருக்குத் தருகிறது.
மனித புவியியலில், பெளதீக புவியியல் போலன்றி, தரநிலையிலான ஆராய்ச்சி முறைகள் பயன்படுகின்றன. (உ.ம்) பங்கேற்பவரின் கவனம் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை)
ஒட்டுமொத்த கருத்தாக்கங்கள்
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, புவியியல் என்பது சமூக அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது தனிப் பாடமாகவோ கற்பிக்கப்படுகிறது. மேல்நிலை பாடத்தில் புவியியலை தேர்வு செய்யாத மாணவர்கள்கூட, கல்லூரி நிலையில் அப்பாடத்தை தேர்வு செய்யலாம்.
அதேசமயம், பள்ளி மேல்நிலைப் படிப்பில், கணிதம் மற்றும் உயிரியல் படித்திருந்தால், அந்த மாணவருக்கு, மேல்படிப்பு நிலையில், புவியியலின் நுட்பங்களைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் என்று ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளநிலைப் படிப்புகள்
இந்தியா முழுவதுமுள்ள பல்கலைகளில், புவியியல் படிப்பு பரவலாக வழங்கப்படுகிறது. சில கல்வி நிறுவனங்களில், இப்படிப்பு கலைத் துறையிலும், சிலவற்றில் அறிவியல் துறையிலும் வைக்கப்பட்டுள்ளது. ஒருவர் BA புவியியல் அல்லது B.Sc புவியியல் ஆகிய இரண்டில் எதுவேண்டுமானாலும் படிக்கலாம்.
ஜாமியா மிலியா போன்ற கல்வி நிறுவனங்கள், பள்ளியில் அறிவியல் பிரிவில் படித்த மாணவர்களை B.Sc புவியியல் படிப்பிலும், பள்ளியில் கலைப் பிரிவில் படித்த மாணவர்களை BA புவியியல் படிப்பிலும் சேர்த்துக் கொள்கின்றன.
இளநிலை புவியியல் படிப்பின் பாடத்திட்டமானது, பொதுவாக, பாறையியல், பருவநிலை, கடலியல், மனித புவியியல், வளப் புவியியல், தெற்காசிய புவியியல், Map தயாரித்தல், அளவீடு மற்றும் சர்வே தொழில்நுட்பங்கள், ரிமோட் சென்சிங் மற்றும் புவியியல் தகவல்தொடர்பு அமைப்பு(Geographic Information System - GIS) ஆகியவற்றின் விதிமுறைகளைக் கொண்டுள்ளது.
புவியியல் துறையில், BA மற்றும் B.Sc ஹானர்ஸ் படிப்பில், வரலாறு, பொருளாதாரம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்கள், பொதுவாக, துணைநிலைப் பாடங்களாக இருக்கின்றன.
முதுநிலைப் படிப்புகள்
புவியியல் துறை பிரிவுகளின் ஏதேனும் ஒன்றில் ஒருவர் சிறப்புத்துவத்தை(specialisation) மேற்கொள்ள, ஒரு மாணவர் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள வேண்டும். பல பல்கலைக்கழகங்கள், 2ம் வருடத்தில், ஏதேனும் ஒரு பிரிவில் சிறப்பு படிப்பை மேற்கொள்ள ஒரு மாணவரை அனுமதிக்கின்றன. புவியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற ஒரு கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் ஒரு மாணவர், அவர் விரும்பும் பிரிவு அந்தக் கல்வி நிறுவனத்தில் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
சில பல்கலைகள், தங்களிடமிருக்கும் புவியியல் துறைக்காக புகழ்பெற்றவை. நகர்ப்புற திட்டமிடுதல், சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, GIS, ரிமோட் சென்சிங் போன்ற முக்கியத் துறைகளின் மனித வளத்திற்காக, பல கல்வி நிறுவனங்கள் புவியியலில் முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன.
அதேசமயம், மேற்கூறிய துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்காக மட்டுமே அல்ல புவியியல் படிப்பு. சமூக மற்றும் பெளதீக அறிவியல் ஆய்வில் சமநிலையைக் கொண்டு வருவதற்கும் முதுநிலை புவியியல் படிப்புகள் துணைபுரிகின்றன.
புவியியல் துறையில் வேலை வாய்ப்புகள்
புவியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் வைத்துள்ளவர்கள், ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட மேல்நிலைப் படிப்புகளுக்கும் செல்லலாம் மற்றும் அதன்மூலம் ஆசிரியர் பணியிலும் ஈடுபடலாம் அல்லது பலவிதமான வேலை வாய்ப்புகளைப் பெறலாம். ஆனால், வேலை வாய்ப்பினை பெற அவர்களுக்கு சிறிது பயிற்சி தேவைப்படும். அத்தகைய வேலை வாய்ப்புகள் சிலவற்றைப் பற்றி அறிமுகங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல்
விரைவான நகர்மயமாக்கல் நடவடிக்கை, அத்துறைக்கான ஆட்கள் தேவையை அதிகரித்துள்ளது. புவியியல் படிப்பில் முதுநிலை முடித்தவர்கள், நகர்மயமாக்கல் படிப்பை மேற்கொள்ளலாம். முதுநிலை புவியியல் படித்தவர்கள், இதுபோன்ற படிப்புகளில் முதுநிலை டிப்ளமோ முடித்தால்கூட, பரவலான வேலைவாய்ப்பும், கவர்ச்சியான சம்பளமும் கிடைக்கும்.
ஒரு முதுநிலை புவியியல் பட்டதாரி, நகர்மயமாக்கல் துறையில் நன்கு சாதிக்க முடியும். ஏனெனில், அவர்களது புவியியல் படிப்பில் அதற்கான அம்சங்கள் இருக்கின்றன. நகர்மயமாக்கல் துறையில் சிறப்பு படிப்புகளை மேற்கொள்ள, முதுநிலையில் குறைந்தது 55% மதிப்பெண்கள் வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கையானது, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலேயே நடைபெறும்.
சுற்றுச்சூழலியல் மற்றும் வள மேலாண்மை
மேற்கூறிய துறைசார்ந்த நிறுவனங்கள் புவியியல் பட்டதாரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன. அரசு, ஆராய்ச்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் வியாபார ஆலோசனை மையம் உள்ளிட்ட பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
பேரிடர் மேலாண்மை
டெல்லி பல்கலையின் புவியியல் பாடத்திட்டத்தில், பேரிடர் மேலாண்மை படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. முதுநிலை புவியியல் படிப்புடன், பேரிடர் மேலாண்மையில் டிப்ளமோ படித்தால், ஒருவருக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் உண்டு. இக்னோ மற்றும் National Institute of Disaster Management - New Delhi ஆகியவை இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய நிறுவனங்கள்.
புவி தகவல்தொடர்பியல்(Geoinformatics)
நகர் திட்டமிடல், வன திட்டமிடல், தாது கண்டுபிடிப்பு, போக்குவரத்து திட்டமிடல் போன்ற பலவித துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது. முதுநிலை புவியியல் முடித்தபிறகு, Geoinformatics படிப்பை முடித்தால் சிறப்பான எதிர்காலம் உண்டு. மேலும், Geoinformatics துறையில், M.Sc, M.Tech அல்லது முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளை Indian Institute of Remote Sensing - Dehradun என்ற கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவை இத்துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன. இப்படிப்பை முடித்தவர்களுக்கு, இஸ்ரோ, தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி, தேசிய தகவல்தொடர்பு மையம், வானிலை பயன்பாட்டு நிலையம் போன்ற பல இடங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.
சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள்
புவியியல் துறையின் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி இந்தியாவில் இன்னும் சரியாகவும், முழுமையாகவும் அறியப்படவில்லை. இந்தியா எதிர்நோக்கியிருக்கும் பொது கொள்கை வகுப்பு சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் புவியியல் பயன்படுத்தப்பட்டால்தான், இதன் முக்கியத்துவம் இந்நாட்டில் கூடும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
பொது கொள்கை வகுப்பில் புவியியல் பயன்படுத்தப்பட்டால், இன்றைய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றை தீர்க்கலாம்.
ஆனால், வெறுமனே தொழில் வாய்ப்பு மற்றும் சம்பளம் என்ற நிலையில் இல்லாமல், சவால்கள் மற்றும் சாத்தியங்களை நோக்கி முன்னேற இந்தப் புவியியல் பயன்படுகிறது. இதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.
ஒரு நல்ல புவியியலாளரின் திறமைகள்
* கவனித்தல் மற்றும் தரவு, வரைபடம் போன்றவற்றைக் கொண்டு ஊகித்தல்
* கணக்கீட்டு திறமைகள்
* சிறந்த பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி திறமைகள்
* களப்பணி ஆற்றுவதற்கான மனம் மற்றும் உடல் தகுதிகள்
* புதிய கண்டுபிடிப்பிற்கான ஆர்வம்
* விவரங்களை கவனமாக கேட்டல்
* எழுத்து மற்றும் பேச்சுத் திறமைகள்
யார் புவியியலாளர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள்?
அரசுத்துறை
மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம், சர்வே ஆப் இந்தியா, விண்வெளி பயன்பாட்டு மையம், நகர மற்றும் கிராம மேம்பாட்டுத் துறைகள், மாநகர மேம்பாட்டு ஆணையம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.
தனியார் துறை
நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல், ரியல் எஸ்டேட், சிறப்பு வாய்ந்த திட்டமிடல், GIS, போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள்.
