டிச 02, 2011 12:00 AM
டிச 02, 2011 12:00 AM
வெளிநாட்டிற்கு சென்று அதிகம் செலவழித்துப் படிப்பதைவிட, வேறொரு புதியமுறையை மாணவர்கள் விரும்புகிறார்கள். Twinning programme என்று அழைக்கப்படும் அந்த முறையின்படி, ஒரு படிப்பின் பாதியை உள்நாட்டிலும், பாதியை வெளிநாட்டிலும் மேற்கொள்ளலாம். இந்தமுறை கடந்த 1995ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது.
இந்தமுறையில், இந்தியாவில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு வைத்துக்கொள்ளும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் இந்த முறையைப் பெரிதும் விரும்புகின்றன. ஏனெனில், இந்த முறையில் அவர்களுக்கு சிக்கல் குறைவு என்பதுடன், வருமானமும் அதிகம். அதேபோல், இங்குள்ள மாணவர்களுக்கும் முழுவதும் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதோடு ஒப்பிடுகையில் செலவும் குறைவு மற்றும் வெளிநாட்டு பட்டம் பெற்றது போன்றும் ஆகிவிடும் மற்றும் வெளிநாட்டு அனுபவமும் கிடைக்கும்.
இம்முறையில், ஒரு இந்திய கல்வி நிறுவனம், ஒன்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வைத்திருக்கும். அவற்றுள் நமக்குப் பிடித்தமான மற்றும் சிறந்த கல்வி நிறுவனங்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பல வசதிகள் இருக்கும் இந்த Twinning programme முறையில், மாணவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவதும் முக்கியம். ஏனெனில் அதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களைப் பற்றி அலசலாம்;
தரம்
முதலில், நமது உள்ளூர் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பை மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி ஆராய வேண்டும். ஏனெனில், பணத்திற்காக எதுவேண்டுமானாலும் நடக்கலாம். மேலும், இந்தியாவிற்கு, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்துதான் அதிக கல்வி நிறுவனங்கள் வருகின்றனவே தவிர, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து ஏன் பொதுவாக கல்வி நிறுவனங்கள் வருவதில்லை? என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு காரணம், ஆங்கில கல்வி நிறுவனங்கள் பற்றி செய்தி ஊடகங்கள் உட்பட, பலவற்றில் செய்யப்படும் அதீத விளம்பரங்கள்தான். மேலும், அந்த மொழியின் மீது நமக்குள்ள மயக்கமும் ஒரு காரணம். எனவேதான், வேறுபல நல்ல ஐரோப்பிய பல்கலைகளை விட்டுவிட்டு, ஆங்கில கல்வி நிறுவனங்களையே மக்கள் நாடுகிறாகள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொறியியல், மேலாண்மை, வடிவமைப்பு மற்றும் இன்னபிற துறைகளைச் சார்ந்த கல்வி நிறுவனங்கள் இந்த Twinning programme -களை வழங்குகின்றன. ஒரு நிறுவனத்தில் சேரும் முன்பாக, அவை அங்கீகாரம் பெற்றவையா? அவை வழங்கும் பட்டங்களுக்கு உண்மையிலேயே மதிப்பு இருக்கிறதா? என்று நாம் தீர விசாரிக்க வேண்டும். ஏனெனில், மேலை நாட்டு கல்வி நிறுவனங்கள் அனைத்துமே நல்லவை என்ற கருத்து மிகவும் தவறானது. அனைத்தும் பணத்திற்காக என்பதை மறந்துவிடலாகாது. சுரண்டுவதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விசா நடைமுறைகள்
இதுபோன்ற படிப்புகளில் விசா பெறுவதைப் பற்றி மாணவர்கள் தீவிரமாக திட்டமிட வேண்டும். ஏனெனில், பல மாணவர்களுக்கு விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒருமுறை விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மறு விண்ணப்பத்தில் விசா பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இதுபோன்ற இக்கட்டான சூழலில் மாணவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்ற தெளிவான திட்டம் பல உள்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இருப்பதில்லை.
விசா நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற மாற்று வழியை பல கல்வி நிறுவனங்கள் இன்னும் யோசித்துக் கொண்டுள்ளன. எனவே, மாணவர்களின் எதிர்காலம் சிக்கலாகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவிஷயத்தில் யோசித்து செயல்பட வேண்டியது முக்கியம்.
நிராகரிப்பு
Twinning programme -ல் சேர்ந்துவிட்டாலே, வெளிநாடு போய்விடலாம், பட்டம் மற்றும் அனுபவம் பெற்றுவிடலாம் என்று நினைக்கக்கூடாது. ஏனெனில் அதில் பல விஷயங்கள் உள்ளன. உள்நாட்டில் படிக்கையில், உங்களின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால்தான், அதனோடு ஒத்துழைப்புக் கொண்ட வெளிநாட்டு கல்வி நிறுவனம் குறிப்பிட்ட மாணவரை ஏற்றுக்கொள்ளும். இல்லையேல் கஷ்டம்தான்.
மேலும், நல்ல ஆங்கிலப் புலமை இருப்பது அவசியம். சில கல்வி நிறுவனங்கள் TOEFL, IELTS மற்றும் GRE போன்ற தேர்வு மதிப்பெண்களை எதிர்பார்க்கின்றன. மேலும், உங்களின் நிதி நிலைமையும் திருப்திகரமாக இருக்க வேண்டும்.
படிப்பின் முக்கியத்துவம்
Twinning programme -ல் ஈடுபட்டிருக்கும் ஒரு வெளிநாட்டு கல்வி நிறுவனம் தரமானதா? என்று பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதேஅளவு முக்கியம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு சிறப்பானதா? என்பதும். அந்தப் படிப்பு நடைமுறை அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா? மற்றும் அதன் வாய்ப்புகள் என்ன என்பதைப் பற்றி தெளிவான பார்வை வேண்டும்.
அந்தப் படிப்பின் மூலம் நீங்கள் பெறும் கிரெடிட்டுகளை(Credits) மற்ற கல்லூரிகளும் ஏற்றுக்கொள்ளுமா? என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில், நீங்கள் அதே நாட்டில், வேறொரு கல்வி நிறுவனத்தில், வேறு படிப்பில் சேர வேண்டியிருக்கலாம். சிறந்த கல்லூரிகளின் மூலம் பெறப்படும் கிரெடிட் பாயிண்டுகள்(points), பொதுவாக அனைத்து பிற கல்வி நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, பாட விஷயத்திலும் கவனமாக செயல்பட வேண்டும்.
