டிச 17, 2011 12:00 AM
டிச 17, 2011 12:00 AM
இகாமர்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் காமர்ஸ் கம்ப்யூட்டர் வாயிலாக வணிகம் செய்வதனைக் குறிப்பிடுகிறது. துவக்க நாட்களில் அவ்வளவாக சூடு பிடிக்காத இந்தத் துறைக்கு பின்னர் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. எலிக்ஸிர் கன்சல்டிங் என்ற கன்சல்டன்சி நிறுவனம் இத்துறை குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சில முக்கிய முடிவுகளை தன் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது. அவற்றில் சில இதோ....
இகாமர்ஸ் துறை மிக அதிக அளவில் இந்தியாவில் விரிவடைந்துள்ளது. இதனால் இத்துறையின் மத்திய மற்றும் உயர் நிலைகளில் மிகச் சிறந்த பணி வாய்ப்புகள் உருவாகுவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. 2009ஆம் ஆண்டின் துவக்கத்தில் பல்வேறு ரீடெய்ல் நிறுவனங்கள் ஆன்லைன் முறையில் தங்கள் பொருட்களை விற்பதில் ஆர்வம் காட்டத் துவங்கின. இதற்கு நுகர்வோரிடம் நல்ல ஆதரவு இருப்பது தெரிய வந்தது.
இதனால் சர்வதேச அளவில் ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் தங்கள் கிளைகளையும், அலுவலகங்களையும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திறப்பதில் ஆர்வம் செலுத்துகின்றன. இகாமர்ஸ் துறையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 150 சதவிகித அளவிற்கு பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் 45 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ஊதிய விகிதங்களைப் பொறுத்தும் இகாமர்ஸ் துறையின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கவர்ச்சிகரமான விகிதங்கள் வழங்கப்படுகின்றன. பிற நிறுவனங்களின் ஊதியங்களுக்கு போட்டியான அளவிலேயே ஊதியங்கள் நிர்ணயிக்கப்படுவது இந்த துறையின் மற்றொரு சிறப்பாகும்.
பொதுவாக ஐ.டி., துறையின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களே இகாமர்ஸ் துறைக்கு வருவதால் இரண்டு துறைகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தேவைகள் உள்ளன. உள்நாட்டு இகாமர்ஸ் சார்ந்த நிறுவனங்கள் தற்போதுதான் வளர்ந்து வருவது உண்மை என்ற போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனங்களே இந்தத் துறையின் போக்கை கணிசமாக மாற்றும் திறனைப் பெறும் என்று கூறப்படுகிறது.
இகாமர்ஸ் துறையின் ஒட்டு மொத்த சந்தைப் பங்களிப்பில் 76 சதவிகிதத்தை டிராவல் இன்டஸ்ட்ரியே தன் வசம் வைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் முதல் பத்து இகாமர்ஸ் வலைப் பின்னலில் ஒன்றாக இந்திய இகாமர்ஸ் துறை இடம் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
