பிப் 08, 2012 12:00 AM
பிப் 08, 2012 12:00 AM
நமது அண்டை நாடான சீனா, பாதுகாப்பு, விஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் நமக்கு போட்டியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது
கல்வியிலும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக அந்நாடு மருத்துவக்கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. சீனாவில் தற்போதைய தகவலின் படி, 17 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் மருத்துவப்படிப்பை மேற்கொண்டுள்ளனர். இதில் என்ன விசேஷம் என்றால், 2010ம் ஆண்டு கணக்கின் படி, இம்மாணவர்களில் 8 ஆயிரம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தான். இந்தாண்டு இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு மருத்துவப் படிப்பில் சீனா, வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவர்களை கவர்ந்துள்ளது.
சீனா உள்பட வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களின் பட்டம் இந்தியாவில் நேரடியாக அங்கீகரிக்கப்படுவதில்லை. மாறாக இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் தான், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற முடியும்.
இந்தளவு கட்டுப்பாடுகள் இருந்தும் சீனாவுக்கு, அதிக மாணவர்கள் செல்வதற்கு காரணம், இந்தியாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆகும் செலவை விட, சீனாவில் குறைந்த செலவில் படிப்பை முடித்து விடலாம் என்பது தான். இதுவே பெரும்பாலான இந்திய மாணவர்கள் சீனா செல்வதற்கு காரணம். மேலும் இந்தியா மற்றும் நேபாள நாடுகளில் இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்து, தங்களது மருத்துவக் கல்லூரிகளில் சீனா பணியமர்த்துகிறது. இதுவும் இந்திய மாணவர்கள் சீனா செல்ல ஒரு காரணம்.
எனவே இந்திய அரசு, தரமான மருத்துவக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்க வேண்டும். இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டிலான மருத்துவ இடங்களை அதிகப்படுத்தலாம். ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.
இதைத் தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை வரைமுறைப்படுத்துவது, சர்வதேச தரத்திலான ஆசிரியர்களை பணியமர்த்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் நமது மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்கலாம். வெளிநாட்டு மாணவர்களையும் இந்தியாவுக்கு வர வைக்கலாம்.
