பிப் 15, 2012 12:00 AM
பிப் 15, 2012 12:00 AM
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற புத்தகங்கள் நிறைந்திருப்பது நூலகத்தில் மட்டுமே. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய நூலகம் மிகவும் இன்றியமையாததாகவே உள்ளது. இதனால் நூலகப்படிப்பு தற்போது பிரபலமடைந்து வருகிறது
ஆதி முதல் அந்தம் வரை எல்லாவித நூல்களும் நூலகத்தில் கிடைக்கும் என்பதில் அய்யமே இல்லை எனலாம். நூலகத்தினால் பயனடைந்தவர்கள் பற்பலர் என்று கூறலாம். இவ்வாறு நூலகம் எல்லா வகையிலும் பயனுள்ளதாகவே விளங்குகிறது.
கல்லூரியில் இளநிலை முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? மேற்படிப்பு படிப்பதினால் என்ன பயன்? படித்தால் வேலை கிடைக்குமா? என்ற எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இளநிலை படித்துவிட்டு வேறு ஏதாவது தொழில்கல்வி படிப்பு இருக்கிறதா என இன்றைய இளைஞர்கள் யோசிக்கின்றனர்.
அவ்வாறு யோசிப்பவர்களுக்கு நூலகம் மற்றும் அறிவியல் படிப்பு சற்று மாறுபட்டதாகவே இருக்கும். (எம்.எல்.ஐ.எஸ்சி) எனப்படும் நூலகவியல் படிப்பை முடிப்பதினால் நூலகராக பணியாற்றலாம்.
இந்த படிப்பிற்கு இளநிலை பட்டபடிப்பான பி.காம்., பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.ஏ., உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெரும்பாலும் மாணவர்கள் கலை அறிவியல் பட்டப் படிப்பை படித்து, ஏதேனும் ஒரு முதுநிலை அல்லது ஆசிரியர் படிப்பான பி.எட்., முடித்து அதன் பிறகு போட்டித் தேர்வுகளில் கலந்துக்கொண்ட பிறகு தான் வேலைக்கு செல்ல முடியும். ஆனால் இந்த படிப்பை படித்து முடிக்கும்போதே அதற்கான வேலைவாய்ப்பும் காத்திருக்கிறது.
காரைக்குடியிலுள்ள அழகப்பா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலையில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.எல்.ஐ.எஸ்சி., போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் எண்ணற்ற நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. தனியார் நூலகத்தில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், சமூக அறிவியல் ஆய்வு மையங்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூலகருக்கான பணியிடங்கள் காலியாகவே உள்ளன. எனவே வேலை வாய்ப்பை வழங்கும் நூலகர் படிப்பை மாணவர்கள் தேர்வு செய்து படித்து பயன் பெறலாம்.
