பிப் 28, 2012 12:00 AM
பிப் 28, 2012 12:00 AM
வணிகமே பிரதானம் என்றிருக்கும் ஒரு உலகில், நிதித்துறை தொடர்பான நிபுணர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. அந்த வகையில், நிதி ஆராய்ச்சியாளர் பணி என்பது அதிக சவால் நிறைந்தது.
பங்கு சந்தையில் பங்குகளை வாங்க நினைக்கும் ஒரு சாதாரண முதலீட்டாளர் பல குழப்பங்களை எதிர்கொள்கிறார். உதாரணமாக, ஏதேனும் ஒரு சுரங்க கம்பெனியின் பங்குகளை வாங்கலாம் என்று நினைக்கும் ஒரு சாதாரண பங்குதாரருக்கு, ஒரே சமயத்தில் பல சுரங்க கம்பெனிகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தால், எதன் பங்கை வாங்குவது என்ற குழப்பம் இருக்கும். சரியானதை தேர்வு செய்ய வேண்டிய ஆர்வமும், நஷ்டமாகிவிடக்கூடாதே என்ற பயமும் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் உதவுபவர்தான் நிதி ஆராய்ச்சியாளர்(Finance Researcher). இவர்தான், ஒரு நிறுவனத்தின் சந்தைப் பங்கு, சுரங்க வரி, மதிப்பு வளர்ச்சி அளவீடு மற்றும் வர்த்தக மதிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை அலசி ஆராய்ந்து ஆலோசனை வழங்குகிறார்.
ஒரு சுரங்க நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எவ்வளவு செலவிடுகிறது என்பன போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து, நிதி ஆராய்ச்சியாளர், அதன் பங்கு மதிப்பு பற்றி முடிவு செய்கிறார். உதாரணமாக, ஒரு சுரங்க நிறுவனம், தனது இன்னொரு போட்டியாளரைவிட, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் அதன் செலவின கட்டமைப்பில் என்ன விளைவுகள் ஏற்படும் மற்றும் எந்த அளவில் மற்றும் எந்த நிலையில் உங்களுக்கான பலனை அந்த நிறுவனம் வழங்கும் என்பன போன்ற பகுப்பாய்வில் நிதி ஆராய்ச்சியாளர் ஈடுபடுகிறார்.
இதுபோன்ற பலவிதமான பகுப்பாய்வுகளை செய்வதன் மூலம், சரியான கணிப்புகளை மேற்கொண்டு, நம்பகத்தன்மை பெறுவதன் மூலமே, சந்தையில் போட்டிகளை சமாளித்து நிலைத்து நிற்க முடியும்.
நிதி ஆராய்ச்சியாளருக்கான வாய்ப்புகள்
நாம் தற்போது நிதிச் சந்தை ஒருங்கிணைப்பு, வர்த்தக தாராளமயமாக்கம், இணைப்புகள் மற்றும் விலைக்கு வாங்குதல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். அமெரிக்க நிதி சந்தையில் ஒருவர் தும்மினால், உலகின் பல பகுதி நிதிச் சந்தைக்காரர்களுக்கு சளிப் பிடித்துக் கொள்கிறது. ஐரோப்பிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டால், உலகெங்கிலும் பொருளாதார சந்தையில் ஏற்ற-இறக்கங்கள் ஏற்படுகின்றன. இதன்மூலம், பொருளாதார ரீதியாக இந்த உலகம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் பின்னணியில், பல வணிக நிறுவனங்கள், தங்களது பாரம்பரிய மற்றும் வழக்கமான நடைமுறைகளை கைவிட்டு, உலகளாவிய முதலீடு, நிதி திட்டமிடுதல் மற்றும் நிதி ஆபத்து குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.
இன்றைய நிலையில், நிதி ஆய்வு என்பது, கணிதத் தன்மையுடையதாக மாறியுள்ளது. அகடமிக் இல்லாத நிதித்துறையில், ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் என்பவர், MBA நிதி ஆய்வுகளுக்கும் அப்பால், பொருளாதாரம் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டும். வங்கிகள், நிதி அமைப்புகள், கார்பரேட்டுகள் மற்றும் ஆலோசனை மையங்கள் போன்றவை நிதி சந்தையில் அனுபவமுள்ள நிபுணர்களை விரும்புகின்றன.
நிதி தொடர்பான அகடமிக் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புபவர், quantitative analysis -க்கான சிறந்த கணித அறிவைப் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய 2 துறைகளிலும் நிபுணர்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில், தற்போதைய கடன் சிக்கல், அதிகரிக்கும் பற்றாக்குறை ஆகியவற்றை சமாளிக்கவும், பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் முதலீடுகளைப் பாதுகாக்க நிதி ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்தவும் நேர்மறையான நிதிப் பொறியியல் தேவை.
நிறுவன ரீதியான மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள், ஆபத்தில்லாத முதலீட்டு உபாயங்களையே எதிர்பார்க்கிறார்கள்.
பணித் தன்மைகள்
நிதி ஆராய்ச்சியாளர்(Finance Researcher) என்ற பணியை, நிதி பகுப்பாய்வாளர்(Finance Analyst) என்ற பணியுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. FR பணியானது, FA பணியைவிட உயர்ந்த பொறுப்பும், தன்மையும் கொண்டது. நிதி ஆராய்ச்சியாளர் என்பவர், உயர்நிலையிலான மற்றும் ஒட்டுமொத்த அளவில் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு, நிறுவன முதலீடு தொடர்பான Presentation -களை உருவாக்குதல் அல்லது நிறுவனம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளை உருவாக்குதல் போன்ற பணிகளை FA செய்கிறார். ஆனால், நிதி ஆராய்ச்சியாளரோ, சீனியர் மேலாண்மைக்கு பரிந்துரைகளை செய்து, நிறுவனங்களுக்கான, நிதி மற்றும் அபாய மேலாண்மை மாதிரிகளை உருவாக்குதல், M&A போன்ற கார்பொரேட் டீல்களை மதிப்பிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்.
நிதி ஆராய்ச்சியாளர்களை, ஆலோசனை மையங்கள், நிறுவனங்களை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்துகின்றன. ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு விதமான வர்த்தகங்கள், வணிக சுழற்சியின் பல்வேறு சூழல்கள் ஆகியவற்றை கணக்கில் எடுக்கிறார் மற்றும் தற்போதைக்கு இருப்பதைவிட, ஒரு வித்தியாசமான, லாபம் தரக்கூடிய, வெற்றிக்கு இட்டு செல்லத்தக்க ஒரு மாதிரியை(model) உருவாக்கும் நோக்கத்தில், பிற தகவல்களை ஆய்வு செய்வது மற்றும் அபாய அளவீடு ஆகிய பணிகளில் FR ஈடுபடுகிறார். முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரியும் சில ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர் உறவுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
அகடமிக் நிதி ஆராய்ச்சித் துறையை சார்ந்தவர்கள், பழைய நடைமுறை மற்றும் தியரிகளை தவிர்க்கும் வகையில், புதிய மாதிரிகளிலும், நுட்பங்களிலும் கவனம் செலுத்துதல் மற்றும் பயன்பாட்டு அறிவியலுடன், தியரிகளை சோதித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார். மேலும், எதிர்கால நடைமுறைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறார்.
வேலை வாய்ப்பு
முதலீட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கடன் நிர்ணய ஏஜென்சிகள், தனியார் விகித அளவீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள், பாதுகாப்பு நிதியங்கள், ஆலோசனை மையங்கள் மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள் மற்றும் நிதி சந்தை ஒழுங்குபடுத்துநர்கள் போன்ற பலவிதமான இடங்களில் பணி வாய்ப்புகள் உள்ளன.
எம்பிஏ பைனான்ஸ் முடித்த மாணவர்கள், தங்களது படிப்பை முடித்தவுடன், ஆராய்ச்சி அறிக்கைகளை நிறுவனங்களுக்காக தயார் செய்தல், மதிப்பாய்வு மாதிரிகளைப் பயன்படுத்தல் மற்றும் கையிருப்புகளை சரிபார்த்தல் போன்ற பணிகளுக்காக, Financial analyst -ஆக பணியமர்த்தப்படுகிறார்கள். CA மற்றும் MBA ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் அல்லது CFA மற்றும் MBA ஆகிய படிப்புகளை முடித்தவர்கள், Analyst பணிக்கு மிகவும் விரும்பப்படுகிறார்கள். அதனையடுத்து, அனுபவம் பெற்றபிறகு Researcher பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.
படிக்கும்போது, quantitative மற்றும் qualitative பகுப்பாய்வு கருவிகளைப் பற்றி அறிந்துகொண்டால், நிதி ஆராய்ச்சிப் பணிகளுக்கு நல்லது. தங்களது மாணவர்கள் நல்ல பணி வாய்ப்புகளைப் பெறுவதில் சில வணிகப் பள்ளிகள் அக்கறை செலுத்துகின்றன. நிதி ஆராய்ச்சி நிறுவனங்களுடன், இத்தகைய வணிகப் பள்ளிகள் ஒத்துழைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம், தங்களது நிதித்துறை மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்கின்றன. சில வணிகப் பள்ளிகள் Conclave போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்கான அடிப்படையை ஏற்படுத்துகின்றன.
சர்வதேச சந்தைக்கேற்ப ஒருவரை தயார்செய்தல்
இந்தியாவில், எம்பிஏ பைனான்ஸ் படிக்கும் பல மாணவர்கள், தகவல்தொடர்பு திறனிலும், குழு செயல்பாட்டுத் திறனிலும் அவ்வளவாக திறமையின்றி இருக்கின்றனர். அதிகாரி நிலையில், குழு செயல்பாட்டுத் திறன் முக்கியம். எனவே, சர்வதேச அளவில் பணிகளைப் பெற, பாடத்திட்டமானது, இந்திய அம்சங்களை மட்டுமே மையப்படுத்தியிராமல், உலகளாவிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எம்பிஏ படிப்பை புதிதாக முடித்து வெளிவரும் ஒருவர் பெறும் சம்பளமானது, அவர் படித்த கல்லூரி, அவரின் பிற கல்வி தகுதிகள், பணியமர்த்தப்படும் இடம், எந்த நிறுவனத்தில் பணியில் சேர்கிறார் போன்ற பல அம்சங்களைப் பொறுத்தது. உதாரணமாக, வணிகத் தலைநகரான மும்பையில், அரசியல் தலைநகரம் டெல்லியை விட அதிக சம்பளம் கிடைக்கிறது. சாதாரணமாக ஒருவர் ஆரம்ப நிலையில் ரூ.20,000 பெறலாம், அதேசமயம் ஒருவர் ரூ.50,000மும் பெறலாம்.
சிறப்பான செயல்பாடு
ஒரு நல்ல நிதி ஆராய்ச்சியாளர், சந்தையைப் பற்றிய முன்கணிப்புகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவர் ஜோசியக்காரர் அல்ல.
தொழில்துறையில் நடக்கும் புதிய முன்னேற்றங்களை அறிந்து, உலகம் முழுவதிலுமிருந்தும் வரும் நிதி தொடர்பான செய்திகளைப் படித்து, ஐடி மென்பொருள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். Spread sheets, data bases and learning financial models ஆகியவைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் சிறந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். துறை அறிவோடு மட்டுமில்லாமல், தகவல்தொடர்பு, மக்கள் மற்றும் நெட்வொர்க்கிங் அறிவு ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புதிய தரவுகளை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு பழைய தரவைப் பயன்படுத்தியதே காரணம். வணிகப் பள்ளியிலிருந்து புதிதாக படித்து வெளியேறும் பலர், தரவுகளைப் பற்றி ஆழமான அறிவைப் பெறாமலும், அதை சோதித்து அறியாமலும் இருக்கின்றனர். இதை எப்படியாவது தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால், நிறுவனம், வாடிக்கையாளர் மற்றும் உங்களுக்கும் பெரிய இழப்புகளும், சிக்கல்களும் ஏற்படும்.
பண மேலாண்மை என்பது ஒரு அறிவியல். பணத்தையும், மனிதர்களையும் சிறப்பாக கையாளும் கலையே இது. உங்களது திறமையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். எனவே, பலவற்றையும் அறிந்துகொண்டு, சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக தயாராகி, களத்தில் இறங்குங்கள்.
