மே 04, 2012 12:00 AM
மே 04, 2012 12:00 AM
கடலுக்கு அடியில் இருக்கும் ரகசிய உலகத்தை, சூரிய வெளிச்சமே படாத இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு அம்சமாக இந்த ஸ்கூபா டைவிங் விளங்கி வருகிறது.
வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி முதல் அமெரிக்காவின் ப்ளோரிடா வரையிலும், மத்திய தரைக்கடல் பகுதி முதல் செங்கடல் வரையிலும் ஸ்கூபா டைவிங் பிரியர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். ஆனால், இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம், இந்தியாவின் அந்தமான் தீவுகளிலும், ஸ்கூபா டைவிங் பிரசித்தி பெற்று விளங்குவது தான்.
ஸ்கூபா பயிற்சியாளராக விரும்பும் நபர்கள், குறைந்தது ஆறு ஆண்டுகள் ஸ்கூபா டைவிங்கில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மற்றொரு நீச்சல் வல்லுனர் முன்னிலையில் சுமார் 100 டைவிங்கிற்கு மேல் வெற்றிகரமாக செய்திருக்க வேண்டும். இந்த பயிற்சியாளர் பணிக்கு பல்வேறு பயிற்சிகளும் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, ஸ்கூபா டைவிங்கில் முன்னேறிய நிலை, பிறரைக் காப்பாற்றும் திறமை, பயிற்சியாளருக்கு உதவியாளரக இருந்திருப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை பயிற்சியாளருக்கும், பணியாளருக்கும் நல்ல மவுசு காணப்படுகிறது. பணியாளராக இருந்தால், அனுபவத்திற்கு ஏற்ப மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும். பயிற்சியாளராக இருந்தால், உங்களின் திறமைக்கு ஏற்ப மாதம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாகக் கிடைக்கும்.
பொதுவாக ஸ்கூபா டைவிங் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சூடுபிடிக்கும் தொழில் என்பதால், ஆண்டுக்கு 4 முதல் 8 மாதங்களுக்கு மட்டுமே பணிகள் இருக்கும். பொதுவாக காலை 9 மணி முதல் 6 மணி வரை அலுவலகத்தில் அமர்ந்து ஒரே மாதிரியான பணிகளை செய்யப் பிடிக்காமல், சாகசத்தை விரும்பும் நபர்கள் இந்த துறையை தேர்வு செய்யலாம்.
இதில் சாகசம் செய்வதுடன் மட்டுமல்லாமல், ஆழ்கடல் பற்றிய நுட்பமான அறிவும், கடல் ஆய்வு மற்றும் கடல் பாதுகாப்பு பற்றிய அறிவும் இருக்க வேண்டியது அவசியம். ஸ்கூபா டைவிங் சொல்லித் தரும் பயிற்சியாளர்கள் மற்ற ஆசிரியர்களைப் போல் கண்டிப்பானவர்களாக இல்லாமலும், அதே நேரம் சேவை வழங்கும் பணியாளர்களுக்கு மேலானவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஸ்கூபா டைவிங் பற்றிய ஆர்வமும், அதன் மீதான ஈர்ப்பும் உலக மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறையில் பணியாற்றவும், பயிற்றுவிக்கவும் ஏராளமானோர் தேவைப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
