அக் 16, 2013 12:00 AM
அக் 16, 2013 12:00 AM
மக்கள் தொகை பெருகி வருவதாலும், ஓரே படிப்பை பலரும் தேர்ந்தெடுப்பதாலும், ஒரு காலியிடத்திற்கு ஆயிரக்கணக்காணோர் போட்டியிடுவதாலும், வேலையைப் பெறுவது கடினமான ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.
வேலை வாய்ப்பை எளிதாகப் பெறுவதற்கு பல்வேறு உத்திகளை கையாளும் நிலை வேலை தேடுவோரிடையே அதிகரித்து வருகிறது. திறனை மேம்படுத்துதல், தொடர்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துதல், உடை உடுத்துதல், உடல் அசைவுகள், வார்த்தைகள் வெளிப்பாடு, அனுபவம், கல்வி, விருப்பு வெறுப்புகள், சிபாரிசுகள் என பலவற்றையும் கடந்து தனக்கான சுய விபரம் எனும் "ரெஸ்யூம்" தயாரிப்பதும் ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
சுய விபரங்களை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தை நீக்க பல்வேறு ஆலோசனைகளை நண்பர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும் மற்றும் பல நேர்முகத்தேர்வுகளுக்கு சென்று வந்த அனுபவத்தின் மூலம் தாங்களாகவே எப்படி வடிவமைப்பது? என்பதையும் அறிந்து வைத்திருப்போம்.
தனிப்பட்ட முறையில் "ரெஸ்யூம்" தயாரிக்க முடியாதவர்களுக்கு துனைபுரியும் வகையில் பல்வேறு இணையதளங்கள் "ரெஸ்யூம்" வடிவமைப்பதற்காகவே உருவாக்கப்பட்டு அவை இலவசமாகவும், கட்டணச் சேவையுமாக சுய விபரங்களை வடிவமைப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது.
வேலைச் சந்தையின் போட்டிகளை உணர்ந்துகொண்ட நவீன காலத்தின் வேலை தேடுவோர் ரெஸ்யூமின் மேம்பட்ட வடிவத்தை விரும்பியதின் விளைவாக சுய விபரங்கள் வடிவமைப்பு தற்பொழுது புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
ரெஸ்யூம் வடிவமைப்பானது "வேர்டு" டாக்குமெண்டிலிருந்து மாறி "விஷூவல் பிரசண்டேஷன்" முறையை அடைந்துள்ளது. "விஷூவல் பிரசண்டேஷன்" மூலம் நாம் நினைப்பதை ஒரு திரைப்படத்தை போல் நாம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் நிறுவனத்திற்கு எளிதாக தெரிவிப்பதற்கும், நேரடியாக நாமே ஒரு நண்பனைப் போல் நம்மைப் பற்றி அறிமுகப்படுத்துவதற்கும் வசதியாக இருப்பதால் வேலை தேடுவோராலும், நிறுவனங்களாலும் விரும்பப்படுவதாக மாறி வருகிறது.
எங்கு வடிவமைக்கலாம்?
"விஷூவல் ரெஸ்யூம்" வடிவமைப்பதற்கு உதவுவதற்காக பல்வேறு இணையதளங்கள் இலவசமாகவும், கட்டணத்துடனும் பல்வேறு வடிவமைப்புகளில் சேவையை வழங்கி வருகின்றன.
தயாரிப்பது எப்படி?
"விஷூவல் ரெஸ்யூம்" தயாரிப்பதற்கு ஏற்கனவே தயாராக வைத்துள்ள சுய விபரங்களுடன், நீங்கள் ஏதேனும் புகைப்படங்களை இணைக்க விரும்பினால் அந்த புகைப்படங்கள், நீங்கள் இதற்கு முன்னதாக வேலை பார்த்த நிறுவனங்களின் லோகோக்கள், நீங்கள் பயன்படுத்தும் சமூக தளங்களில் உள்ள உங்கள் பக்கங்களின் "லிங்"குகள் மற்றும் நீங்கள் ஏதேனும் உங்கள் வீடியோவை "ரெஸ்யூம்" உடன் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், உங்கள் வீடியோவையும் இணைக்கலாம்.
மேலும் முக்கியமாக, இது உங்கள் வேலையை பெறுவதற்கான அடிப்படை சாராம்சம் என்பதால், இதில் இணைக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் கண்ணியமானதாக நேர்மறையான எண்ணங்களை உருவாக்கக்கூடியதாக இருப்பது நல்லது.
வந்திருக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேலையினை எளிதாக பெறுவதற்கு தயாராவோம்.
