sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?

/

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?


நவ 24, 2013 12:00 AM

நவ 24, 2013 12:00 AM

Google News

நவ 24, 2013 12:00 AM நவ 24, 2013 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான் நினைக்கும் எண்ணங்களை தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும் பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும் மாணவப்பருவத்திலேதான். பகைமையை எளிதாக மறப்பதும்ம, பாசத்தை உருவாக்குவதுமான சூழ்நிலைகள் அதிகமாக ஏற்படுவதும் மாணவப்பருவத்திலேதான். தன்னுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதாகக் கருதும் இரண்டு கட்டங்களான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றை காண்பதும் மாணவப் பருவத்திலேதான். இப்படிப்பட்ட அருமையான மாணவப்பருவத்தை எந்த அளவுக்கு நாம் ரசித்து வாழ வேண்டும். ஆனால் ரசிக்கும்படியாகவா இருக்கிறது பள்ளிப்பருவம்?

தமிழ்ப் பள்ளிக்கூடங்களை விட, ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களுக்கு அதிகம் மன நெருக்கடிகள் ஏற்படுகிறது. ஏனெனில் தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களைவிட ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் தவிர்த்து, கூடுதலான பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது. அது போக பெற்றோரும் போதாக்குறைக்கு பள்ளி விட்டு வந்தவுடன், பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர். பிள்ளைகளும், பெற்றோரும் சந்திக்கும் வேளைகள் குறைந்து விடுகின்றது. சனி, ஞாயிறுகளிலும் செல்லக்கூடிய சிறப்பு வகுப்புகள் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து மட்டுமல்லாது, உறவினர்களிடம் இருந்தும் தள்ளி வைத்து விடுகின்றது. அது தவிர்த்து முக்கியமான விசேஷ நாட்களில் விடுமுறை எடுப்பதற்கும் பள்ளி நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.

சில பண்டிகைகளின் போது அந்த குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கிறார்கள். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும், கல்வி நிலையத்தை நடத்தும் கல்விமான்களும் கல்வியை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த நடைமுறைகளே சாட்சி. பண்டிகைகள் என்பதே கொண்டாடும் சமூகத்தவர் பிற சமூகத்தினருடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், சமத்துவத்தை பேணுவதற்கும் உதவுவதுமாகும். அப்படிப்பட்ட நாட்களில் மாணவப் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகளின் மன நிலையை எண்ணிப் பாருங்கள்.

பல திறமைகளை வெளிப்படுத்தும் வயதில், சிறிது கூட ஒய்வின்றி ஒரே பாடங்களை மட்டும் கற்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வீட்டில் யாரேனும் கடைக்கு போகச்சொன்னாலும், அவன் பிளஸ் 2 படிக்கிறான் அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என பதில் கிடைக்கும். உறவினர்களின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால்தானே அவர்களுக்கும் யார் உறவினர்கள் என்று தெரியும். பள்ளிக்கூடங்களும், பயிற்சி வகுப்புகளும் மட்டுமே பாடம் படிக்கும் இடங்கள் அல்ல. இது போன்ற உறவினர் வீடுகளும், மகிழ்ச்சியும் துக்கமுமான சம்பவங்கள் கூட வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத்தரும் சிறப்புவாய்ந்த இடங்கள் அல்லவா. யார் உறவினர்கள் என்றே தெரியாமல் இந்தத் தலைமுறை வளர்வதற்கு பயிற்சி வகுப்புகளும், அதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் பள்ளிக்கூடங்களும் மட்டுமே காரணம்.

படிக்கும் நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறைகள் கிடைப்பதில்லை என்றால் படிப்பு முடிந்தவுடன் வரக்கூடிய ஏப்ரல், மே விடுமுறைகளிலும் கூட மாணவர்களின் மகிழ்ச்சி பறிபோகிறது என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். விடுமுறைக் காலங்கள் ஓய்வு காலம் மட்டுமல்ல, பல நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு, உறவினர் வீடுகளுக்கு சென்று உறவைப் புதுப்பித்தல், புதிய ஊர்களுக்கு சுற்றுலா சென்று அந்த ஊர்களையும், மனிதர்களையும் கண்டுகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் வெகுமதியான காலங்கள் அவை. அப்படிப்பட்ட நாட்களின் சுவையை அறிய முடியாத வகையில் பள்ளிக்கூடங்கள் மாணவர்களை கட்டிப்போட்டுவிடுகின்றன. ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், பதினொன்றாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், இன்று ஐ.ஏ.எஸ்.க்கு தயாராகுபவர்களை விடவும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களின் பணியை விட கடுமையான ஒன்றாக பார்க்கும் மனோநிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

இப்படி மாணவர்களின் மனதை வளப்படுத்த வேண்டிய பள்ளிகள், நஞ்சை விளைவிக்கும் வகையில் செயல்படுவது எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதா? பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும், நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறார்களா? அல்லது சமுதாய அக்கறை உள்ள நல்ல குடிமகனாக, இயற்கையை, மனிதனை, மொழியை நேசிப்பவானாகவும், அன்பும் பண்பும் மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்குபவனாகவும் வளர வேண்டும் என விரும்புகிறார்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களும், தங்கள் மாணவர்கள் வருமானம் ஈட்டக்கூடிய இயந்திரங்களாக உருவாக வேண்டுமா? தலைமுறைகளை கடந்தும் பயன்படக்கூடிய நற்குணங்களை உடைய மண்ணின் மைந்தர்களாக, பண்பாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரமிது.






      Dinamalar
      Follow us