sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தன்னைத்தானே நிர்வகிப்பது எப்படி?’

/

தன்னைத்தானே நிர்வகிப்பது எப்படி?’

தன்னைத்தானே நிர்வகிப்பது எப்படி?’

தன்னைத்தானே நிர்வகிப்பது எப்படி?’


ஜூன் 10, 2015 12:00 AM

ஜூன் 10, 2015 12:00 AM

Google News

ஜூன் 10, 2015 12:00 AM ஜூன் 10, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முறையாக நிர்வாகப் பயிற்சி பெற்ற ஒருவர், பொருள், செல்வம் கருவி மற்றும் பிறரை நிர்வகிக்கக் கற்றுக்கொண்டு விடலாம்; அது கடினமன்று. ஆனால் அவர் தன்னைத்தானே நிர்வகிப்பது அவ்வளவு எளிதல்ல. தன்னைத்தானே நிர்வகிக்கத் தெரிந்த எவரும், எதையும் நிர்வகிக்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள்!

எல்லோருக்கும், பாரபட்சமின்றி, சமமான கால அளவை இறைவன் கொடுத்திருக்கிறான். அதாவது, ஒரு நாள் 24 மணி நேரம்தான், ஒரு மணி 60 நிமிடங்கள்தான், ஒரு நிமிடம் 60 நொடிகள்தான்! சிலர் காலத்தை நல்லமுறையில்  பயன்படுத்தி, வாழ்வில் வெற்றி அடைகிறார்கள்!  பலர் காலத்தை விரயம் செய்து, தோல்வியைத் தழுவுகிறார்கள்!

ஸ்டீபன் கோவே என்ற சிந்தனையாளர் கூறியது போல,  அவசரம்,  முக்கியத்துவம் இரண்டையும் அடிப்படையாக வைத்து, ஒருவர் ஆற்ற  வேண்டிய வாழ்க்கைக் கடமைகளை, அன்றாடப் பணிகளை  நால்வகையாகப் பிரிக்கலாம்.

 1. முக்கியமானது, அவசரமானது. 
2. முக்கியமானது, அவசரமில்லாதது.
3. முக்கியமில்லாதது, அவசரமானது.
4. முக்கியமில்லாதது, அவசரமில்லாதது.

இவற்றில், எந்த வகைப்பணியை முதலாவதாகவும், மற்றவற்றை எந்த வரிசையிலும் செய்ய முற்படுவீர்கள்?

பெரும்பான்மையானோர் 1-ம் பணியை முதலாவதாகச்  செய்யவேண்டும் என்றும், 4- ம்  பணியை நான்காவதாக, அதாவது கடைசியாகச்  செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்! கிட்டத்தட்ட பாதிப்பேர், 3-ம் பணியை இரண்டாவதாக செய்ய வேண்டும் என்றும், மீதிப்பேர், 2-ம் பணியை இரண்டாவதாகச்  செய்யவேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்!

ஆனால், நம் சிந்தனையை புரட்டிப் போடும் விதத்தில், ஸ்டீபன் கோவே சொல்வது இதுதான்:

2ம் வகையைச் சார்ந்த முக்கியமான, அவசரமில்லாப் பணிகளே, நம் வாழ்வில் நாம் முந்திச் செய்ய வேண்டிய, முதன்மையான பணிகளாகும். இவை நம் வாழ்வின் முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான, முதன்மையான பணிகளாகும். 

இவற்றை அலட்சியமாக நாம் தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டு 1-ம் வகைப்பணிகளாக, அதாவது முக்கியமான,  அவசரமான பணிகளாக மாற்றி  விடுகிறோம்! உதாரணம், மேற்படிப்பிற்கும், வேலைக்கும் முறையாக விண்ணப்பித்தல், திட்டமிட்டு, அவ்வப்போது படித்து, பயிற்சியில் ஈடுபட்டு, தேர்வுகளுக்கும், போட்டிகளுக்கும் தயாராகுதல், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல் போன்ற முக்கியமானவை, 2-ம் வகையைச்சேர்ந்த பணிகள்!  

மேலும், முக்கியமில்லாத, அவசரமான பணிகள், அவசரத்தின் காரணமாக முக்கியமானது போலத்தோன்றும்! அவை முக்கியமில்லாதவை என்ற  அடிப்படையில், மூன்றாவதாக செய்து முடிக்கவேண்டியதாகும். 
 
ஸ்டீபன் கோவே கூறும் சரியான வரிசைக் கிரமம்:

1. முக்கியமானது, அவசரமில்லாதது. 
2. முக்கியமானது, அவசரமானது. 
3. முக்கியமில்லாதது, அவசரமானது. 
4. முக்கியமில்லாதது, அவசரமில்லாதது.

உங்கள் சிந்தனைக்கு ஒரு சோதனை!

ஒரு பெரிய ஜாடி உங்கள் எதிரே இருக்கிறது. அதன் அருகே நிறைய மணல், சரளைக் கற்கள், கூழாங்கற்கள், தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள்  செய்யவேண்டியதெல்லாம் இதுதான்: மணல், சரளைக்கற்கள், கூழாங்கற்கள், தண்ணீர் இந்த நான்கு பொருட்களையும், எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக, அப்பெரிய ஜாடியில் நிரப்பமுடியுமோ, அந்த அளவு நிரப்புங்கள்!

முதலில் ஜாடியில் எந்த பொருளைப் போட்டு உங்கள் முயற்சியைத் தொடங்குவீர்கள்? மணலா? சரளைக்கற்களா? கூழாங்கற்களா? தண்ணீரா? ஜாடியில் எந்த வரிசைக்கிரமத்தில் நான்கு பொருட்களையும் அதிக அளவு நிரப்புவீர்கள்?

சரி நிரப்பும் வரிசைக்கிரமத்தை தீர்மானித்து விட்டீர்களா?

நிரப்பும் பொருட்களின் வரிசைக்கிரமத்திற்கான சரியான விடை இதுதான்: கூழாங்கல், சரளைக்கல், மணல், தண்ணீர். முதலில் கூழாங்கற்களைப் போட்டு ஜாடியை நிரப்பி, ஒரு குலுக்கு குலுக்கினால், உண்டாகும் இடைவெளிகளில், பின்பு போடப்படும் சரளைக்கற்கள் நிறைந்து கொள்ளும். அதன் பின்பு பொடி மணலைப் போட்டால், சிறிய இடைவெளிகளில் மண் துகள்கள் புகுந்து நிரம்பிக் கொள்ளும்.

கடைசியில் தண்ணீரை ஊற்றினால், அது எல்லா நுண்ணிய இடுக்குகளிலும், புகுந்து வியாபிக்கும். வேறு எந்த வரிசைக் கிரமத்திலும், இந்த அளவுக்கு, நான்கு பொருட்களையும் ஜாடியில்  திணிக்க முடியாது. வேண்டுமானால், நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள்!

இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான கால நிர்வாகப் பாடங்கள் நிறைய உண்டு!

ஜாடி இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளாகும். அதன் அளவை உங்களால் இம்மியளவும், கூட்டவோ, குறைக்கவோ முடியாது. ஆனால்  அதில் நீங்கள் நிரப்பும் உங்கள் செயல்கள் அல்லது நிகழ்ச்சிகளின் தன்மையைப் பொறுத்து, அவற்றின் அளவை கூட்டவோ, குறைக்கவோ முடியும். அதில்  நீங்கள் முதன் முதலாக நிரப்பவேண்டிய பணிகள், கூழாங்கற்களாகிய ’முக்கியமானது,  அவசரமில்லாதது’ ஆகும். இரண்டாவதாக நிரப்பவேண்டிய பணிகள் சரளைக் கற்களாம் ’முக்கியமானது, அவசரமானது’.

மூன்றாவதாக, முடிந்தால் நிரப்பவேண்டியது மணல் என்னும் ’முக்கியமில்லாதது, அவசரமானது’ ஆகிய பணிகளாம். கடைசியாக, இடமிருந்தால், தண்ணீருக்கு சமமான, ‘முக்கியமில்லாதது, அவசரமில்லாதது’ ஆகிய அற்பப் பணிகளை அந்நாளில் நிரப்பலாம். 

முன்னதாகவே, தேர்வுக்கு தயார் செய்தல், நோயைத் தடுத்தல்  போன்ற ’முக்கியமான அவசரமில்லாத பணிகளை’, நீங்கள்  திட்டமிட்டு,  முறையாக, அவ்வப்போது செய்து வந்தால், பின் வரும் நாட்களில், தேர்வோடு போராடுதல், நோயோடு போராடுதல் போன்ற ’முக்கியமான, அவசரமான’ பணிகள் உருவாகாமல் போகும்;  அவற்றை சந்திக்க வேண்டிய தேவையும் இல்லாமல் போகும்!

காலை சரியான நேரத்திற்கு  எழுந்து, அன்றாட வீட்டு வேலைகளை திட்டமிட்டு முடித்து, சரியான நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வது, உள்ளத்திற்கும், உடலுக்கும் உகந்த ’முக்கியமான, அவசரமில்லாத பணி!

ஆனால் இதற்கு  மாறாக,  காலை தாமதமாக எழுந்து, திட்டமிடாமல், பரபரவென்று காலைப் பணிகளை ஏனோ தானோவென்று  முடித்துவிட்டு, ஓட்டமும் நடையுமாக, பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு, சாலை விதிகளை மதிக்காமல்  பாய்ந்து சென்றால், அது உள்ளத்திற்கும்,  உடலுக்கும் அழுத்தம், சோர்வு கொடுக்கும் ‘முக்கியமான, அவசரமான’ பணியாக மாறிவிடும்.

எனவே முதல் வகையை அதிகப்படுத்துவதும், இரண்டாம் வகையை குறைத்துக்கொள்வதும் அல்லது இல்லாமலே ஆக்குவதும், உங்கள் கையில்தான் இருக்கிறது!

கல்வி நிலையங்கள், பணி புரியும் நிறுவனங்கள், மேலதிகாரிகள், உங்கள் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களின் எதிர்பாராத, உடனடித் தேவைகளையும், இயற்கை அளிக்கும் திடீர் சவால்களையும் நீங்கள் கையாளும் நிர்ப்பந்தம் வரலாம்.

அவை ‘முக்கியமான, அவசரமான’  பணிகள்தாம். அவற்றை நீங்கள் கையாண்டுதான் ஆக வேண்டும்! உங்கள் கை மீறி வந்த இவ்வகைப் பணிகள் குறைவாக இருக்கட்டுமே! நீங்களே உங்கள் பொறுப்பின்மையால், திட்டமிடாமையால், தேவையின்றி இந்த வகைப் பணிகளை,  உண்டாக்கவோ, கூட்டவோ வேண்டாமே! 
 
அன்றாடப்பணிகளில், கூழாங்கற்களுக்கும், சரளைக்கற்களுக்கும் போதுமான இடம் கொடுத்தது போக, இடமிருந்தால் மணல், பின்பு தண்ணீருக்கும் இடம் அளிக்கலாம்; இடம் இல்லையென்றால், துணிந்து அவற்றை ஒதுக்கி விடலாம். இதனால் உங்கள் வாழ்க்கையில், உங்கள் முன்னேற்றத்தில், எந்த பாதிப்பும் ஏற்படாது. மாற்றிச் செய்தால், உங்கள் பாடு திண்டாட்டம்தான்! 
 
‘முக்கியமில்லாத, அவசரமில்லாத’ வகைப் பணிகளில், குறிக்கோள் இன்றி நீண்ட நேரம் டிவி பார்த்தல், நீண்ட நேரம் அலைபேசியில் பேசுதல், அடிக்கடி சமூக வலைத்தள இணைப்புகளில் உலாவுதல், அரட்டை அடித்தல், நீண்ட தூக்கம், சோம்பேறித்தனம், எதையும் நாளை, நாளை எனத் தள்ளிப்போடுதல் போன்ற நேரக்கொல்லிகள் ஏராளம். ஜாக்கிரதை!

வரம்புக்குள் உள்ள பொழுதுபோக்கு உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதால், அவை ’முக்கியமான, அவசரமில்லாத’ வகையைச் சார்ந்தவை.

அதுவே வரம்பு மீறிய, கிரிக்கெட், சினிமா போன்ற பொழுதுபோக்குகளானால், குறிக்கோள் அற்ற கேளிக்கையாக, நேரக்கொல்லியாக, ’முக்கியமில்லாத, அவசரமில்லாத’ பணியாக, சுமையாக மாறிவிடும்; உங்கள் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாகி விடும்!

எனவே ‘முதன்மையானவற்றை முந்திச் செய்க!’ என்று ஸ்டீபன் கோவே எடுத்துச்சொன்ன அருமையான பழக்கத்தை, இளைஞர்களாகிய நீங்கள் அன்றாட வாழ்வில் மேற்கொண்டு, உங்களை நீங்களே சீரிய முறையில் ஆளுமை  செய்யக் கற்றுக்கொண்டு விட்டால், அப்பழக்கமே உங்களை வெற்றியை நோக்கி, வேகமாகக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை!

 -ஏ.வி.ராமநாதன், மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்.






      Dinamalar
      Follow us