ஆக 24, 2015 12:00 AM
ஆக 24, 2015 12:00 AM
பெயர் பெற்ற பிரபலமான கல்லூரியில் படித்தால் தான் மாணவன் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடிப்பான் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். ஒரு மாணவன் வெற்றி பெற கல்லூரியோ, ஆசிரியர்களோ, வசதிகளோ, சூழ்நிலையோ மட்டும் கிடையாது. இவற்றையும் கடந்து, நிறைய விஷயங்கள் உள்ளன!
பெற்றோருக்கே பெரும் பங்கு
கல்லூரியில் வசதிகள் எப்படி? உணவு வகைகள் என்ன? நான்கு ஆண்டு முடிவில் வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் தான் பெற்றோர் கேட்கின்றனறே தவிர, இந்த கல்லூரியில் சேர்த்தால், ஒழுக்கமான பொறியாளனாக வருவானா என்று எந்த பெற்றோரும் கேட்பதில்லை! சமுதாயத்திற்கு ஒரு ஒழுக்கமான பொறியாளனை உருவாக்கித்தர வேண்டும் என்றால் அதில் பெற்றோர்களின் பங்கு தான் மிக அதிகம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மாணவன் தினமும் அதிகபட்சம் 8 மணிநேரம் மட்டுமே கல்லூரியில் செலவிடுகிறான். அந்த 8 மணிநேரத்தில் கல்வியை மட்டுமே ஒரு கல்லூரியால் தரமுடியும். அதையும் கடந்து சில விஷயங்களை மாணவனுக்கு தரமுடியும் என்றால், ஓரளவுக்குத் தான் சாத்தியம். ஆனால், மாணவர்களிடம் 4 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் விளைவு, மாணவனுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கல்லூரிகளும் அடக்கி வைக்கிறோம் என்ற பெயரில், மாணவர்களை பேசவே விடாமல் செய்கின்றன. மாணவர்களை மாணவர்களாக பார்க்க வேண்டும். மாணவர்களை நம்பியே கல்லூரி; கல்லூரியை நம்பி மாணவர்கள் இல்லை!
நடுக்கம் வேண்டாம்
நான்கு ஆண்டு காலத்தில் அதிக மதிப்பெண் எடுத்து ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்றுதான் மாணவர்களும் நினைக்கிறார்களே தவிர, நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்துதல், ஒரே பாடத்தை நான்கு ஆசிரியர்கள் எழுதியதை ஒப்பிடுதல், அதிலிருந்து புரிந்துகொள்ளுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டவேண்டும்.
மற்றவர்களுடன் தன் மகனையோ அல்லது மகளையோ ஒப்பிடும் முன்பாக, ஒவ்வொருவருக்குமான ஆர்வம், குணாதியம் வேறுபட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு மாணவர்களும், பெற்றோரும் மனம் திறந்து பேச வேண்டும். ஆனால், இன்றைய மாணவர்கள் பேசுவதேயில்லை.
ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்கும் பாடம் தனக்கு புரியவில்லை என்று தனது நண்பர்களிடம் கூட சொல்ல வெட்கப்படும் மாணவன் ஆசிரியரிடம் எப்படி தைரியமாக சொல்வான்? வகுப்பில் எதுவுமே பேசமால் அமைதியாக இருப்பதை விட, ‘பாடங்களை கவனித்தேன் ஆனால் எனக்கு இந்த பாடம் புரியவில்லை; வேறுவிதமாக நடத்துங்கள்’ என்ற சொல்வது ஆசிரியருக்கு நிச்சயம் சந்தோஷத்தைத் தான் தரும்.
புரியவில்லை என்று சொல்வது எனக்கு மட்டுமே புரியவில்லை என்றாகிவிடுமோ என்று பயப்படவேண்டாம். எனக்கு இது பிடித்திருக்கிறது என்று சொல்லும் மாணவனைவிட, இது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் மாணவன் தான் பொறியியல் துறையில் சாதிக்க முடியும் என்பது எனது கருத்து!
-எம்.காதர் ஷா, செயலர், தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி.

