/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வாழ்வை ஒளிரவைக்கும் வார்த்தைகள்!
/
வாழ்வை ஒளிரவைக்கும் வார்த்தைகள்!
டிச 15, 2015 12:00 AM
டிச 15, 2015 12:00 AM
ஒருவரை வாழவைப்பதும், வீழவைப்பதும் அவருடைய வார்த்தைகளே என்றால் அது மிகையாகாது. ஒரு வார்த்தை வெல்லும், ஒருவார்த்தை கொல்லும்!
ஆம்! ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் இருக்கிறது என்பதைவிட, ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம்.
வார்த்தைகளே உள்ளத்தின் நிழற்படங்கள். குழப்பமான மனதில் இருந்து தெளிவான வார்த்தைகள் பிறப்பதில்லை; தெளிவான மனதில் இருந்து மட்டுமே ஆக்கப்பூர்வமான சொற்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன. வார்த்தைகளை ஒளிரச் செய்வதற்கு முதலில் சிந்தனையில் கவனம் செலுத்த வேண்டும். சிந்தனையில் வாழ்வின் இலட்சியம் கலந்திருக்க வேண்டும். வாழ்வின் இலட்சியம் தான் ஒருவருடைய சிந்தனையையும், செயலையும், வார்த்தைகளையும், பழக்க வழக்கங்களையும் உருவாக்குகின்றன.
பயனில்லாத சொற்களை திருவள்ளுவர் ‘பதர்’ என்கிறார். பயன் கருதி சூழ்நிலையை உணர்ந்து உயிரோட்டமான சொற்களைப் பேசி, வெற்றி வாசலில் நுழைவது ஒருகலை. ஆம்! இதயங்களின் கதவுகளைத் திறக்கும் ஆற்றல் சொற்களுக்கு மட்டுமே இருக்கிறது. மேலும், நற்செயல்களின் மூலம் அதனுள்ளே நுழைய முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வாறு வார்த்தைகளை ஒளிரச் செய்வது என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது!
சித்திரமும் கைப்பழக்கம் என்பது நமது முதுமொழி. பயிற்சியும், முயற்சியும் கைகோர்த்தால் எந்தக் கலையையும் கைவசமாக்கலாம். வார்த்தைகளை வண்ணமயமாக்குவதற்கு இதே சில யோசனைகள்:
1. பேசுவதற்கு முன்னர் சிந்தியுங்கள் என்றாலும் சிந்தித்தை எல்லாம் பேசி விடாதீர்கள்.
2. பழுத்த சொற்களைத் தேடித் தேடி இதய வங்கியில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அவை அவசிய சூழலில் தானாகவே உங்களுடைய பேச்சில் மலர்ந்து வாசனை வீசும்.
3. ஒவ்வொரு உரையாடலுக்கும் பின்னர், உங்களுடைய பேச்சை நீங்களே மதிப்பீடு செய்துபாருங்கள். ‘பதர்’ சொற்களைப் பயன்படுத்தி இருந்தால், அவற்றை எவ்வாறு பழுத்த சொற்களாக மாற்றுவது என்று எண்ணி அடுத்தமுறை சொற்களை மென்மையாகவும் வலிமையாகவும் மாற்றுங்கள்.
4. விமர்சன உளிகொண்டு சொற்களைச் செதுக்கிச் செதுக்கி ஒளிரச் செய்யுங்கள்.
சிந்தனையில் கவனம் செலுத்துங்கள். நல்ல சொற்கள் மலரும். சொற்களில் கவனம் செலுத்துங்கள், உயரங்கள் உமதாகும்!
-சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன்.

