தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெட்கம் விலக்கு! வெற்றி உனக்கு!!

வெட்கம் விலக்கு! வெற்றி உனக்கு!!

வெட்கம் விலக்கு! வெற்றி உனக்கு!!


ஏப் 19, 2016 12:00 AM

ஏப் 19, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 19, 2016 12:00 AM ஏப் 19, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘அவர்களால் முடியும், ஏனென்றால் அவர்கள் ‘முடியும்’ என்று உறுதியாகச் சிந்திக்கிறார்கள்’, என்பது ஓர் அயல்நாட்டு பழமொழி. படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது, உழைப்பு உயர்ந்த மனிதனாக்குகிறது, ஆனால் வெட்கம் சாதிக்க முடியாத சாதாரண மனிதனாக்குகிறது!

வெற்றிக்குக் காரணம் எதுவாயினும் இருக்கலாம். ஆனால், தோல்விக்கு முக்கிய காரணம் வெட்கம், தயக்கம் மற்றும் தெளிவின்மை மட்டுமே. துக்கப்பட்டால் துணிவைக் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் வெட்கப்பட்டால்?

பிறரைவிட உயரக்குறைவு, பிறரைவிட நாம் ஏழை, பிறரைவிட அதிகம் படிக்காதவர், மற்றவர்போல சரளமாக ஆங்கிலம் பேசவராது, வெட்கம் நிச்சயம் இங்கு மேலோங்கும். யார் இந்தப் பிறர்? அவருக்காகவா நாம் வாழ்கிறோம்? நமது வெற்றியை, நமது படிப்பை, நமது பதவியை ஆழ்ந்து உணர்ந்து நம்மை நாமே மேம்படுத்திக்கொள்வது அவசியம்.

இந்த வெட்கம் கொண்டு சேர்க்கும் தோல்வி யாரால்? நமது பெற்றோராலா ? மற்றோராலா? இதில் குற்றம் சொல்வதற்கு எவருமில்லை. அதேபோல் உங்கள் கூச்சசுபாவத்திற்கும், மற்றவர்பொறுப்பல்லர். உலகில் எல்லாத்தரப்பினரும் என்றேனும், எங்கேனும் வெட்கப்படுகின்றனர். பலர் அதைச் சாமர்த்தியமாக மறைக்கின்றனர். ஆனால் அந்த வெட்க உணர்விலிருந்து யாரும் தப்பியதில்லை.

வெட்க உணர்வு சிலசமயம் பலம். கூச்ச சுபாவம் உள்ளவர்கள் படைப்புத்திறன் கொண்டவர்கள். சரியாகத் திட்டமிடுபவர்கள். பணிந்துகேட்பவர்கள். உலகைத் தனது திறமையால் அலங்கரிப்பவர்கள். உலகப்பிரச்சனைகளுக்கு அமைதியாகத் தனது நற்பங்கை ஆற்றி மகிழ்பவர்கள். கூச்சசுபாவம் குற்றம் அன்று. வெட்கமும், கூச்ச சுபாவமும் சில சமயம் நமது கோபத்திற்கும், தவிப்பிற்கும் ஒரு கவசமாக விளங்குகிறது. நமது கூச்சசுபாவம் நமக்கு எதிர்மறையாக இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகும் நம்மைச் சரிசெய்ய முயற்சி செய்து கொள்ளாதிருப்பதுதான் தவறு. நம்மைப் பற்றிய சரியான கணிப்பு, நமது பலவீனத்தை உணர்ந்து சரிசெய்து கொள்ளமுயற்சி, இவை நாள்பட நாள்படத் தானே வயதின், அறிவின் முதிர்ச்சியால் நிச்சயம் ஏற்படும்.

சகஜமாக இருக்க, தைரியமாக விளங்க, தெளிவுடன் இருக்க அன்றாட நிகழ்ச்சிகளும், சந்திக்கும் மக்களும் நமக்கு நிச்சயம் உதவக்கூடும். மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சிந்தனை இவையே வேண்டும் என தினமும் பிரார்த்தனை செய்ய வெட்கம் வெடித்துச் சிதறும். ‘நான் இப்படியே இருக்கப்போவதில்லை; எதையும் சமாளிக்கும் இயல்பை என்னுள் வைத்துத்தான் படைக்கப்பட்டிருக்கிறேன். என்னால் எதையும் சமாளிக்க முடியும்’, என்று நம்புங்கள்!

மிகவும் இருண்டு விடுகின்றபோது நட்சத்திரங்கள் வெளிவருகின்றன அல்லவா? அதுபோல மிகவும் இயல்பாகச் செயல்படுகிறபோது சாதனைகள் வெளிவருகின்றன!

அஞ்சுகின்ற கைகளில் உள்ள அரிவாள், அஞ்சுகின்ற குரலில் உள்ள இசை, அஞ்சுகின்ற கண்களில் உள்ள கனவு, அஞ்சுகின்ற உள்ளத்தில் உள்ள லட்சியம் இவை நான்கும் பயனற்றவை பட்டியலில் அடங்கும் என்பர் ஆன்றோர். ஆகவே வெட்கம் விலக்குங்கள், வெற்றிபெறுங்கள்! 

- முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us