/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மாணவர்களை ஈர்க்கும் ‘விசுவல் கம்யூனிகேஷன்’
/
மாணவர்களை ஈர்க்கும் ‘விசுவல் கம்யூனிகேஷன்’
ஜூன் 14, 2016 12:00 AM
ஜூன் 14, 2016 12:00 AM
மனிதன் நாகரிகம் அடைய தொடங்கிய காலத்திலிருந்தே, படம் மற்றும் உருவங்களை வைத்து, தகவல் பரிமாற்றம் செய்துவந்தனர். அந்த செயல்பாடுதான் பரிணாம வளர்ச்சியடைந்து இன்று, ‘விசுவல் கம்யூனிகேஷன்’ எனும் மிகப்பெரும் துறையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது!
தமிழகத்தில், 1980ம் ஆண்டுகளில் ஒரு சில கல்வி நிறுவனங்களே இந்தப் படிப்பைத் வழங்க துவங்கின. தற்போதைய நிலையில், தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன.
படிப்புகள்
கல்வி நிறுவனத்திற்கு ஏற்ப இளநிலையில் பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., படிப்பாகவும், முதுநிலையில் எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்பாகவும் வழங்கப்படுகிறது.
மனித தகவல்தொடர்பு, மேம்பாட்டு தகவல்தொடர்பு, மீடியா கலாசாரம் மற்றும் சமூகத்தைப் பற்றிய புரிந்துணர்வை தியரி வடிவிலும், விளம்பரம், போட்டோகிராபி, டெலிவிஷன் புரொடக்சன், பிலிம் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவைப் பற்றிய பயிற்சியை செயல்வழியிலும் வழங்குகின்றன.
தகுதிகள்
ஒருவர் தனது பள்ளிப் படிப்பை எந்தப் பிரிவில் முடித்திருந்தாலும், இளநிலைப் பட்டப் படிப்பில் விசுவல் கம்யூனிகேஷன் பிரிவை தேர்வு செய்யலாம். எனினும், இப்படிப்பிற்கான அமோக ஆதரவு மற்றும் போட்டி காரணமாக, சிறந்த கல்லூரிகள் பல இந்தப் படிப்பில் மாணவர்களை சேர்க்க, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை நடத்துகின்றன.
வேலை வாய்ப்பு
மீடியா மற்றும் விளம்பரத் துறையில், ஆர்ட் டைரக்டர்ஸ், காப்பி ரைட்டர்ஸ், மற்றும் அக்கவுன்ட் எக்ஸிகியூட்டிவ் ஆகிய பணி வாய்ப்புகளையும், தொலைக்காட்சித் துறையில், புரொகிராம் எக்ஸிகியூட்டிவ், கேமரா மேன் மற்றும் எடிட்டர் பணி வாய்ப்புகளையும் பெறலாம்.
போட்டோகிராபி துறையில், போட்டோ ஜர்னலிஸ்ட், அட்வர்டைசிங் போட்டோகிராபர், பேஷன் போட்டோகிராபர், இன்டஸ்டிரியல் போட்டோகிராபர் மற்றும் வொயில்ட்-லைப் போட்டோகிராபர் ஆகிய பணி வாய்ப்புகளையும், மாணவர்களுக்கு இந்தப் படிப்பு வழங்குகிறது.
சினிமாத் துறையில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும், ஆர்ட் டைரக்டர்களாகவும், ஐ.டி., துறையில் வெப் டிசைனர், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆர்ட்டிஸ்ட், அனிமேஷன் பர்சோனல் மற்றும் இன்டர்பேஸ் டிசைனர்ஸ் என பலதரப்பட்ட பணி வாய்ப்புகளை பெற முடியும்.
இத்துறையில் இளநிலைப் பட்டப்படிப்பின் போதோ அல்லது முதுநிலை பட்டப்படிப்பிலோ தங்களுக்கு பிடித்தமான பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்யும் வாய்ப்பு உண்டு. இதுபோன்று பரந்த வாய்ப்புகளைக் கொண்ட விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை மேற்கொள்ள மாணவர்கள் தயங்க வேண்ட அவசியமில்லை!

