அக் 27, 2016 12:00 AM
அக் 27, 2016 12:00 AM
சமீபத்தில் சேலத்தில் உள்ள ஒரு துணிக்கடையில், ‘வேலைக்குப் படித்த இளைஞர்கள் வேண்டாம்; வேலையைப் படித்த இளைஞர்கள் வேண்டும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தேன்... வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு வெறும் புத்தக அறிவைவிட, செயலாக்கத் திறனே அவசியம் என்பது புரிந்தது!
பலர் நிறைய படித்துவிட்டு வேலை தேடுகின்றார்கள். ஆனால், வேலைக்குத் தேவையான திறமைகள் அவரிடத்தில் இல்லை என்பதைக் கூட அவர்கள் உணராமல் இருப்பது தான் பரிதாபத்திற்குரியது!
வேலைக்குத் தேவையான திறனை ஆங்கிலத்தில் ‘வொர்க்கிங் ஸ்கில்ஸ்’ என்பார்கள். நமது கல்வி முறையில் புத்தக அறிவை பெறுவதற்கான வாய்ப்பு மட்டும் இருக்கிறது என்றாலும், படிக்கும் காலத்திலேயே ஓய்வு நேரங்களில், விடுமுறைக் காலங்களில், பல்வேறு திறன்களை வளர்த்து கொண்டால் நிச்சயம் முன்னேற முடியும்.
உதாரணமாக, வாகன ஓட்டுனர் பயிற்சி எடுத்து உரிமம் பெறுதல், மின் சாதனங்கள் பழுது நீக்கும் திறன், நீர் இணைப்புகளை சரி செய்யும் திறன், தொலைக்காட்சி, செல்போன் பழுது நீக்குதல் என்று எண்ணற்றவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளைக் குவிக்கலாம்.
‘கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்‘ என்றார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஓய்வு நேரத்தைத் தேயவிடாமல், திறன் வளர்ப்பில் முதலீடு செய்தால் வாழ்வெல்லாம் வெற்றிகளைக் குவிக்கலாம்!
கொஞ்சம் சர்க்கரையை அள்ளித் தரையில் வீசினால் எவ்வாறு எறும்புகள், அதைத் தேடி ஓடி வருகின்றதோ, அதுபோல திறமைகளை வளர்த்துக் கொண்டால், வேலை வாய்ப்புகள் தேடிவரும்!
எதையும் முனைப்புடன் செய்யும் பழக்கத்தை இளமைக்காலம் முதல் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முனையிருக்கின்ற ஊசிதான் தைக்கும். அதுபோல முனைப்பு இருக்கின்ற முயற்சி தான் ஜெயிக்கும்!
எதிரே உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி தொழிற்திறனை வளர்த்துக் கொள்பவர்களுக்கு திரும்பும் திசையெங்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
காரணங்கள் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கரைக்காமல் காரியத்தில் இறங்கி நேரத்தை உழைப்பில் முதலீடு செய்தால் ஊர் புகழ வளரலாம்! சிகரம் தொடலாம்!
-முனைவர் கவிதாசன்
