டிச 08, 2016 12:00 AM
டிச 08, 2016 12:00 AM
அ நிறம் | அளவு
குண்டூசி முதல் விண்ணில் பாயும் செயற்கைக்கோள் வரை அனைத்து விதமான பொருட்களையும் வடிவமைப்பவர், ’புரொடக்ட் டிசைனர்’!
காலத்திற்கு ஏற்ப மக்களின் தேவைகளும் மாற்றம் காண்கிறது. நுகர்வோரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், மேலும் அவர்களை கவரும் வகையிலும் பொருட்களை வடிவமைக்க வேண்டியது அனைத்து நிறுவனங்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்து, பொருளின் சாதனைக்கும், நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் புரொடக்ட் டிசைனர்கள் உதவுகின்றனர்.
தேவையான திறன்கள்
பொதுவாக, வடிவமைப்பாளர்களுக்கு, இயல்பாகவே கற்பனை திறன் அதிக அளவில் இருத்தல் வேண்டும். இத்துறையை தேர்வு செய்யும் மாணவர்கள் வடிவமைப்பை பற்றின நுண்ணறிவை நன்கு வளர்த்து கொள்வதும் நல்லது. வடிவமைப்பின் செயல்முறை, பொருட்களின் வலிமை, வடிவமைப்பின் வரலாறு மற்றும் மக்களின் தேவைகள் உள்ளிட்டவற்றை அறிந்திருப்பதும் அவசியம். இவற்றுடன், டிஜிட்டல் மற்றும் காட்சிப்படுத்தல் திறன் பெற்றிருத்தல், இத்துறையில் சாதனை படைக்க உதவும்.
படிப்புகள்
ஒரு பொருளின் பயன்பாடு மற்றும் தேவைகள் எவை, அதை மேலும் பயனுள்ளதாக்க எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதை அறிய உதவும் படிப்பு தான் ’புரொடக்ட் டிசைன்’. இது, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு என பலநிலைகளில் வழங்கப்படுகிறது. பல்வேறு மூலப்பொருட்களில், புதிய பொருட்களை வடிவமைத்தல், வண்ணங்களை சிறப்பாக பயன்படுத்துதல், வரைதல் போன்றவற்றை இப்படிப்பு கற்பிக்கிறது.
எங்கு படிக்கலாம்?
நேஷனல் இன்ஸ்டிடியுட் ஆப் டிசைன், அகமதாபாத் (பி.டிசைன் மற்றும் எம்.டிசைன்)
சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியுட் ஆப் டிசைன், புனே (பி.டிசைன்)
ஜி.டி. கோயங்கா ஸ்கூல் ஆப் பேஷன் டிசைன், குர்கான் (பி.எஸ்சி., - 3 ஆண்டுகள், பி.டிசைன், எம்.எஸ்சி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., டிசைன் படிப்பு - 5 ஆண்டுகள்)
இன்டஸ்டிரியல் டிசைன் சென்டர் ஐஐடி., மும்பை (பி.டிசைன், எம்.டிசைன் மற்றும் பி.எச்டி.,)
இன்ஸ்ட்ரூமென்ட் டிசைன் டெவலப்மெண்ட் சென்டர், ஐஐடி., டெல்லி (முதுநிலை படிப்புகள்)
உட்பட ஏராளமான நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ‘இண்டஸ்ட்ரியல் டிசைன்’ படிப்புடன் இணைத்து வழங்கப்படுகிறது.
வாய்ப்புகள்
புரொடக்ட் டிசைன் படித்தவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாய்ப்புகள் அதிகம். ஐ.டி., உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், வீட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறு முதல் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற முடியும்.
டைடன், நில்கமல், இந்துஸ்தான் யூனிலீவர், அடிடாஸ், விப்ரோ, வேர்பூல், மைக்ரோசாப்ட், ரிலையன்ஸ் உட்பட இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு தொழில் நிறுவனங்கள் ஏராளம். பட்டப்படிப்பு முடித்தவுடன் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இத்துறையில் சம்பாதிக்க முடியும். திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப லட்சங்களில் சம்பாதிக்கலாம். சொந்தமாக, வடிவமைப்பு நிறுவனங்களை தொடங்குவதும் சிறந்தது!
