பிப் 01, 2017 12:00 AM
பிப் 01, 2017 12:00 AM
உயர்கல்வி பெறுவதற்காக, இங்கிலாந்து நாட்டை தேர்வு செய்யும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது!
இங்கிலாந்தின் உயர்கல்வி புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில், அதிக அளவில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. என்றபோதிலும், 2015-16ம் ஆண்டில் உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 44 சதவீதமாக குறைந்துள்ளது. ஜெர்மனி மாணவர்களின் எண்ணிக்கையும் 6 சதவீதமாக குறைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இங்கிலாந்தில் உயர்கல்வி பெற விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையில், சீனா - 6 சதவீதம், பிரான்ஸ் - 3 சதவீதம் மற்றும் அமெரிக்க - 3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில், 2015-16ம் ஆண்டுகளில், உயர்கல்விக்கு பதிவு செய்த ஒட்டுமொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 80 ஆயிரத்து 830 ஆக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது ஒரு சதவீதம் மட்டுமே அதிகம்.
காரணம் என்ன?
இங்கிலாந்து அரசாங்கம் மாணவர் விசா முறையில் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கையே இத்தகைய ஏற்ற, இறக்கங்களுக்கான காரணமாக கருதப்படுகிறது!
பாதிப்பு யாருக்கு?
“இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இங்கிலாந்து 2 பில்லியன் பவுண்டுகள் அளவிலான வியாபாரத்தை இழக்க நேரிடும்” என்கிறார், இங்கிலாந்து உயர்கல்வி கொள்கை நிறுவனத்தின் இயக்குனர், நிக் ஹில்மேன்.
“இங்கிலாந்து அரசின், சர்வதேச மாணவர்களை கட்டுப்படுத்த எடுக்கும் கொள்கையால், பொருளாதார இழப்பு நேரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு பேருதவி புரிய, இங்கிலாந்து அரசிடம் இருந்து உரிய ஆதரவு தேவை” என்கிறார், யுனிவர்சிட்டிஸ் யுகே அமைப்பின் துணை தலைமை நிர்வாகி, அலிஸ்டைர் ஜார்விஸ்.
இந்த புள்ளி விவரங்களினால், சர்வதேச மாணவர் விசா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இங்கிலாந்து அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
