மார் 13, 2017 12:00 AM
மார் 13, 2017 12:00 AM
சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில், நிகழும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றிய பிரத்யேக படிப்பு, ‘பேரிடர் மேலாண்மை’!
பேரிடர் என்பது இயற்கையால் மட்டும் ஏற்படுவது அல்ல. குண்டு வெடிப்பு, தீ வீபத்துகள், தொழில்துறை விபத்துக்கள் (நச்சு இரசாயனங்கள் அல்லது கதிரியக்கப் பொருட்கள் வெளியீடு), அணை உடைப்புகள், அணு உலை விபத்துக்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற மனிதர்களால் ஏற்படும் செயற்கை பேரழிவுகள் மற்றும் பஞ்சம், வறட்சி, சூறாவளி புயல், வெள்ளம், கடல் அலைகள், சுனாமி, எரிமலை, பனி புயல், பூகம்பங்கள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் என இரு வகையாக பேரிடர் மேலாண்மை பிரிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகளில், எவ்வாறு துரிதமாக செயல்பட்டு, உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாப்பது என்பதனை, பேரிடர் மேலாண்மை படிப்பில், வகுப்பறை கல்வி மற்றும் கள ஆய்வு மூலம் கற்றுக்கொள்ளலாம்.
தகுதிகள்
இளநிலை பேரிடர் மேலாண்மை பட்டப்படிப்புக்கு, பிளஸ் 2வில் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில், ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆராய்ச்சி படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். பெரும்பாலான கல்லூரிகள் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகிறது.
தேவைப்படும் திறன்கள்
சிறந்த ஆளுமை திறன், விரைந்து செயல்படும் உத்வேக திறன், உடல் மற்றும் மன வலிமை, முதல் உதவி அறிவு, சகிப்புத்தன்மை, பொறுமை உள்ளிட்ட பண்புகளை பெற்றிருந்தால் இத்துறை எளிதில் சாதிக்கலாம்.
வேலை வாய்ப்புகள்
அரசாங்க நிறுவனங்கள், தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம், தீயணைப்பு துறைகள், வறட்சி மேலாண்மை துறைகள், சட்ட அமலாக்கத் துறைகள், நிவாரண முகவர் காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (ரசாயனம், சுரங்கம், பெட்ரோலியம்) மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறலாம். இவை மட்டுமல்லாமல் ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர், ஆவணம் சரிபார்த்தல், சமூக பணிகள், தன்னார்வ சேவை நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் துடிப்பான இளைஞர்கள் பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.
சிறந்த கல்வி நிறுவனங்கள்
சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோஇன்பர்மெடிக்ஸ், புனே
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட், டெல்லி
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ், முப்பை
டாடா சென்டர் ஆப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட்
டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், போபால் மற்றும் அகமதாபாத்
குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், டெல்லி
அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்
அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட், நொய்டா
