தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புன்னகையை மீட்டெடுப்போம்!

புன்னகையை மீட்டெடுப்போம்!

புன்னகையை மீட்டெடுப்போம்!


ஜூலை 07, 2017 12:00 AM

ஜூலை 07, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 07, 2017 12:00 AM ஜூலை 07, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இப்போதெல்லாம் ஐந்து இளைஞர்களில் மூவருக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது! இந்த ஆண்டு ஒரு பிரபல மனநல ஆலோசகருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பெரம்பூரில் இருந்து சரவணனின் தாயார் அழைத்து இருந்தார். அவர் உடனே ஒரு ‘அப்பாயின்மென்ட்’ வழங்கினார். சரவணன், அவனது தாய் மற்றும் தந்தை மூவருமே சென்றிருந்தனர்.

மூவரையும் முதலில் தனது அறைக்குள் அழைத்த மனநல ஆலோசகர் வந்த விஷயத்தை கேட்டார். சரவணன் 712/1200 மதிப்பெண் தான் வாங்கி இருக்கிறான். அவனை எப்படி பொறியியல் சேர்ப்பது என்பது குறித்துத் தான் என்று பதில் வந்தது. பெற்றோர் இருவரையும் சிறிது நேரம் வெளியே உட்காரச் சொல்லி விட்டு சரவணனை மட்டும் தனக்கு எதிரே போடப்பட்டுள்ள தனி நாற்காலியில் அமரச் சொன்னார்.

அவர் எதுவுமே பேசவில்லை. பெரும்பாலும் எல்லோருக்கும் அட்வைஸ் தேவைப்படுவதில்லை.  சில சமயம் அன்பான ஒரு புன்னகை, ஆறுதலான ஒரு பார்வை, சொல்வதைக் கேட்க காதுகள், நட்புடன் ஒரு ஸ்பரிசம்...! இதனை நன்கு உணர்ந்தவர் அனுபவசாலியான அந்த ஆலோசகர்.

சரவணன் தானே ஆரம்பித்தான். பேசும் பொழுதே அவனுக்கு கண்ணில் நீர் முட்டியது. அவனை மிகுந்த புன்னகையோடு அனுசரணையாக அவர் பார்த்தார். சார், நான் எதிர்பார்த்த அளவுக்கு எனக்கு மதிப்பெண் வரவில்லை. அதுவும் குறிப்பாக எனக்கு கணிதம் சுட்டுப்போட்டாலும் வராது. ஆனால், என் அப்பாவோ பிடிவாதமாக எவ்வளவு செலவு ஆனாலும் என்னை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தான் சேர்ப்பேன் என்று தனது நண்பர் மூலம் ஏற்பாடு செய்து விட்டார்.

நான் மூன்று நாளாக சரியாக சாப்பிடவில்லை; தூங்கவில்லை. எனக்கு அவர் சொல்லும் படிப்பில் சேர சற்றும் விருப்பம் இல்லை. எனக்கு போட்டோ எடுப்பது, குறும்படம் எடுப்பது இவற்றில் தான் விருப்பம் உள்ளது. நான் அதைச் சொன்னாலே அப்பா டென்ஷன் ஆகிறார். அம்மாவும் அப்பாவிற்கு தான் சப்போர்ட். எனக்கு வாழவே பிடிக்கவில்லை. ஒரே மூச்சில் பேசி முடித்தான் சரவணன்.

மனநல ஆலோசகர் சரவணனின் பெற்றோரை உள்ளே வரச் சொன்னார். தனது லாப்டாப்பை திறந்து போட்டோ, மீடியா சம்பந்தமான விஷயங்கள், அதில் சாதித்துள்ளவர்கள் இவர்கள் பற்றி காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுதே, சரவணனின் தந்தை சற்று நிதானமாக, அதேசமயம் கோபமாக சொன்னார், ‘எனது பையனை நான் மெக்கானிகல் தான் போடப்போகிறேன்’.

அதற்கு அவர், உங்கள் பிடிவாதம், வீண் பிரெஸ்டிஜ் தான் முக்கியமா? உங்கள் பையனின் வாழ்க்கை, எதிர்காலம், சந்தோசம் முக்கியமா? என்று கேட்டார். சரவணனின் தந்தை மௌனமாக இருந்தார். அப்போது அவர் சொன்னார், உங்கள் பையனுக்கு கணிதம் என்றாலே பயம். அவனுக்கு இருக்கும் விருப்பமே வேறு. எது படித்தாலும் அந்தத் துறையில் வேலை பார்க்க வேண்டும் அல்லது ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும். அதில் இருந்து வருமானம் ஈட்ட வேண்டும். உங்கள் பிடிவாதத்தை சற்று தளர்த்திக் கொண்டு உங்கள் மகனுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுங்கள் என்றார்.

டாக்டர் சொன்னவிதம், அதில் உள்ள உள்ளர்த்தம் அவற்றை சரியாகப் புரிந்து கொண்ட சரவணனின் தந்தை அவனை மீடியா மற்றும் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ப்பதாக ஒப்புக் கொண்டு, சரியான நேரத்தில் சரியான ஒரு யோசனை சொல்லி தனது மகனின் எதிர்காலத்தை சந்தோஷமாக மாற்றித் தந்தமைக்கு நன்றி பாராட்டி வணக்கம் சொல்லி நகர்ந்தார். சரவணனின் முகம் 1000 வாட்ஸ் பிரகாசமாக இருந்தது.

இன்று பல சரவணர்களின் மகிழ்வை மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது. அது நிச்சயம் பெற்றோர் கையில் தான் இருக்கிறது!

-முனைவர் பாலசாண்டில்யன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us