ஆக 17, 2017 12:00 AM
ஆக 17, 2017 12:00 AM
பிரவீணா, பிளஸ் 2வில் நிறைய மதிப்பெண் எடுத்திருந்தாள். அவள் தந்தை, அவளை சென்னையிக்கு அருகே, ஒரு நிகர்நிலை தனியார் பல்கலையில் பொறியியல் படிப்பிலும், அங்கேயே பெண்கள் விடுதியிலும் சேர்த்து விட்டு, பணம் கட்டித் திரும்பினார்.
ஒரு மாதம் கூடத் கடந்திருக்காது. ‘எனக்கு இங்கே ஹாஸ்டல் மற்றும் உணவு பிடிக்கவில்லை என்னை வந்து கூட்டிப் போய் விடுங்கள்’ என்று மகளிடம் இருந்து அழுதபடி தொலைபேசி அழைப்பு. கட்டிய தொகை இழந்து அவளை சென்னை கூட்டி வந்து, வேறு ஒரு கல்லூரியில் சேர்த்தார் மீண்டும் மிகப்பெரிய தொகை செலுத்தி!
ஓராண்டு கடந்த பிறகு, பிரவீணா, தான் எடுத்துப் படிக்கும் ‘சப்ஜெக்ட்’ பிடிக்கவில்லை என்று சொல்லி, மருத்துவம் சேர்வதற்கு தயாரானால்... மருத்துவம் சேர்ந்தால் யார் பணம் கட்டுவது? இதுவரை கட்டிய பணம் என்ன ஆவது? என்று வீட்டில் பெரும் வாக்குவாதம். இறுதியாக, பிரவீணாவின் தந்தை, தனது மகள் மற்றும் மனைவியுடன் அந்த பிரபல மனநல டாகடரை சந்திக்கின்றனர். நடந்த அனைத்தையும் விவரமாக தந்தையார் சொல்ல பொறுமையாக கேட்டார் டாக்டர். பிறகு பிரவீணாவுடன் சற்று தனியாகப் பேசினார்.
‘பிரவீணா, நீங்கள் மிகவும் புத்திசாலி தான். ஆனால் உங்களுக்கு குறிப்பாக, பேசும் மற்றும் பிறருக்கு புரிய வைக்கும் திறன் குறைவு. அதனால் தான் உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இவ்வளவு சிரமமும், மன உளைச்சலும்! முதலிலேயே நான் மருத்துவம் தான் படிப்பேன் என்று கூறி உறுதியாக இருந்திருந்தால் ஏன் இவ்வளவு பண விரயம், ஒரு வருட கால தாமதம்? எல்லாம்.
உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்க பழகுங்கள். எடுத்த முடிவின்படி, சிறப்பாக செயல்பட்டு நீங்கள் வெற்றியாளர் என்பதை நிரூபியுங்கள். ஏற்கனவே நீங்கள் படிப்பில் சிறந்தவர். யோசித்துப் பார்த்து நல்லதொரு முடிவை நீங்களே எடுங்கள்’ என்று சில விளக்கங்களை கொடுத்தார் டாக்டர்.
சிந்திக்க சில மணிநேரங்கள் எடுத்துக்கொண்ட, பிரவீணா தனது தந்தையிடம் கூறினாள், ‘அப்பா நான் இந்த கல்லூரியில் ஏற்கனவே சேர்ந்துள்ள பொறியியல் பாடத்தை தொடர்ந்து, அதில் மிக நல்ல மதிப்பெண் எடுத்து உங்களுக்கு பெருமை சேர்ப்பேன்’ என்று. தந்தையாருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன செய்து விட்டார் இந்த மனநல ஆலோசகர் என்று! தீர ஆராய்ந்து யோசித்து, பிறகு செயல்பட சில வழிமுறைகளை பரிந்துரைத்தார், அவ்வளவுதான்!
குளத்தின் கரையில் அமர்ந்து கொண்டு ஒரு சிறிய கல்லை எடுத்து விட்டெறிந்தால் குளத்தில் வட்டம் வட்டமாக வரும். சற்று நேரத்தில், ஒவ்வொரு வட்டமாக குறைந்து மீண்டும் குளம் தெளிவாகும். அந்த சிறு கல்லுக்கு பதில் ஒரு பெரிய செங்கல்லை தூக்கிப் போட்டால் குளமே கலங்கிப் போகும். தெளிவு நிலைக்கு மாற நேரம் பிடிக்கும்.
அப்படித்தான் நமது மனதும்... முடிவெடுப்பதற்கு யோசிப்பதில் தவறில்லை. முடிவெடுத்த பிறகும் யோசித்துக் கொண்டே இருந்தால் குழப்பம் தான் மிஞ்சும். அங்கே தீர்வு எதுவும் இருக்காது. இந்த சம்பவம் நமக்கும் ஒரு பாடம்!
-முனைவர் பாலசாண்டில்யன்
