ஏப் 24, 2018 12:00 AM
ஏப் 24, 2018 12:00 AM
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,), கல்வி நிறுவனங்களில், எம்.எஸ்சி., மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி-பிஎச்.டி., பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு ‘ஜாம்’ !
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில், உயிரியல் அறிவியல், வேதியியல் அறிவியல், கணித அறிவியல், மற்றும் இயற்பியல் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் வழங்கப்படும் ஆராய்ச்சி (பிஎச்.டி.,) படிப்புகள் மற்றும் புவனேஸ்வர், மும்பை, தான்பாத், தில்லி, காந்திநகர், குவாஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கான்பூர், கரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டி.,க்களில் இரண்டு ஆண்டு எம்.எஸ்சி., எம்.எஸ்சி-பிஎச்.டி இணைப் படிப்புகள், எம்.எஸ்சி-பிஎச்.டி டியூயல் டிகிரி மற்றும் பிற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் உள்ள மாணவர் இடங்கள், ஜாயின்ட் அட்மிஷன் டெஸ்ட் (ஜாம்) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
தகுதி
அறிவியல், கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.
தேர்வு பகுதிகள்
இந்த தேர்வில், பயாலஜிக்கல் சயின்சஸ், பயோ டெக்னாலஜி, வேதியியல், ஜியாலஜி, மேத்மேட்டிக்கல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், கணிதம், இயற்பியல் ஆகிய ஏழு பாடங்களில் தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்கள் விருப்பதிற்கு ஏற்ப குறைந்தபட்சம் இரண்டு பாடங்களை தேர்வு செய்து எழுதலாம்.
தேர்வு முறை
ஆன்லைன் மூலம், சி.பி.டி., எனும் கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும். 3 மணி நேரம் கொண்ட இத்தேர்வில் மூன்று பகுதிகளாக கேள்வித்தாள் பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பிரிவில் 30 மல்டிபில் சாயிஸ் கேள்விகள், இரண்டாம் பிரிவில் 10 மல்டிபில் கேள்விகள், மூன்றாம் பிரிவில் 20 நியூமரிக்கல் டைப் கேள்விகள் என 100 மதிப்பெண்களுக்கு 60 கேள்விகள் ஆங்கில மொழியில் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான விடைகளுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண் உண்டு.
சேர்க்கை முறை
இத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மெரிட் முறையில், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனங்களில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விபரங்களுக்கு: http://jam.iitb.ac.in
