ஜூலை 17, 2018 12:00 AM
ஜூலை 17, 2018 12:00 AM
தொழில் நிறுவனங்களுக்கு இடையே உள்ள கடும் போட்டியினால், புதிய பொருட்களை வேகமாக தயாரித்து சந்தைப்படுத்த, ஒவ்வொரு நிறுவனமும் முயற்சிக்கின்றன. இந்நிலையில், புதியதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க தொழில் நிறுவனங்களுக்கு போதிய அவகாசம் இல்லை. நிறுவனத்தில் சேர்ந்த அன்றே பொறுப்பை உணர்ந்து, வேலை செய்ய வேண்டும் என்று, இன்று பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அவ்வாறு, தேவையான திறன் பெற்றவர்களுக்கே, இன்றைய தொழில் நிறுவனங்கள் வேலை வழங்குகின்றன!
அந்தவகையில், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை பெற்றவர்களாக உருவாக்கும் நோக்கில், அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்துடன், கூடுதல் பயிற்சிகளையும் சேர்த்து, எங்கள் கல்வி நிறுவனத்தில் வழங்கி வருகிறோம். வேலைக்கான திறன்கள் என்பதில், ’இன்டர்ன்ஷிப்’ கூடுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைத்து மாணவர்களும் ‘இன்டர்ன்ஷிப்’ செல்வதை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு கட்டாயமாக்கியது. அதற்கு முன்பாகவே, தொழில் நிறுவனங்களுடன் நல்லுறைவை மேம்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு ‘இன்டர்ன்ஷிப்’ வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறோம். தொழில் நிறுவனங்களில் ‘இன்டர்ன்ஷிப்’ சென்று வந்த மாணவர்களிடம் பெருத்த மாற்றங்களைக் காண முடிகிறது. அவர்களிடம், தன்னம்பிக்கை அதிகரிப்பதையும், பொறுப்பை உணர்ந்து செயல்படுவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது!
மேலும், ‘சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ்’ துவக்கும் நோக்கில் ஜி.இ., சீமென்ஸ் போன்ற சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். ரோபாட்டிக்ஸ், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளிலும் சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் துவக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். புதிய பயிற்சி முறைகளை புதிய கண்ணோட்டத்துடன் அணுகிவருகிறோம்.
அனைத்து பொருட்களும் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துவிட்ட இன்றைய நவீன உலகில், கன்டன்ட் ரைட்டிங் பணிக்கு பிரகாசமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்பணியை குறிப்பாக, பெண்கள் வீட்டில் இருந்துகொண்டே செய்ய முடியும் என்பதால், இதுகுறித்த பயிற்சியையும், எங்களது கல்வி நிறுவனத்தில் வழங்குகிறோம்.
40 வயதில் வேலையை இழந்தவர்களுக்கு, நல்ல வேலை கிடைப்பது மிகவும் கடினம். ஏனெனில், அந்த காலக்கட்டத்தில், குடும்பச் சூழ்நிலை அதிகமாக இருக்கும். புதியதாக கற்றுக்கொள்ளும் எண்ணமும் குறைந்து இருக்கும். சரியான பணியைப் பெறாத அத்தகைய வயதினரிடம் பொதுவாக, பயம் அதிகரித்துக் காணப்படும். இதனை இன்றைய மாணவர்கள் இப்போதே புரிந்துகொண்டு, திறன்களை தொடர்ந்து வளர்த்துவர வேண்டும். அப்போது, எந்த வயதிலும் அவர்கள் அச்சப்படத் தேவையில்லை.
ஐ.டி., துறையை எடுத்து படிக்கும் மாணவர்களே கூட, ஐ.டி., சார்ந்த அறிவை மட்டும் வளர்த்துக்கொண்டால் போதாது. பிற துறை சார்ந்த அறிவும் மிக அவசியம். அப்போதுதான் ஐ.டி., சார்ந்த பொருட்களையும் தயாரிக்க முடியும். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய துறை சார்ந்த பணிகள் வரும் காலத்தில் நிச்சயம் அதிகரிக்கும். தமிழக அரசு சமீபகாலமாக எடுத்துவரும் பள்ளி பாடத்திட்ட மாற்றம் உட்பட பல்வேறு நடவடிக்கைகள், தமிழக மாணவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்!
-ஜே.கார்த்திகேயன், தலைவர், ஸ்ரீ சாஸ்தா கல்வி நிறுவனங்கள், சென்னை.
