ஆக 02, 2020 12:00 AM
ஆக 02, 2020 12:00 AM
அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ துவங்கியுள்ள தற்போதைய சூழலில், உயர்கல்வித் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. கல்வி கற்றல், திறன் வளர்த்தல், சிறந்த வேலை வாய்ப்பை பெறுதல், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பண்புகளை கண்டறிந்து மேம்படுதல் என அனைத்து நிலைகளிலும் மாணவர்களின் நலனில், தொழில்நுட்பங்கள் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கின்றன.
கல்லுாரிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலில், உலகையை உள்ளங்கையில் கொண்டுவரும் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையானவற்றை போதித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பன்முக செயல்திறன் உடையவர்களாக திகழ்கின்றனர். இந்த தலைமுறையினரால் தகவல்களை எளிதாக, துரிதமாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்தால் போதும், எந்த நிலையையும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எளிதில் சமாளிப்பர். அதற்கு தற்போதைய கொரானா ஊரடங்கே ஓர் சிறந்த உதாரணம்.
ஆன்லைனில் வேலைவாய்ப்பு முகாம்
எங்கள் நிறுவனத்தில் பல ஆண்டுகளாகவே டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி வழங்க வருவதால், இப்போது பெரிய அளவில் சிரமங்கள் ஏற்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம், விடுபட்ட பாடங்களை முடித்துவிட்டு, வேலைவாய்ப்பு முகாமையும் நடத்தினோம். பல்வேறு நிறுவனங்கள் இந்த ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் மூலம் எங்களை மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளனர். இறுதியாண்டு மாணவர்கள், 95 சதவீத பேர் வேலை பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இறுதியாண்டு மாணவர்களை போன்று தற்போது மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகளை எடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்ய மூன்றுக்கும் மேற்பட்ட வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.
செயற்கை நுண்ணறிவு
மேலும், வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம், செய்முறை வகுப்புகளை கொண்டு செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம். இதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். அதற்கு ஏற்ப பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு மேம்படுத்திக்கொள்ள அவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி சாத்தியமாகிறது.
-எஸ். தங்கவேலு, தலைவர், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி
