/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இன்ஜி.,யுடன் படிக்க மேலும் பல படிப்புகள் ஏராளம்!
/
இன்ஜி.,யுடன் படிக்க மேலும் பல படிப்புகள் ஏராளம்!
ஜூன் 21, 2021 12:00 AM
ஜூன் 21, 2021 12:00 AM
கொரோனா பாதிப்பால் மாணவர்கள் சோர்ந்து போகாமல், தங்களின் உயர்கல்வியை படிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் ஏராளமான கூடுதல் படிப்புகளை, இந்த ஆண்டு அறிமுகம் செய்கின்றன. மாணவர்கள் உரிய வழிகாட்டுதல் பெற்று படித்தால், நல்ல எதிர்காலம் உள்ளதாக, கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், அடுத்த நிலைக்கு செல்கின்றனர். கொரோனா பாதிப்பு, ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டங்களை தாண்டி, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பை நோக்கிய பயணம் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில், கல்லுாரிகளும், பல்கலைகளும், புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளன. வருங்காலங்களில் இன்ஜினியரிங் படிப்புடன், கூடுதல் திறன்களை வளர்த்தால் மட்டுமே, வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
அதை உணர்ந்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வழி கல்வியுடன், திறன் சார்ந்த கூடுதல் படிப்புகளை படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே, மாணவர்கள் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு நிலைகளை பற்றி கவலைப்படாது, சோர்ந்து போகாமல் சிந்தித்து, தங்கள் கல்லுாரிகளையும், படிப்பையும் தேர்வு செய்தால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என, கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேர்வில் மாற்றம்
உயர்கல்வியின் தற்போதைய நிலை குறித்து, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் அளித்த பேட்டி:
தொழில் நிறுவனங்கள் முன்பெல்லாம், தங்களுக்கு தேவையான ஆட்களை, கல்வி நிறுவனங்களில் வளாக நேர்காணல் நடத்தி, அதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி அளித்து, பின் பணியில் அமர்த்தும். இப்போது, அனைத்து திறன்களையும் பெற்றுள்ள மாணவர்களை, நேரடியாகவே தேர்வு செய்வது அதிகரிக்கிறது.
மேலும், 'கோர்ஸிரா' உட்பட பல்வேறு ஆன்லைன் பயிற்சி நிறுவனங்கள், 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபாட்டிக்ஸ், டிரோன் டெக்னாலஜி, அர்ட்டானாமஸ் வெகிகிள்' உட்பட, 4,000 சான்றிதழ் படிப்புகளை, ஆன்லைன் வழியே வழங்குகின்றன. விருப்ப மானதை மாணவர்கள் படிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ.,யும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியை வழங்க, பொறியியல் அறிவு, மார்க்கெட்டிங் திறன், தொடர்பியல் திறன், வாழ்க்கை முழுவதற்குமான கற்றல் ஆர்வம் ஆகியவற்றை உள்ளடக்கிய, 12 வழிகாட்டு முறைகளை அறிமுகம் செய்துள்ளது.
பட்டம் போதாது
எனவே, மாணவர்கள் இதர திறன்களையும் வளர்க்கும் விதமாக, எங்கள் கல்லுாரியில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிசினஸ் சிஸ்டம்ஸ்' என்ற படிப்பை, டி.சி.எஸ்., நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறோம். ஏ.ஆர்., - வி.ஆர்., உட்பட, நவீன தொழில்நுட்ப படிப்புகளை, மாணவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, 'சஸ்டயினபிள் டெவெலப்மென்ட் கோல்ஸ்' எனும் தலைப்பில், 193 நாடுகளுடன் இணைந்து, வறுமை இல்லாமை, அனைவருக்கும் உணவு, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற, 17 இலக்குகளை அறிவித்துள்ளது. அந்த இலக்குகளை அடையும் வகையில், பட்டதாரிகள் உருவாக வேண்டும்.
'நீரின்றி அமையாது உலகு' என்ற குறளைப் போல, 'இன்ஜினியர் இன்றி அமையாது உலகு' என்பதையும் உணர வேண்டும். உலகை இன்னும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல, இன்ஜினியர்களுக்கு புத்தாக்க திறன் மென்மேலும் அவசியம். அதற்கு, சிறந்த இன்ஜினியர்கள் தொடர்ந்து உருவாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

