/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அமெரிக்காவில் 2 லட்சம் இந்திய மாணவர்கள்
/
அமெரிக்காவில் 2 லட்சம் இந்திய மாணவர்கள்
நவ 24, 2022 12:00 AM
நவ 24, 2022 12:00 AM
சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஓப்பன் டோர்ஸ் அறிக்கை’யின் படி, சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் உயர்கல்வி கற்பதற்காக அமெரிக்காவைத் தேர்வு செய்துள்ளனர்.
ஐ.ஐ.இ.,
அமெரிக்காவில் இயங்கும் ஐ.ஐ.இ., எனும் சர்வதேச கல்வி நிறுவனம் ’ஓப்பன் டோர்ஸ்’ என்ற அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. கடந்த 1919ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐ.ஐ.இ., அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் குறித்த புள்ளிவிவர கணக்கெடுப்பை அன்று முதல் நடத்தி வருகிறது.
மேலும், 1972 முதல் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகத்துடன் இணைந்து இது செயல்பட்டு வருவதோடு, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆங்கிலக் கல்வி திட்டங்களில் சேர்ந்துள்ள சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களையும் வெளியிடுகிறது.
19 சதவீதம் அதிகம்
ஓபன் டோர்ஸ் 2022 அறிக்கையில், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆன்லைன் மூலம் பயிலும் சர்வதேச மாணவர்கள் குறித்த விபரங்களும், 2021-22ல் விருப்ப நடைமுறை பயிற்சி - ஓ.பி.டி., பெற்றவர்களின் விபரங்களும் இடம் பெற்றுள்ளன. முந்தைய ஆண்டை விட இது 19 சதவீதம் அதிகமாகும்.
அமெரிக்காவில் சேர்க்கை பெற்றுள்ள பத்து லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில், சுமார் 21 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள்
இது குறித்து அமெரிக்க அரசின் பொது உறவு அமைச்சக ஆலோசகர் குளோரியா பெர்பெனா கூறுகையில், ”மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் அமெரிக்க கல்வியின் மதிப்பை அங்கீகரிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக தெளிவாகிறது.
அமெரிக்க உயர் கல்வி, உலகின் சவால்களை சமாளிக்க தேவையான திறன்களை வழங்கி, மாணவர்களைத் தயார்படுத்துகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தொழில் முனைதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் எதிர்கால வாய்ப்புகளையும் வழங்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

