ஜன 17, 2009 12:00 AM
ஜன 17, 2009 12:00 AM
பொதுவாக மொழிகளின் மீது ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் எப்போதுமே கிடைக்கின்றன. மொழியைக் கற்பது நம்மை பரந்து விரிந்த புதிய சூழல்களுக்கு அழைத்துச் செல்லும் வல்லமை கொண்டது. உலக மயத்தின் காரணமாக வல்லமை பெற்றவர்களின் பணிமேன்மை உத்தரவாதம் பெறுகிறது. புதியதாக ஒரு மொழியைக் கற்கவும் இன்று வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு மொழியில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளை இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தருகின்றன. துறைக்குத் தேவைப்படும் அடிப்படைகள் மொழி தொடர்புடைய வளமான எதிர்காலம் பெற மொழிகளின் மேல் இயற்கையிலேயே ஈடுபாடும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் துல்லியமான அர்த்தம் உள்ளது என்பதை உணர வேண்டும். மொழித் துறையில் வளர்ச்சி பெற அத்தியாவசியமான தேவையாக இருப்பது அவரவர் தாய்மொழியை நன்றாக அறிவது தான். இதன் மூலமாக மட்டுமே மொழி பெயர்ப்பு செய்யும் வேலையானது எளிதாகும். இதேபோல ஒரு மொழியைப் பயிலும் போது அம்மொழி அகராதியைப் புரட்டி வார்த்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அதன் பொருளை அறியும் தன்மை அவசியம் தேவைப்படுகிறது. ஒரு மொழி பற்றிய முழுமையான அறிவு கிடைத்தவுடன் நமது பலம் பல மடங்க உயர்வதுடன் நம் மனதில் இருக்கும் யோசனைகளை பரிமாற்றம் செய்வதும் எளிதாகிறது. பணித் தன்மை மொழி தொடர்புடைய பணிகளில் மொழி பெயர்ப்பாளர் மற்றும் இன்டர்பிரடர் என்னும் 2 பிரிவுகள் உள்ளன. எழுத்து வடிவ மொழியின் பொருளை கூறுபவர் மொழி பெயர்ப்பாளர் என்றும், பேசப்படும் வார்த்தைகளின் பொருளை மொழி பெயர்த்துக் கூறுபவர் இன்டர்பிரடர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மொழிகளைப் பயில்வதன் நோக்கமே பன்மொழிச் சூழலில் சக்தி வாய்ந்த தகவல் பரிமாற்றம் செய்வதுதான். மொழி பெயர்ப்பாளர்கள் அறிக்கைகள், இணைய தளங்கள், வழிகாட்டிகள், புத்தகங்கள், திரைக்கதை ஆகியவற்றுடனும் இன்டர்பிரடர்கள் கருத்தரங்கம், வியாபார ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களிலும் செயல்புரிகிறார்கள். வாய்ப்புகள் இன்று ஒவ்வொரு நாடும் பிற நாட்டுடன் வாணிப ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் நல்ல உறவுகளைக் கொண்டிருக்க வேண்டிய சூழலுக்கு மாறிவருகின்றன. தொழில் நிறுவனங்களும் பாதுகாக்கப்பட்ட தேசிய சந்தைகளை தாண்டி பிற நாடுகளிலும் இயங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன. இன்றைய தொழிலரங்கின் கட்டாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தன்மைகளின் காரணமாக பல நாடுகளில் பல கலாசார மற்றும் மொழிச் சூழலில் இயங்கும் நிலையை நிறுவனங்கள் சந்திக் கின்றன. எனவே மொழியறிவு என்பது இன்றும் எதிர்காலத்திலும் வளமான வாய்ப்புகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. சட்ட திட்டங்களை மொழி மாற்றம் செய்வது, அரசு அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மொழி மாற்றம் செய்வது என்பதில் துவங்கி சுற்றுலா வழிகாட்டி, நிறுவன அறிக்கை, காப்புரிமம், அறிவியல் வெளியீடு, விளம்பரம், கல்வி ஏடுகள், மொழியியல் வெளியீடுகள் என்று பல்வேறு விதமான பணிகள் உள்ளன. மொழி பெயர்ப்பாளர் மற்றும் இன்டர்பிரடராக பணி புரிபவர்களுக்கு மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் வாய்ப்புகள் இருப்பதுடன், பணி நேரமும் இலகுத் தன்மையுடையதாக இருக்கும். முழுநேர அல்லது பகுதி நேரப் பணிகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஐ.டி., மருந்தியல், வைரத் தொழில் மற்றும் ஆட்டோமொபைல் துறை போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய பிரிவுகளில் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. திரைப்படத் துறையில் மொழி பெயர்ப்பு (சப் டைட்டில்கள்), டாகுமெண்டரி மற்றும் திரைப்படங்கள், கால் சென்டர் போன்ற இடங்களில் இன்டர்பிரடர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறுகிய காலத்திற்கு சுற்றுலா கைடு, மொழி வல்லுனர் போன்ற வாய்ப்புகளையும் பெறலாம். சில திரைப்படங்களுக்கு பின்னணியில் டப்பிங் பேசும் வாய்ப்புகளும் உள்ளன. இவை எல்லாமே ஊதியம் என்பதைத் தாண்டி நமது கிரியேட்டிவ் திறன்களுக்கான வடிகாலாகவும் விளங்குகின்றன. திறன்களைப் பொறுத்தே ஊதியம் பொதுவாக இத் துறையில் பணி புரியும் போது நாம் பணி புரியும் நிறுவனத்தைப் பொறுத்து ஊதியங்கள் அமைகின்றன. சாதாரணமாக எழுத்து பூர்வமான மொழி பெயர்ப்புக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.60 முதல் ரூ.150ம் தொழில் நுட்ப மொழி பெயர்ப்புக்கு ரூ.250 முதல் 300 வரையிலும் பெறலாம். ஐ.நா., சபையின் மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, ஸ்பானிய, ரஷ்ய மொழிகளில் ஒன்றைப் படிப்பது உறுதியான வாய்ப்புகளைத் தரும். இம் மொழிகளில் திறன் பெற்றவருக்கு ஐ.நா., சபை தொடர்புடைய தரமான பணிகள் கிடைக்கின்றன. இதன் மூலம் மிகச் சிறப்பான ஊதியம் பெறலாம். எல்லைகளில்லாமல் மாறிவரும் இன்றைய உலகிற்கேற்ப பிற மொழிகளைக் கற்று திறன் பெறுபவர்களுக்கு ஊதியம் மட்டுமன்றி மன நிறைவுடன் கூடிய சவாலான பணிகள் கிடைப்பதே இத் துறையின் சிறப்பு.