/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
டோபல் - வெளிநாட்டுக் கல்விக்கு முதல் நுழைவாயில்
/
டோபல் - வெளிநாட்டுக் கல்விக்கு முதல் நுழைவாயில்
பிப் 21, 2009 12:00 AM
பிப் 21, 2009 12:00 AM
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பன்னாட்டுத் தன்மை கொண்ட மேலை நாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தாண்ட வேண்டிய முதல் தடை டோபல் தேர்வு தான்.
Test of English as a Foreign Language (TOEFL) என்பது இதன் விரிவாக்கம். ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாத நாடுகளிலுள்ளவர்கள் இத்தேர்வில் தகுதி பெறுவது அவசியம். பிளஸ் 1க்கு மேல் படிப்பவர் தான் இதை எழுத முடியும்.
இத் தேர்வானது உலகம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகிறது. பெரும்பாலும் கம்ப்யூட்டரில் எழுத வேண்டிய தேர்வாகவே இது நடத்தப்பட்டாலும் ஒரு சில இடங்களில் மட்டும் எழுத்துத் தேர்வாகவும் நடத்தப்படுகிறது.
டோபல் தேர்வை அமெரிக்காவிலுள்ள Educational Testing Service (E.T.S.) என்னும் அமைப்பு நடத்துகிறது. தேர்வுக்கான வினாக்களை வடிவமைப்பது, தேர்வை நடத்துவது, மதிப்பெண் சான்றிதழ் அனுப்புவது போன்ற பணிகளை இந்த அமைப்பே செயல்படுத்துகிறது. இத் தேர்வுகளை உலகின் பலபகுதிகளிலும் நடத்துவதற்காக பல்வேறு தேர்வு அமைப்புகளின் உதவியை இது பெறுகிது.
ஆங்கில மொழி பேசாத நாடுகளில் உள்ளவர்கள் சிலருக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தேர்வில் தகுதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படு
கிறது.
அவை
*உயர் பள்ளிப் படிப்புக்குப் பின் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஒரு நாட்டில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்திருப்பவர்கள்.
*ஆங்கில மொழி வாயிலாக குறைந்தது 2 ஆண்டு படிப்பு ஒன்றை மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் படித்திருப்பவர்கள்.
*அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலுள்ள கல்வி நிறுவனங்களில் வெற்றிகரமாக படித்து முடித்திருப்பவர்கள்
*பள்ளிப் படிப்பை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாடு ஒன்றில் குறைந்தது 2 ஆண்டு படித்திருப்பவர்கள்.
டோபல் தேர்வானது Internet Based Test (IBT), Computer Based Test (CBT), Paper Based Test (PBT) என 3 முறைகளில் நடத்தப்படுகிறது.
ஐ.பி.டி.,
இன்டர்நெட் மூலமான டோபல் தேர்வானது 2005 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வின் அறிமுகமானது பிற 2 முறைத் தேர்வுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் 2005ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேர்வு முறை 2006ம் ஆண்டு முதல் உலகின் பிற பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
இத்தேர்வு முறையின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேர்வுக்கு முன்பதிவு செய்வது முக்கியமாகிவிட்டது. இந்த முறைத் தேர்வானது 4 மணி நேர அவகாசத்தில் 4 பகுதிகளில் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக உள்ளது. மொழித் திறனைச் சோதிக்கும் விதத்தில் இதில் கேள்விகள் இடம் பெறுகின்றன.
பேச்சுத் திறனை சோதிக்கும் அம்சங்களும் இந்த முறையிலான தேர்வில் இடம் பெறுகிறது. கல்விப் புலத்தில் உபயோகிக்கப்படும் ஆங்கில மொழித் தன்மை குறித்த தேர்வு இது. தகவல் தொடர்புத் திறனில் ஒரு மாணவரின் திறன் என்ன என்பது இதில் பரிசோதிக்கப்படுகிறது. இத் தேர்வு முறையில் வாசிப்பது, கவனிப்பது, பேசுவது மற்றும் எழுதுவது ஆகிய 4 திறன்களும் பரிசோதிக்கப்படுகின்றன.
கல்வி சார்ந்த பகுதிகளை வாசிக்கும் திறன், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சூழலில் உபயோகிக்கப்படும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் திறன் ஆகியவை இதில் பரிசோதிக்கப்படுகின்றன.
சி.பி.டி.,
கம்ப்யூட்டர் வாயிலான இத்தேர்வு முறை செப்டம்பர் 30, 2006 முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இத் தேர்வானது கவனிக்கும் திறன், கட்டுரை எழுதுவது, இலக்கணம், படிக்கும் திறன் ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. தற்போது இது செயல்பாட்டில் இல்லை.
பி.பி.டி.,
பி.பி.டி., சி.பி.டி., தேர்வுகளுக்கான உள்கட்டமைப்பு இல்லாத நாடுகளில் பேப்பரில் எழுதும் தேர்வு முறையான பி.பி.டி., நடைமுறையில் உள்ளது. இத்தேர்வு முறையானது சி.பி.டி.,யை ஒத்தது என்றாலும் சிறிய அளவில் வேறுபாடுகள் உள்ளன.
கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பெண் அளவீடுகளில் சிறிய மாறுதல்கள் உள்ளன. 310 மதல் 677 மதிப்பெண் வரை இம் முறையில் உள்ளன. இதில் எழுதும் பகுதியின் மதிப்பெண்களை இறுதி மதிப்பெண்களுக்கு எடுத்துக் கொள்வது கிடையாது. மாறாக இதற்கு 0 முதல் 6 வரையிலான அளவீட்டில் மதிப்பெண் தரப்படுகிறது.
டோபல் தேர்வுகளின் நோக்கமானது ஆங்கிலம் பேசாத நாடுகளிலுள்ள மாணவர்களின் வட அமெரிக்க ஆங்கில மொழியை புரிந்து கொள்ளும் திறனை பரிசோதிப்பதாக உள்ளது.
டோபல் தேர்வு மதிப்பெண்ணை உலகெங்குமுள்ள 4300 கல்வி நிறுவனங்கள் அடிப்படைத் தேவையாக நிர்ணயித்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் இத்தேர்வு நடத்தப்படுவதால் இத்தேர்வுகளின் முக்கியத்துவம் அதிக அளவில் உணரப்படுகிறது.