/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மனித வள மேம்பாடு - துறை அறிமுகம்
/
மனித வள மேம்பாடு - துறை அறிமுகம்
மே 03, 2009 12:00 AM
மே 03, 2009 12:00 AM
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் முன்பெல்லாம் ஊழியர் மேலாண்மை என்ற துறை ஊதியம் மற்றும் இதர ஊழியர் தொடர்பான பயன்களுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்து வந்தது.
நிறுவனங்களில் அதிகரித்திட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, பணியில் செலவிடப்படும் நேரம் ஆகியவற்றின் காரணமாக இத் துறையின் செயல்பாடு போதுமானதாக இல்லை. பணியாளர் -தொழிலதிபர் இடையேயான உறவுகள், ஊழியர்களின் தேவை, உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை போன்றவற்றின் அடிப்படையில் முழுநேரம் செயல்படும் துறையாக இது மனித வள மேம்பாட்டுத் துறையாக உருமாறியது.
இத்துறையின் மூலமாக பணிபுரியும் ஊழியர்களின் முழுத் திறன் வெளிப்படுவதோடு நிறுவனத்துடன் சேர்ந்து அவர்களும் வளரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக இத்துறையின் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனித வள மேலாண்மைத் துறை தொழில் முறை உறவுகள் (இன்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ்) மற்றும் மனித வள மேம்பாடு (எச்.ஆர்.டி.,) என்ற இரு பிரிவுகளாக உள்ளது. உற்பத்தி நிறுவனங்களில் ஐ.ஆர்., துறையும் இதர நிறுவனங்களில் எச்.ஆர்.டி.,யும் அதிக பயன்பாட்டில் உள்ளன. தொழிற்சட்டம், தொழிலாளர் சட்டம், தொழிற்சங்க உறவுகள் போன்றவற்றை ஐ.ஆர்.பிரிவும் சேவை நிறுவனங்களில் எச்.ஆர்., பிரிவும் கவனித்துக் கொள்கின்றன.
நிறுவனத்தின் உற்பத்தித் திறனை தகுந்த பயிற்சிகளின் மூலமாகவும் சரியான ஊதிய விகிதங்களை நிர்ணயிப்பதன் மூலமாக அடையச் செய்யும் தலையாய பணியில் இத் துறையினர் ஈடுபடுகின்றனர். பெரிய நிறுவனங்களில் எச்.ஆர்., தனித் துறையாக ஒரு தலைவருடன் இணைந்து இயங்குகிறது. பணிக்கு ஆள் சேர்ப்பது, போட்டியைச் சமாளிப்பதற்கேற்ற தகுந்த பயிற்சியளிப்பது போன்ற பணிகளை இத்துறையினரே செய்கின்றனர். தொழில் முறை தொடர்பான உளவியலாளர்களும் இத் துறையில் இயங்குகின்றனர். சிறிய நிறுவனங்களில் தனி நபரால் இந்தத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
எச்.ஆர்., துறைக்கு தற்போதைய காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஐ.டி., பி.பி.ஓ., துறைகளின் அபரிமித வளர்ச்சி காரணமாக எச்.ஆர்., துறையானது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
எச்.ஆர்., நிறுவனங்களில் முதலில் அடிப்படை நிலையில் பணியில் அமர்ந்தாலும் கூட அனுபவத்தையும் திறமையையும் பொறுத்து மிக நல்ல பணி உயர்வு பெறும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. எச்.ஆர்., கன்சல்டன்சி நிறுவனங்களில் முதல் நிலையில் மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை சம்பளம் பெற முடிகிறது. மத்திய அளவிலான மேலாளர்கள் 16 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறலாம்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்னமும் அதிக ஊதிய விகிதங்களை எதிர்பார்க்கலாம். இத்துறையில் இன்று எண்ணற்ற நிறுவனங்கள் பட்ட மேற்படிப்புகளை தந்து வருகின்றன.