/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அதிகரிக்கும் வெளிநாட்டு கல்வி மோகம்
/
அதிகரிக்கும் வெளிநாட்டு கல்வி மோகம்
ஆக 08, 2009 12:00 AM
ஆக 08, 2009 12:00 AM
கடந்த சில ஆண்டுகளாகவே, சொந்த நாட்டிலிருந்து உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதைக் காண்கிறோம்.
மொத்தம் 28 லட்சம் பேர் வெளிநாட்டுக் கல்விக்காக இந்தியாவை விட்டு செல்கிறார்கள். வெளிநாடுகளுக்குக் கல்விக்காக செல்பவர்களில் 3ல் 2 பங்கினர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் என்னும் வரிசையிலுள்ள 6 நாடுகளைத் தான் படிப்புக்காக விரும்புகின்றனர். இதில் ஜெர்மனியும் ஜப்பானும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவது.
வெளிநாடுகளுக்குக் கல்விக்காக தங்கள் நாட்டினரை அனுப்புவதில் சீனா முதலிடத்திலும் இந்தியா 2ம் இடத்திலும் உள்ளன. ஆண்டுக்கு 4 லட்சத்து 21 ஆயிரம் பேரை சீனாவும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 300 பேரை அனுப்பி இந்தியாவும் இந்த இடங்களைப் பெற்றுள்ளன. கொரியாவிலிருந்து ஒரு லட்சத்து 5300 பேரும் ஜெர்மனியிலிருந்து 77 ஆயிரத்து 500 பேரும் ஜப்பானிலிருந்து 54 ஆயிரம் பேரும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த புள்ளி விபரங்கள் 2007ம் ஆண்டுக்கானவை.
யுனெஸ்கோவின் குளோபல் எஜூகேஷன் டைஜஸ்ட் 2009ம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி மாணவியரின் அளவு 46 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெளிநாடு செல்லும் மாணவர்களை பிராந்திய ரீதியாக பார்த்தால், மேற்கு ஐரோப்பாவிலிருந்து தான் கல்விக்காக 41 சதவீத மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். வட அமெரிக்காவிலிருந்து 24 சதவீதத்தினரும் கிழக்கு ஆசியா மற்றும் பிசிபிக் பிராந்தியத்திலிருந்து 18 சதவீதமும் செல்கின்றனர். தனி நாடாகப் பார்க்கும் போது அமெரிக்காவில் உயர் கல்வி படிப்பவர்களில் 21 சதவீதத்தினர் வெளிநாட்டினர் என்பது வியப்பூட்டும் தகவலாக இருக்கிறது.
வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக சென்ற போதும் தாங்கள் சார்ந்துள்ள பகுதிக்குள்ளேயே இருப்பதை மாணவர்கள் விரும்புவதை அறியலாம். மேற்கு ஐரோப்பாவிலிருந்து வெளிநாடு செல்லும் மாணவர்களில் 77 சதவீதத்தினர் அதே பகுதியில் உள்ள மற்றொரு இடத்தில் தான் கல்வியைத் தொடர விரும்புகின்றனர். ஆனால் தெற்கு மற்றும் மேற்காசிய பகுதியிலுள்ள மாணவர்களில் 1.3 சதவீதத்தினர் மட்டுமே தங்களது பகுதியிலேயே கல்வியைத் தொடர விரும்புகின்றனர். பிறர் தூர தேசங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றனர்.
முன்பு வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களில் 71 சதவீதத்தினர் அமெரிக்காவிற்குச் சென்றனர். இது தவிர பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் எஞ்சிய மாணவர்கள் சென்றனர். ஆனால் தற்போது ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் நமது மாணவர்களின் விருப்பமாக மாறியுள்ளன.
உயர் கல்வி பெற அமெரிக்கா தான் இலக்கு என்ற நீண்ட நாள் போக்கிலும் மாற்றம் தெரிகிறது. தற்போது கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகியவை உயர்கல்வியில் முக்கியமான நாடுகளாக மாறியுள்ளன. இவை தவிர, சீனா, தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் புதிய இலக்குகளாக மாறி வருகின்றன. வெளிநாடு சென்று படிக்கும் மாணவர் விகிதத்தில் இந்தியா 1.8 சதவீதத்தைப் பெற்றுள்ளது. 100 மாணவர்களில் ஒருவர் மட்டுமே இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்கின்றனர். ஆனால் ஒட்டு மொத்த எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா உலக அளவில் 2ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.