வெளிநாட்டில் படிக்க கவர்ச்சியான விளம்பரங்களை நம்பலாமா
வெளிநாட்டில் படிக்க கவர்ச்சியான விளம்பரங்களை நம்பலாமா
நவ 09, 2009 12:00 AM
நவ 09, 2009 12:00 AM
இந்திய மாணவர்கள் எப்போதும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களால் கவரப்படுகின்றனர். வெளிநாட்டில் படித்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புவோர் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் தங்களுடைய இளநிலை, முதுநிலை படிப்பிற்கு அட்மிஷனுக்காக வெளிநாடு செல்கின்றனர். இதற்காக அவர்கள் முன்னதாகவே தயாராகின்றனர். இந்தியாவில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக உயர்கல்விக்கு தங்களுடைய முக்கிய முதல் விருப்பமாக தேர்ந்தெடுப்பது இன்று வரை எம்.பி.பி.எஸ்., படிப்பைதான் . ஆனால் இதற்கான சீட் இந்தியாவில் குறைவுதான் ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ அதிகம்.
இந்நிலையில் நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ்., படிப்புகளை வழங்குகின்றன. அதில் சில
நிறுவனங்கள், மாணவர்களுக்கு அமெரிக்க மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்து விளம்பரம் செய்கின்றன. கோஸ்டா ரிகாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க கல்வி ஆலோசர்களில் சிலர் 6 ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்க அறிவுறுத்துகின்றனர்.
அவர்கள் பேச்சை நம்பி மாணவர்கள் அங்கு சென்று படிக்கின்றனர். படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் மருத்துவமனை பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்புகின்றனர். இதற்கு அமெரிக்கா செல்வதற்கான விசா தேவைப்படும். ஆகவே 4 ஆண்டு படிப்பு முடிந்தவுடன் விசா பெறுவதற்கு இந்தியா வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு விசா கிடைக்கும் என்பதற்கான எந்தவித உத்தரவாதமும் கிடையாது. இந்திய மருத்துவக்கழகமும் இந்த 4 ஆண்டு படிப்பை அங்கீகரிப்பதில்லை. இதனால் மாணவர்களின் கடின உழைப்பு, செலவழித்த பணம் அனைத்தும் வீணாகிறது, இந்த மாணவர்களால் இந்தியாவில் டாக்டர்களாக பயிற்சி கூட மேற்கொள்ள முடிவதில்லை. இதே நிலைமை தான் மொரிஷியஸ், வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுகிறது.
எம்.பி.ஏ., படிப்பை அமெரிக்காவில் உள்ள மேலாண்மை பள்ளிகளில் படிக்க விரும்புவோரும் கவனமுடன் இருக்க வேண்டும். இதுபோன்று அவர்களும் ஏமாறும் வாய்ப்புள்ளது. அமெரிக்கா செல்வதற்கு மாணவர் விசா பெறுவதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளது. இதைப் பயன்படுத்தி சில தரகர்கள் விசா மற்றும் அட்மிஷன் வாங்கி தருகிறோம் என்று உறுதி அளிக்கின்றனர் அதற்காக பணமும் வாங்கி கொள்கின்றனர். ஆனால் விசா கிடைப்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இதுபோன்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேராமல் தடுப்பதற்கான
ஆலோசனை வெப்சைட்டை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடலாம்.
ரூ.6 ஆயிரம் கோடி:
ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தங்களுடைய பல்கலை கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். ஏறத்தாழ 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தற்போது வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்கின்றனர்.
