ஜன 05, 2010 12:00 AM
ஜன 05, 2010 12:00 AM
கிராம பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்திடும் முயற்சிகளில் ஒன்றாக மத்திய அரசு குறைவான காலத்தில் மருத்துவ படிப்பை முடிக்கும் வாய்ப்பை ஊரக இளைஞர்களுக்குத் தரவுள்ளது.
இந்த வாய்ப்பை ஊரக இளைஞர்கள் மட்டுமே பெறுவதாக மத்திய அரசு திட்டமிடுகிறது. எத்தனையோ ஊக்கத் திட்டங்களை அளித்த போதும், நமது டாக்டர்கள் ஊரகப் பகுதிகளில் சேவை செய்ய தயக்கம் காட்டுவது சாதாரணமான ஒன்று தான். எனவே மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்னும் மத்திய மருத்துவக் கல்விக்கான அமைப்புடன் இணைந்து ஊரகப் பகுதியிலுள்ள மாணவர்கள் மூன்றரை ஆண்டுகளிலேயே எம்.பி.பி.எஸ்., படிப்பை முடிக்கும் வாய்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான மருத்துவக் கல்லூரிகள் ஊரகப் பகுதிகளிலேயே பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ளன.
பி.ஆர்.எம்.எஸ்., என்னும் இத்திட்டமானது ‘Bachelor of Rural Medicine and Surgery‘ என பெயரிடப்படவுள்ளது. சமுதாய உடல்நல வசதி என்னும் முதல் கட்டமாகவும் உட்கோட்ட மருத்துவமனைகள் என்பது 2வது கட்டமாகவும் இந்தப் படிப்பானது தரப்படும். முதல் கட்டமானது ஒன்றரை ஆண்டுகளிலும் 2வது கட்டமானது 2 ஆண்டுகளாகவும் நடத்தப்படும்.
ஒவ்வொரு ஊரக மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் 50 பேர் படிப்புக்காக சேர்த்துக் கொள்ளப்படுவர். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான சேர்க்கை போலவே இதற்கும் ஒருவர் பிளஸ் 2ல் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும். 10 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை இல்லாத பகுதியைச் சேர்ந்தவராக இந்த மாணவர்கள் அடையாளம் காணப்படுவர். இந்த தேர்வு முறைகளை மாநிலங்களின் மருத்துவக் கல்வி அமைப்புகள் நடத்தவுள்ளன.
2009ம் ஆண்டுக்கான தேசிய ஊரக உடல்நலத் திட்டத்தின் இலக்குகளை எட்டுவதற்கான ஒரே வழி இது தான் என மத்திய அரசு நம்புவதே தற்போதைய புதிய திட்டத்திற்கான காரணமாகும்.
