மார் 31, 2010 12:00 AM
மார் 31, 2010 12:00 AM
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து புதிதாக 5 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் உருவாகிறார்கள்.
ஆனால் போதுமான திறனின்மை காரணமாக இவர்களில் வெகு குறைந்த சதவீதத்தினர் மட்டுமே பணிபுரியத் தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். பொறியியல் பட்டம் பெறுபவர்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே உடனடியாகப் பணிபுரியும் திறன் பெற்றிருப்பதாக நாஸ்காம் நிறுவனம் கூறுகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களின் தேவைக்குத் தகுந்த திறமைகளுக்கும் இன்றையக் கல்வியின் தரத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதாக தெரிவிக்கிறது.
பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் இன்றைய தொழில்நுட்ப உலகிற்குத் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்கத் தவறுவதாகவும் நாஸ்காம் குறை கூறியுள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்கள் பயிற்சிக்கான நேரத்தில் அதிக நேரத்தையும், பணத்தையும் செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றன.
இந்தக் கருத்தை ஒட்டி இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கல்லூரிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாடப் புலங்கள் நல்ல திறனாளர்களை உருவாக்கும் விதத்தில் மாற்றப்பட வேண்டும் என்று இவர் கூறுகிறார். நிறுவனங்களின் தேவையை உணர்ந்து அமல்படுத்தப்படும் பாடமுறையை இவர் வற்புறுத்துகிறார். இன்போசிஸ் நிறுவனம் பணிக்கு ஆள் எடுக்கும் முன் பல்வேறு நிலைகளில் தேர்வு நடத்தும் போதும் இங்கு தேர்ந்தெடுக்கப்படும் புதியவர்களுக்கு பயிற்சி மற்றும் மறுபயிற்சிக்கு அதிக நேரம் செலவிடவேண்டியிருப்பதாகவும் இவர் கூறியுள்ளார்.
டி.சி.எஸ்., எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் புதிதாகத் தேர்ச்சி பெற்று பணியில் சேர்பவர்களுக்கான பயிற்சிக் காலம் கடந்த ஆண்டு 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் புதிதாகப் பணியில் அமர்பவர்களைப் பயிற்றுவிக்க ஏராளமான நிதியை ஒதுக்க வேண்டி உள்ளதாகவும், ஒரு தனி பணியாளரைப் பொறுத்த மட்டில் கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் செலவிட வேண்டியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விப்ரோ நிறுவனத்திலும் இதே நிலைதான். இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் 0.65 சதவிகிதம் புதிதாகப் பணியில் சேர்பவர்களைப் பயிற்றுவிக்க செலவாகிறது.இந்த அடிப்படையிலேயே நாஸ்காம் நிறுவனம் பொறியியல் படிப்பவர்களுக்குத் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. துறை சார்ந்த நுட்பம், சாப்ட் ஸ்கில்ஸ் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய நிலை இருப்பதை நாஸ்காம் வலியுறுத்துகிறது. நமது கல்வி முறையைப் பொறுத்த மட்டில் பாடப் பகுதிகளும் சரி, அவை வழங்கப்படும் விதமும் சரி, இரண்டுமே போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை என்று நாஸ்காம் கருதுகிறது.
