தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இலவச, கட்டாயக் கல்வி குழந்தைகளின் உரிமை

இலவச, கட்டாயக் கல்வி குழந்தைகளின் உரிமை

இலவச, கட்டாயக் கல்வி குழந்தைகளின் உரிமை


ஏப் 10, 2010 12:00 AM

ஏப் 10, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 10, 2010 12:00 AM ஏப் 10, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

14

வயது வரையான குழந்தைகளுக்கு, ஏப்ரல் 1 முதல், கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் அமலாகியுள்ளது. 1993ம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்துக்கு எதிரான உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்கது.

இந்தியாவின் குடிமக்களுக்கு கல்வி ஓர் அடிப்படை உரிமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு இந்த உரிமையை வழங்குகிறது.... இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது முடியும் வரை கல்வி ஓர் அடிப்படை உரிமையாகும்.... என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பிறகு, முகிராம் சைக்கியா என்ற கல்வியாளர் தலைமையில் அரசு அமைத்த குழு இலவச கல்வியினை வரையறை செய்தது. இலவச கல்வி என்பது கல்விக் கட்டணமோ, எந்த விதமான கட்டணமோ இல்லாத கல்வி மட்டுமல்ல, பாட நூல்கள், எழுது பொருட்கள், சீருடை, கற்றல் கருவிகள் உள்ளிட்டதே இலவச கல்வி என்று அக்குழு கூறியது.

சட்டவரைவாக 1998ம் ஆண்டு தொடங்கிய இம்முயற்சி பல்வேறு தாமதங்களுக்கும் பிறகு, 2009ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ""இலவச, கட்டாயக் கல்வி குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009 '' என்ற பெயரில் பார்லிமென்டில் ஏற்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது.

இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட ஏழு மாத தாமதத்திற்குக் காரணம், தேவைப்படும் நிதி ஆதாரங்களை வழங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு விகிதம் தொடர்பான கருத்து வேறுபாடே ஆகும். தற்போது, மத்திய அரசு 65 சதவீதம், மாநில அரசு 35 சதவீதம் என்ற விகிதத்தில் செலவினங்களைப் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டம் இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதனை ஒரு தொடக்கமாகக் கொள்ள வேண்டும். ஆரம்பக் கல்விதான்

(1 முதல் 8ம் வகுப்பு வரை) இப்போது ஒரு உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், கல்விக்கான உரிமை பள்ளிக் கல்வி முழுமைக்கும் (1 முதல் 12ம் வகுப்பு வரை) விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

* ஆரம்பக் கல்வி ( 1 8 வகுப்புகள் ) முடிக்கும் வரை, தன் வீட்டுக்கு அருகாமையிலுள்ள பள்ளியில் இலவச, கட்டாயக் கல்வி பெறுவது, 6 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு குழந்தையின் உரிமையாகும்.

* ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து பயின்று அதனை முடிக்கும்வரை, எந்தவிதமான கட்டணமோ அல்லது செலவோ ஒரு குழந்தை செய்யத் தேவையில்லை.

* இதுவரை எந்தப் பள்ளியிலும் சேராத அல்லது பள்ளியில் சேர்ந்து, ஆனால் ஆரம்பக் கல்வியை முடிக்க இயலாத 6 வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தை அதன் வயதுக்குப் பொருத்தமான வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

* இச்சட்டத்தின் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசும், உள்ளாட்சி அமைப்புகளும், இச்சட்டம் நடைமுறைக்கு வந்த மூன்றாண்டு காலத்திற்குள், அருகில் பள்ளிக்கூடம் இல்லாத பகுதிகளில், ஒரு பள்ளிக்கூடத்தினை ஏற்படுத்த வேண்டும்.

* இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி வழங்குவதில் மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.

* மத்திய அரசு தேசிய கலைத் திட்டக் கூட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.

* ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான தரக்கட்டுப் பாட்டினை மத்திய அரசு உருவாக்கி, நடை முறைப்படுத்த வேண்டும்.

* புதுமுறைகளைக் காணுதல், ஆராய்ச்சிகள், திட்டமிடுதல், திறன் மேம்பாடு போன்றவற்றில் மாநில அரசுகளுக்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் நிதி ஆதாரத்தையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச, கட்டாயக் கல்வி அளிப்பது அரசின் கடமையாகும். 6 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு குழந்தையையும் பள்ளியில் கட்டாயமாகச் சேர்த்து பள்ளிக்கு ஒழுங்காக வரச் செய்து, ஆரம்பக் கல்வியை முடிக்கச் செய்வது அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும்.

* தரமான கல்வியை குழந்தைகள் பெறச் செய்ய அரசு உறுதி செய்தல் வேண்டும்.

* தன் குழந்தையை அருகாமையிலுள்ள பள்ளியில் சேர்த்து, ஆரம்பக்கல்வி பெறச் செய்வது ஒவ்வொரு பெற்றோருடைய கடமையாகும்.

* 6 வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்கவும், அவர்களுக்கு மழலையர் கல்வியினை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

* அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் நலிந்த பிரிவினரின் குழந்தைகளை, வகுப்பு மாணவர்களில் 25 சதவீதம் அளவிற்கு எல்.கே.ஜி. / முதல் வகுப்பில் (பள்ளி எந்த வகுப்பிலிருந்து ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில்) சேர்த்து அவர்களுக்கு இலவச, கட்டாய ஆரம்பக் கல்வியை வழங்க வேண்டும். இக்குழந்தைகளின் கல்விச் செலவை அரசு இப்பள்ளிகளுக்கு அளிக்கும்.

* எந்தவொரு பள்ளியும் குழந்தைகளைச் சேர்க்கும்பொழுது, நன்கொடை வசூலிப்பதோ அல்லது மாணவர் சேர்க்கைக்காக குழந்தை அல்லது பெற்றோரை நேர்காணல் செய்து தேர்வு செய்வதோ கூடாது.

* வயதுக்கான சான்று இல்லாத காரணத்திற்காக எந்தவொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது.

* பள்ளியில் சேர்க்கப்பட்ட எந்தவொரு குழந்தையையும் ஆரம்பக்கல்வி முடிக்கும் வரை, ஒரே வகுப்பில் மீண்டும் படிக்க வைப்பதோ, பள்ளியை விட்டு வெளியேற்றுவதோ கூடாது.

* எந்தவொரு குழந்தைக்கும் உடல் சார்ந்த தண்டனை அளிப்பதோ அல்லது மனம் சார்ந்த தொல்லை கொடுப்பதோ கூடாது.

* இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு பள்ளிகளைத் தவிர வேறு எந்த பள்ளியும் அங்கீகாரம் பெறாமல் தொடங்கப்படவோ, தொடர்ந்து நடத்தப்படவோ கூடாது.

ஆசிரியர்கள்

* பள்ளிக்கு ஒழுங்காகவும் காலத்தோடும் வருதல் வேண்டும்.

* குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்.

* ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனை மதிப்பிட்டு, அதற் கேற்றாற் போல், கூடுதலாக கற்பித்தல் வேண்டும்.

* தனிமுறைக் கற்பித்தலில் ஈடுபடுதல் கூடாது.

* ஆசிரியர்களின் குறைகள் ஏதேனுமிருந்தால், அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

* மக்கள் தொகை கணக்கெடுப்பு, இயற்கைச் சீற்றம் தொடர்பான பணிகள், தேர்தல் தொடர்பான பணிகள் தவிர வேறெந்த கல்விச்சாலை பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் படக்கூடாது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us