செம்மொழி மாநாட்டில் மாணவர்களுக்கான விக்கிப்பீடியா போட்டி
செம்மொழி மாநாட்டில் மாணவர்களுக்கான விக்கிப்பீடியா போட்டி
ஏப் 21, 2010 12:00 AM
ஏப் 21, 2010 12:00 AM
ஜுன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து தமிழக அரசுடன், தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக ""விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்'' என்ற பெயரில் கட்டுரைப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியில், கலை, அறிவியல் , இன்ஜினியரிங், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குனர் மருத்துவம்(பிசியோ தெரபி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கு பெறலாம். கட்டுரைகளை மதிப்பீடு செய்வதற்காக பல துறைகளில் உயர் தகுதிகள் கொண்ட நடுவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.
போட்டி விதிமுறைகள்:
1. தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமைய வேண்டும். இனம், சமயம், அரசியல், தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பை தூண்டாதவாறு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
2. தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை (இரண்டு அ4 தாள் பக்க அளவு) அமைய வேண்டும்.
3. தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (UNICODE) அமைய வேண்டும்.
4. தகவல் பக்கங்களை ஏப்ரல் 30, 2010க்குள் நிறைவு செய்து
http://tamilint2010.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக அனுப்ப வேண்டும்.
5. தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சேரும்.
6. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.
7. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
பரிசுகள்:
இப்போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு மடிக் கணினி, எண் அலகு ஒளிப்படக்கருவி (Digital Camera), நீள் இசைக்கருவி (MP3 player) உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு:
இப்போட்டி தொடர்பான விவரங்களுக்கு, http://ta.wikipedia.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
